இந்தியாவில் விவசாயின் நிலை-1 & 2

2010-ம் ஆண்டில் அவுரங்காபாத் நகரைச் சார்ந்த வர்த்தகர்களின் சிறிய குழு ஒன்று ஒரே நாளில் 150 மெர்சிடஸ் பென்ஸ் கார் வாங்கியது கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும், லிம்கா சாதனைப் பட்டியலிலும் இடம் பெற்றது. 150 மெர்சிடஸ் பென்ஸ் கார்களை வாங்கிட இவர்கள் செல வழித்தது 66 கோடி ரூபாய்கள் ஆகும். இதில் 44 கோடி ரூபாய் தேசியமயமாக்கப்பட்ட ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவிடமிருந்து 7 சதவீத வட்டிக்கு பெறப்பட்ட கடன் தொகையாகும்.விவசாயி ஒருவர் டிராக்டர் ஒன்றினை வாங்கிட எத்தனை சதவீத வட்டிக்கு கடன் தொகை கிடைக்கும் என்ற கேள்வியை இவ்வங்கியின் கிளை மேலாளரைக் கேட்ட போது அவர் சொன்ன பதில் 14 சதவீத வட்டி என்பதாகும் ஆடம்பரப் பொருளான மெர்சிடஸ் காருக்கு 7 சதவீத வட்டியில் கடன், அதே நேரத்தில் உற்பத்திக்கு பயன்படுகிற டிராக்டர் வாங்கிட 14 சதவீத வட்டியில் கடன் என்பது வேடிக்கையாக இருக்கிறது. சிறு விவசாயிகளின்பால் இந்திய அரசானது எத்தகைய பகைமை உணர்வைக் கொண்டிருக்கிறது என்பதனை இது காட்டுகிறது. எத்தகைய பாரபட்சமான முறையில் சிறு விவசாயிகள் நடத்தப்படுகிறார்கள் என்பதனை இது விளக்குகிறது.விவசாயக் கடன் பற்றி இவர்கள் அளிக்கும் புதிய வியாக்கியானத்தின் படி, முகேஷ் அம்பானி சென்னை அண்ணா சாலையில் ஓர் குளிர்பதனக் கிடங்கினைத் திறக்கிறார் என்றால் அதற்கு அவருக்கு 4 சதவீத வட்டியில் விவசாயக் கடன் கிடைக்கும். ஏனென்றால், குளிர்பதனக் கிடங்கில் காய்கறிகளை பாதுகாப்பது என்பது விவசாயம் ஆகும்.ஆனால், இந்த காய்கறிகளை விளைவிக்கும் விவசாயி அவனுக்குத் தேவையான கடன் தொகை கிடைக்காததால் தற்கொலை செய்து கொள்ளும் அவல நிலை நிலவுகிறது.இவைதான் நமது நாட்டின் நிலை

இந்திய விவசாயிகள் நிலை-2+++++++++++++++++++++++இந்திய விவசாய நெருக்கடியை ஒரு வரியில் சொல்வதானால், இந்திய விவசாயத்தை சிறு விவசாயிகளின் கைகளிலிருந்து பறித்து பகாசுர கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைத்திட ஆட்சியாளர்கள் எடுத்துள்ள முடிவே நெருக்கடியின் உள்ளடக்கம் எனக் குறிப்பிடலாம். இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரி ஒருவர் மகாராஷ்டிர மாநிலத்தில் 2010-ம் ஆண்டில் அனைத்து வங்கிகளாலும் விநியோகிக்கப்பட்டுள்ள கடன் குறித்து ஆய்வு செய்துள்ளார். இந்த ஆய்வின் படி, விநியோகிக்கப்பட்ட மொத்த கடனில் 53 சதம் மும்பை நகரின் மெட்ரோ கிளைகளின் வாயிலாக விநியோகிக்கப்பட்டுள்ளன. வெறும் 38 சதம் மட்டுமே அம்மாநிலத்தின் ஒட்டு மொத்த கிராமப்புற பகுதிகளில் உள்ள வங்கிக் கிளைகளின் வாயிலாக விநியோகிக்கப்பட்டுள்ளன.மும்பை பெருநகரில் விவசாயிகள் எங்குள்ளனர் என்போரே? மும்பை நகரில் வசித்து வரும் முகேஷ் அம்பானியும் அமிதாப் பச்சனும் தான் நவீன விவசாயிகள் என்கிறார் மோடி. இன்றைக்கு நிதியாதாரம் என்பது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மடைமாற்றம் செய்யப்படுவதால் விவசாயத் துறையிலான முதலீடு என்பது கடுமையாக வீழ்ச்சியடைந்து வருகிறது.மேற்கு வங்க மாநிலத்தின் சிங்கூரிலிருந்து தனது நானோ கார் தொழிற்சாலையை டாட்டா நிறுவனமானது குஜராத்திற்கு இடமாற்றம் செய்த போது 29000 கோடி ரூபாயை குஜராத் மாநில அரசு அந்நிறுவனத்திற்கு அளித்தது. கேட்பவர் வியந்திடும் வகையிலான மலிவு விலையில் நிலம் இவர்களுக்கு குத்தகைக்கு கொடுக்கப்பட்டது. சொல்லப்போனால் அனைத்தும் அவர்களுக்கு அநேகமாக இலவசமாகவே கிடைத்தது. ஆக, இன்றைக்கு முதலீடு என்பது பெருமளவில் விவசாயத் துறையிலிருந்து இந்தியப் பொருளாதாரத்தின் இதர துறைகளுக்கு மடைமாற்றம் செய்யப்பட்டு வருகிறதுநாடு தழுவிய அளவில் 2010-ம் ஆண்டு வரை விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள கடன் குறித்த ஆய்வு ஒன்றினை டாட்டா இன்ஸ்டிடியூட் ஆப் சோசியல் சயின்சைச் சார்ந்த பேராசிரியர் ராம்குமார் ஆய்வு செய்துள்ளார். இந்த ஆய்வின்படி, சிறு விவசாயிகளுக்கு அளிக்கப்படும் ரூ.5000 முதல் ரூ.2 லட்சம் வரையிலான கடன்களின் எண்ணிக்கை மிக வேகமாக வீழ்ச்சியடைந்து வருகிறது. 2000 முதல் 2008 வரையிலான ஆண்டுகளில் இத்தகைய கடன்களின் எண்ணிக்கை 50 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.அதே நேரத்தில், 10 கோடி ரூபாய்க்கு மேல் அளிக்கப்படும் கடன்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. 10 கோடி, 25 கோடி என கடன் தொகை பெறும் விவசாயி யாரையேனும் உங்களுக்குத் தெரியுமா? அப்படி எந்த விவசாயியாவது உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ளாரா? அப்படியானால் இந்தக் கடன் தொகையெல்லாம் எங்கே போகிறது என்று பார்த்தால் அவையெல்லாம் விவசாயிகளைச் சென்றடைவதில்லை. மாறாக கார்ப்பரேட் நிறு வனங்களையே சென்றடைகின்றன. எல்லா வகையான கடன் தள்ளுபடி திட்டங்களும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் கிடைக்கின்றன


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *