ஆன்பு தோழர்களே நான் நேற்று எழுதிய பதிவில் பல தோழர்களின் விமர்சனங்களை கணக்கில் கொண்டு இந்தப் பதிவை தொடர்கிறேன். எனது நோக்கம் இதனை ஒரு தொடராக எழுத நினைப்பதே அதற்க்கு உங்களின் சரியான விமர்சனமும் தவறுகளை சுட்டிக் காட்டி தொடர் வளர்தெடுக்க உதவும் படி கேட்டுக் கொள்கிறேன் தோழர்களே.ஐந்து கண்பார்வையற்றவர்கள் யானை பார்த்த கதையை நாம் சிறு வயதிற் கேட்டிருப்போம். ஒவ்வொரு கண்பார்வையற்றவரும் யானையின் ஒரு பகுதியை மட்டுமே தொட்டுத் தடவி ஆராய்ந்து, அப்பகுதியையே யானையின் முழுமையெனக் கருதித் தான் தொட்ட பகுதி தானறிந்த எப்பொருளை ஒத்திருந்ததோ அப்பொருளையே யானையும் ஒத்திருக்கும் என்ற முடிவுக்கு வந்து, மற்றவர்களுடன் கடுமையாக வாதிட்டதைப் பற்றிச் சிரித்திருப்போம். நமது குறிக்கோள் ஒடுக்கும் கூட்டதிடத்திலிருந்து ஒடுக்கப் பட்ட மக்களின் விடுதலையே அப்படியெனில் நமது முரணா நிலையை ஏன் இதனோடு ஒப்பிட முடியாதோ?எந்தவொரு விஷயத்தையும் பல்வேறு கோணங்களினின்றும் பார்க்கவும் முழுமையையும் பகுதியையும் ஒன்றுபடுத்தியும் வேறுபடுத்தியும் ஆராய தவறும்போது, நமது பார்வை குறைபாடுடையதாகி நமது முடிவுகள் முழுமையற்றனவாகின்றன அன்றோ?.மனிதனது பல்வேறு தேவைகளையும் நிறைவு செய்யவும் மனித வாழ்வைச் செழுமைப்படுத்தவும் தேவைப்படும் அறிவு மனித சமுதாயத்தினதும் சமுதாய நடைமுறையினதும் இணைந்தே வளர்ச்சி பெறுகிறது. ஐந்து கண்பார்வையற்றவர்கள் தத்தமது நேரடி அனுபவங்கட்கு அப்பால் அறிவைத் தேட மறுத்ததாலும் அந்த அனுபவங்களை முழுமையாகக் கருதிப் பொருளின் பிற அம்சங்களைப் புறக்கணித்ததாலும் அவர்களது நடைமுறை குறைபாடானதே. இயங்கியல் சாராத வரட்டுத்தனமான பொருள்முதல்வாதமும் யானை பார்த்த கண்பார்வையற்றவர்களின் நிலையில்தான் உள்ளது.ஐந்து கண்பார்வையற்றவர்கள் யானையின் ஒரு பகுதியை முழு யானையாகவும், தத்தம் குறுகிய அனுபவங்களை முழுமையானவை எனக் கருதித் தவறு செய்தார்களாயினும், அவர்கள் சொன்னவற்றில் உண்மையின் ஒரு பகுதி இருந்தது. அவர்களது விளக்கத்தின் பல்வேறு தவறுகளுக்கு காரணம் அவர்களது நடைமுறையின் போதாமையுடனும் தம் அனுபவத்தை அறிவாக விளக்கும் முறையின் தவறான புரிதலே. ஐந்து கண்பார்வையற்றவர்களைப் பற்றி அறிவீர்கள். ஆறாவதுக்கண்பார்வையற்றவனைப் பற்றி அறிவீர்களா? ஆறாவது கண்பார்வையற்றவன் வேறு வகையானவன். அவனுக்கு யானையைப் பற்றி அறிவும் அதனைவிட யானயைப் பற்றித் தான் ஏற்கெனவே கொண்டிருக்கும் கருத்தைப் பலப்படுத்தும் நோக்கமே முக்கியமானது.