இந்தியாவில் பொதுவுடைமை இயக்கம் – ஒரு கண்ணோட்டம் – 16 இராகுலன்
இந்தியாவில் பொதுவுடைமை இயக்கம் – ஒரு கண்ணோட்டம் – 16 இராகுலன்

இந்தியாவில் பொதுவுடைமை இயக்கம் – ஒரு கண்ணோட்டம் – 16 இராகுலன்

இந்நிலையில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் தோழர் எம்.கல்யாணசுந்தரம் பெண்ணாடத்தில் விவ சாயிகள் மாநாட்டை நடத்தினார். அம்மாநாட்டுக்காக அவர் பெண்ணாடம் வந்தபோது, நூற்றுக்கணக்கான மக்கள் அவரிடம், கலியபெருமாள் குடும்பத்தினர்க்குக் காவல் துறையினர் இழைத்த கொடுமைகளை எடுத்துக் கூறினர். காவல் துறையின் இக்கொடுமைகளுக்கு ஒரு முடிவு கட்டவேண்டும் என்று கோரினர்.

பெண்ணாடம் விவசாயிகள் மாநாட்டில் கல்யாண சுந்தரம் உரையாற்றிய போது, “தோழர் கலியபெருமாளின் தற்போதைய அரசியல் நடைமுறையில் எனக்குக் கருத்து வேறுபாடு இருந்தாலும், முப்பது ஆண்டுகளாக இப்பகுதி மக்களுக்குக் கலியபெருமாள் செய்த சேவை மறக்க முடியாத ஒன்று. மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட மனிதர் அவர். கலியபெருமாள் சட்டப்படிக் குற்றம் செய்தவராக இந்த அரசு கருதினால், சட்டத்தின்முன் நிறுத்தித் தண்டித்திருந்தாலும்கூடப் பரவாயில்லை.

இதற்கு மாறாக, கலியபெருமாள் வீட்டைப் பூட்டி முத்திரை வைத்து, அவருடைய பயிர்களை அழித்து, சொத்துக்களை ஏலமிட முயன்றது, மூன்று இளம் மகள்களைப் பாதுகாப்பே இல்லா மல் அல்லல்படுத்தியது, கலியபெருமாளின் கிராமத்திலுள்ள அனைத்து மக்களையும் அடித்துச் சித்திரவதை செய்தது, இவை அனைத்தும் மிருகத்தனமான செயல்களாகும்” என்று கூறிக் கண்டித்தார்.

இந்த அநீதிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தன்மையில், சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராம மக்கள், கலியபெருமாள் வீட்டின் முத்திரையை உடைத்து அவருடைய மகள்களை அந்த வீட்டில் குடியமர்த்த வேண் டும். மேலும் கலியபெருமாளின் வயலை உழுது பயிரிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இந்த உரிமை களை மீட்டெடுப்பதற்காக நீங்கள் நடத்தும் போராட்டத்தில் உங்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், உங்களைப் பாதுகாப்பது என் கடமை என்று கலியாண சுந்தரம் உறுதி யளித்தார். சௌந்தர சோழபுரத்தைச் சுற்றியுள்ள கிராம மக்கள் ஒன்றுதிரண்டு, திட்டமிட்டு, கலியபெருமாள் வயலில் பயிர் செய்தனர்.

1971 ஏப்பிரல் 30 அன்று குப்பம் கிராமத்தில் இரவில் ஒரு வீட்டில் கலியபெருமாள் உணவு உண்டு கொண்டிருந்த போது, சுற்றிவளைத்துக் கைது செய்தனர். ஆனால் காவல் துறையினர் கலியபெருமாளை, சூளைமேட்டில் கைத்துப் பாக்கியுடன் கைது செய்ததாகக் கூறி, சென்னை உயர்நீதி மன்றத்தில் முன்னிலைப்படுத்தி, சென்னை மத்திய சிறை யில் அடைத்தனர்.

கடலூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில், அய்யம்பெரு மாள் அழித்தொழிப்பு வழக்கில் கலியபெருமாளுக்கும், அவரது மூத்த மகன் வள்ளுவனுக்கும் மரண தண்டனையும், கலியபெருமாளின் துணைவியாரின் தமக்கை அனந்த நாயகி, இளையமகன் சோழ நம்பியார், தம்பி மாசிலாமணி, இராசமாணிக்கம், ஆறுமுகம் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. தண்டனையடைந்தவர்களை வேலூர், திருச்சி ஆகிய ஊர்களில் சிறையில் அடைத்தனர். கலியபெரு மாளையும் வள்ளுவனையும் திருச்சி சிறையில் அடைத்தனர்.

தஞ்சை மாவட்டம் முத்துத்தங்கப்பா அழித்தொழிப்பு வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட தியாகு என்கிற தியாகராசன், லெனின் என்கிற ரெங்கசாமி, குருமூர்த்தி ஆகி யோர் ஏற்கெனவே திருச்சி சிறையில் இருந்தார்கள்.

தங்களை அரசியல் கைதிகளாக நடத்த வேண்டும் என்று கோரி அவர் களால் நடத்தப்பட்ட போராட்டத்தில், கலியபெருமாள், வள்ளுவன், தியாகு, லெனின், குருமூர்த்தி ஆகியோர் சிறைக்காவலர் களால் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கப்பட்டனர். சிறைக் கூடமே இரத்தக் காடாயிற்று.

அரசியல் கட்சிகள் விடுதலை இயக்கம்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) சார்பில், “அரசியல் கைதிகள் விடுதலை இயக்கம்” என்ற வெளிப்படையான சனநாயக இயக்கத்தின் மூலம், சிறை களில் உள்ள நக்சல்பாரிகளின் விடுதலையை வலியுறுத்தினார்கள். அந்த இயக்கத்துக்குத் தருமபுரித் தோழர் பாலன் பொறுப்பேற்று மிகச் சிறப்பாக வழிநடத்தினார்.

தி.மு.க.வைத் தவிர, இதர அனைத்துக் கட்சிகளின் உள்ளூர் தலைவர்களும் கலந்துகொண்ட பெண்ணாடம் கூட்டத்தில் கலிய பெருமாள், வள்ளுவன் தூக்குத்தண்டனையை இரத்து செய்ய வலியுறுத்திப் பல தலைவர்களும் பேசினார்கள்.

மனித உரிமைக் கழகத்தின் தலைவர் சென்னை மேயர் கிருட்டிணமூர்த்தி தலைமையில், க. சுப்பு, கோவை ஈசுவரன், டாக்டர் விசயலட்சுமி, அறந்தை நாராயணன், ஜெகவீரபாண்டியன் ஆகியோர் கலியபெருமாளின் துணைவி யார் வாலாம்பாளையும் அழைத்துக் கொண்டு, தமிழக ஆளுநர் கே.கே. ஷாவைச் சந்தித்து, கலியபெருமாளுக்கு அளிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை இரத்து செய்யக் கோரி விண்ணப்பம் அளித்தனர்.

தூக்குத் தண்டனை பெற்றுத் திருச்சி சிறையில் கலிய பெருமாளுடன் இருந்த தோழர்கள் தியாகு, லெனின், குருமூர்த்தி ஆகியோர் 1973ஆம் ஆண்டின் தொடக்கத்தி லேயே கருணை மனு கொடுத்துவிட்டனர். ஆனால் கருணை மனு கொடுக்க, கலியபெருமாள் மறுத்துவிட்டார்.

எனவே அவருடைய மனைவி வாலாம்பாள் மேயர் கிருட்டிண மூர்த்தியை அணுகி, கலியபெருமாளின் நிலைப்பாட்டைக் கூறி, இதில் உதவுமாறு வேண்டினார். அதற்கு மேயர் கிருட்டிணமூர்த்தி, தில்லி சென்று குடியரசுத் தலைவர் வி.வி. கிரியைச் சந்தித்து, கலியபெருமாளின் தூக்குத்தண்டனை யைக் குறைக்க விண்ணப்பம் அளிப்பதாக வாலாம்பாளிடம் கூறினார்.

அவ்வாறே வி.வி. கிரியிடம் மேயர் கிருட்டிணமூர்த்தி விண்ணப்பம் அளித்தார். அந்த விண்ணப்பத்தில், “வெள்ளை யனை வெளியேற்ற பாராளுமன்றத்திலே வெடிகுண்டு வீசிய பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோர் அன்றைய ஆட்சி யாளர்களால் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்ட னர். ஆனால் அன்று முதலே இந்திய மக்கள் அவர்களை மாவீரர்களாகவும், தேச பக்தர்களாகவும் கொண்டாடி வருகின்றனர்.

இன்றைய அரசும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்தியா அந்நியரிடமிருந்து விடுதலை பெற்ற போதிலும், அந்நியச் சுரண்டலும், பெருமுதலாளிகளின் சுரண்டலும் மக்களின் வாழ்வைப் பறித்துக் கொண்டிருக்கின்றன. இதனால் ஒரு சிறு பிரிவினர் சொர்க்க வாழ்விலும் வெகு மக்கள் நரக வாழ்விலும் வாழும் நிலை இருக்கிறது. இது போன்ற கோரமான நிலை கலியபெருமாள் போன்றவர்களைத் தூண்டி, தீவிர வாதிகளாக்கி உள்ளது.

வெகுமக்களின் பிரச்சனைகள் தீர்க்கப் படும் வரையில், தீவிரவாதம் என்பது இந்தச் சமூகத்தில் எழுகின்ற நியாயமான உணர்வுதான் என உச்சநீதிமன்றமே தனது தீர்ப்பில் கூறியுள்ளது. எனவே கலியபெருமாளின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும்” என்று கோரப்பட் டிருந்தது.

இந்த விண்ணப்பத்தைப் படித்தபின், வி.வி. கிரி, கலிய பெருமாளின் மனைவி மூலம் ஒரு கருணை மனுவைக் கொடுத்துவிட்டு, இதற்கு ஆதரவாக வெகுமக்களிடம் கை யொப்பம் பெற்று அனுப்புமாறு மேயர் கிருட்டிணமூர்த்தியிடம் கூறினார்.

உடனே செயலில் இறங்கிய மேயர் கிருட்டிணமூர்த்தி, வாலாம்பாளிடமிருந்து மனுவைப் பெற்று அனுப்பிவிட்டு, தமிழகம் முழுவதும் இலட்சக்கணக்கான மக்களிடம் கையொப்பம் பெற்று தில்லிக்கு அனுப்பினார். இக்கையெழுத்து இயக்கத்திற்காகக் கலியபெருமாள் பிறந்த பெண்ணாடத்தில் பல்லாயிரம் பேர் கலந்துகொண்ட மாபெரும் பேரணி நடத்தப்பட்டது.

சனநாயக இயக்கங்களின் எழுச்சியால், மக்களிடையே அரசுக்கு எதிரான உணர்வுகள் வளர ஆரம்பித்துவிட்டதை உணர்ந்த அன்றைய முதல்வர் மு. கருணாநிதி, கலிய பெருமாளின் தூக்குத் தண்டனையை இரத்துச் செய்ய ஆளுநருக்குப் பரிந்துரைத்து முன்மொழிவு அனுப்பினார். அம்முன்மொழிவை ஏற்று ஆளுநர் 1973ஆம் ஆண்டு மே மாதம் கலியபெருமாளின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தார்.

ஆனால் கருணை மனு அளித்திருந்த தியாகு, லெனின், குருமூர்த்தி ஆகியோருடைய தூக்குத் தண்டனை அப்பொழுதும் இரத்துச் செய்யப்பட வில்லை. கலியபெருமாளின் தூக்குத் தண்டனை இரத்து செய்யப்பட்ட போதிலும் கலியபெருமாளும் அவரது குடும்பத்தினரும் பல்வேறு சிறைகளில் பலவகையான கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர்.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு

1981இல் கலியபெருமாளும் அவருடைய குடும்பத்தினர் ஏழு பேரும் தமிழகச் சிறைகளில் பல்வேறு கொடுமை களுக்கு ஆளாக்கப்படுவதைப் பத்திரிகைகளில் படித்தறிந்த பத்திரிகையாளர் கன்ஷியாம் பர்தேஷ் தில்லியிலிருந்து சென்னைக்கு வந்து பத்திரிகையாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களைச் சந்தித்து விவரங்களைத் தெரிந்து கொண்டனர்.

அதன்பின் எஸ்.வி. ராஜதுரையின் துணையுடன் பெண்ணாடத்தில் கலியபெருமாளின் துணைவியார் வாலாம்பாள், மகள்கள் தமிழரசி, கண்ணகி, அஞ்சுகம் ஆகியோரைச் சந்தித்து விவரங்களைக் கேட்டறிந்து, “நியாயம் கிடைக்கச் செய்வேன்” என்று அவர்களிடம் உறுதி அளித்துச் சென்றார்.

அதன்பின், கன்ஷியாம் பர்தேஷ் வாலாம்பாளை அழைத்துக் கொண்டு, சிறையிலிருந்த அவருடைய புதல் வர்கள் வள்ளுவன், நம்பியார் ஆகியோரைச் சந்தித்தார். பிறகு தில்லிக்குச் சென்று, நீதிபதி தார்குண்டே உள்ளிட்ட பல மனித உரிமை ஆர்வலர்களை ஒருங்கிணைத்து ஒரு குழுவை அமைத்து, உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த போது, குற்றவியல் சட்டத்தில் தண்டிக்கப்பட்ட இவர்களுக்கு இந்திய அரசமைப்புச் சட்டம் வகுத்துக் கொடுத்த சாதாரண உரிமைகள்கூட எவ்வாறு மறுக்கப்பட்டுள்ளன என்பதை கன்ஷியாம் பர்தேஷ் எடுத்துரைத்தார்.