மார்க்சியம் பற்றியும் மார்க்சிய இயக்கங்கள் பற்றியும் அதனை செழுமைப் படுத்துகிறேன் என்று இன்று பல்வேறு முறையில் மார்க்சியமல்லாத போக்குகளை மார்க்சியத்தின் பெயரில் மார்க்சியத்தை திரிக்கும் வேலை ஆறாவது கண்பார்வையற்றவனுடையவை. வர்க்க சமுதாயத்தில் பல்வேறு சமுதாய முரண்பாடுகளிருந்தபோதும் வர்க்க முரண்பாடே முதன்மையானது. ஆயினும் அது எப்போதுமே நேரடியாகத் தன் முக்கியத்துவத்தை வெளிப்படுத்திக் கொள்வதில்லை. பிரதான முரண்பாடு தீர்க்கப்படாத நிலைமைகளிற்கூட இரண்டாம்பட்சமான முரண்பாடுகள் உக்கிரமடையலாம். அதனால் பிரதான முரண்பாடு இல்லாமற் போவதில்லை; அதன் முக்கியத்துவம் குறைந்து விடுவதில்லை சமுதாய முரண்பாடுகளின் முக்கியத்துவத்தை, சமுதாய முழுமையின் அடிப்படையில் வரலாற்று ரீதியாக மதிப்பிட இயலுமே அல்லாமல், வரையரைக்குட்பட்ட நிலைமைகளின் கீழும் குறுகிய கால அளவிலுமல்ல.மார்க்ஸியத்தைக் கடந்து செல்லுகிறதாகவும் மார்க்ஸியம் தொடத் தவறியவற்றை மார்க்ஸியத்திற்கு வழங்குவதாகவும் பாசாங்கு செய்வோர் பலர் சிலர் எங்கேயோ எவரோ சொன்னதன் உண்மையை ஆராயாமலே கருத்துகளை இரவல் வாங்கித் தமக்கு விளங்காத மார்க்ஸியத்துக்கு மருத்துவம் செய்ய முற்படுவார்கள் சிலர் மார்க்ஸிய நடைமுறையின் பிரச்சனைகளை சமுதாய நடைமுறையின் ஆராயாமல் கருத்து முதல்வாதத்திற்குள் தீர்வுகளைத் தேடுவார்கள். வேறு சிலர் அதிதீவிர நிலைப்பாடுகளை மேற்கொள்வார்கள் அல்லது நவீன மார்க்சியவாதிகள் என்ற போர்வையுடன் உலவுவார்கள். எவ்வாறாயினும் அவர்களது நோக்கம் மார்க்சியத்தை அதன் ஆசாங்களை தூற்றிப் பழிப்பதே பணியாக கொண்டுள்ள அந்த ஆறாம் நபரை இனம் காண வேண்டிய அவசியம் உள்ளது உலகின் ஒடுக்கப்பட்ட மக்களது பாட்டாளி வர்க்கத்தினதும் போராட்டங்களைப் பிளவுப்படுத்திப் பலவீனப்படுத்தும் தேவை அவர்கட்கு உண்டு. அந்தத் தேவையை நிறைவு செய்ய மார்க்சியம் பற்றிய ஆராய்வு என்ற பேரில் மார்க்சிய விரோதப் பொய்ப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன; மார்க்சியத்தைத் வளர்த்தெடுக்கிறோம் என்ற பேரில் மார்க்சிய இலக்கை திசை திருப்பும் வேலையை ஆறாவது கண்பார்வையற்றவன் பணியாக உள்ளது.இதனை பற்றி விரிவாக ஆழமாக விவாதிக்க தொடர்ந்து எழுத நினைக்கிறேன் தோழர்களே.தோடரும்….(படம் உதவி தோழர் மா.செ.சரவணன் அவர்களுக்கு நன்றி).