குற்றவியல் சட்டப்படி தண்டிக்கப்பட்ட கைதிகள் ஒரே குடும்பத்தைச்  சேர்ந்தவர்களாக இருந்து, ஒரே வழக்கில் தண்டிக்கப்பட்டால், அவர்களை ஆண்டுக்கு ஒருமுறை, ஒரு மாதம், ஒரே சிறையில் வைக்க வேண்டும் அல்லது ஒரே சிறையில் சந்தித்துப் பேச வாய்ப்பளிக்க வேண்டும் என்பது சிறை விதி ஆகும். ஆனால் கலியபெருமாளும் அவருடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் 10ஙூ ஆண்டுகள் ஒருவரை யொருவர் சந்தித்துப் பேச வாய்ப்பு தரப்படவே இல்லை.

அவர்களை எவரும் சந்தித்துப் பேசவும் அனுமதி மறுக்கப் பட்டுள்ளது என்கிற அநீதியைக் கன்ஷியாம் பர்தேஷ் உச்சநீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்தார்.

மேலும் இவர்கள் எழுதிய கடிதங்களும், இவர்களுக்கு மற்றவர்கள் எழுதிய கடிதங்களும் இவர்களுக்குக் கிடைக்க மூன்று மாதங்களுக்கு மேலாகியுள்ளது. இவர்கள் அனை வரும் தனிமைக் கொட்டடி என்கிற கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டு 24 மணிநேரமும் 8ஙூ ஆண்டுகள் அறைக்குள் பூட்டி வைக்கப்பட்டுள்ளனர். புத்தகம், தினசரிப் பத்திரிகைகள்கூட மறுக்கப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் பல்வேறு சிறைகளில் கடுமையாகத் தாக்கப்பட்டு, கைகால் முறிக்கப்பட்டு, மண்டை உடைக்கப்பட்டு, செயல்பட முடியாதவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரையும் தில்லி விஞ்ஞானக் கழக மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கன்ஷியாம் பர்தேஷ் உச்சநீதிமன்றத்தில் அளித்த விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கில் நீதிபதிகள் ஆர்.என். பகவதி, வி.ஆர். கிருஷ்ணய்யர் ஆகியோர் வழக்கின் நியாயத் தன்மையை ஏற்றுக்கொண்டு, சம்பந்தப்பட்ட கைதிகளை மனிதாபிமானத் துடன் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஆணையிட்டனர். உச்சநீதிமன்றம் பல முறை அறிவுறுத்தி யும் கூடத் தமிழக அரசு இவர்களை விடுதலை செய்ய வில்லை. இந்தச் சூழ்நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தமிழக அரசுக்குக் கடுமையான எச்சரிக்கை அறிவிக்கையை அனுப்பினர்.

அதில், “சட்டத்தை மதிக்க வேண்டிய ஆட்சியாளர் களும், அதிகாரிகளும் சட்டத்தை மதிக்காத போது, ‘இந்தச் சட்டத்தை மதிக்கமாட்டோம்; இச்சட்டத்தின் மூலம் நீதி கிடைக்காது; இந்தச் சமூகத்தை மாற்றி அமைப்பதே எங்களது நோக்கம்; அதற்காகவே ஆயுதப் போராட்டத்தை நாங்கள் கையில் எடுத்திருக்கிறோம்’ என்று கூறும் இந்தப் புரட்சியாளர்கள் சட்டத்தை மதிக்காதது பெரிய தவறாக எங்களுக்குத் தெரியவில்லை.

எனவே, தமிழக அரசு இந்த ஆயுள் கைதிகளை உடனே விடுதலை செய்ய வேண்டும். அப்படிச் செய்ய மாநில அரசு தவறுமாயின், உச்சநீதிமன்றத்தின் ஆணைகள் தமிழக சிறைச் சுவர்களைத் துளைத்துக் கொண்டு, சம்பந்தப்பட்ட கைதிகளுக்கு நீதி வழங்கத் தயங்காது” என்று, நீதிபதிகள் கூறியிருந்தனர்.

இறுதியாக, 12ஙூ ஆண்டுகள் சிறைக் கொடுமைக்குப் பிறகு புலவர் கலியபெருமாளும் அவரது குடும்பத்தினர் அனைவரும் உச்சநீதிமன்றத்தின் நிபந்தனையற்ற நீண்ட பரோல் ஆணையின் பேரில் விடுதலையானார்கள்.

இப்படிப்பட்ட தன்மையில் தாய், தந்தை, தம்பி, மகன்கள், உறவினர் என ஒரு குடும்பமே கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது, இந்தியப் புரட்சியாளர்களிடையே ஒரு தனித்த வரலாறாக நிலைத்துவிட்டது.

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *