அரசு பற்றி எங்கல்ஸ்

நேற்று முகனூல்விவாதத்தில் CPM தோழர்களின் கருத்துக்கு பதிலளிக்கும் முகமாக

அரசு என்பதை வர்க்கங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியாக சித்தரித்து, இது ஏதோ எல்லா மக்களின் நலன்களையும் சமமாகப் பாதுகாப்பதாக விளக்கமளிக்கும் விஞ்ஞானிகளுக்கு எங்கல்சின் “குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்” என்ற இந்நூல் தக்க பதிலடி தருகிறது. பண்டைய ஏதன்ஸ், ரோமாபுரி மற்றும் ஜெர்மானியர்களிடையே அரசு தோன்றிய உதாரணங்களின் அடிப்படையில் எங்கெல்ஸ், அரசு என்பது தான் பிறக்கும் தருணத்திலிருந்தே, எந்த வர்க்கங்களின் கரங்களில் உற்பத்திச் சாதனங்கள் உள்ளனவோ அந்த வர்க்கங்களின் ஆதிக்க கருவியாகத் திகழ்கிறது என்று தெட்டத் தெளிவாயும் ஆணித் தரமாயும் மெய்ப்பித்தார். தன்னுடைய இன்நூலில் எங்கெல்ஸ், அரசின் பல்வேறு திட்ட வட்டமான வடிவங்களை, உதாரணமாக, முதலாளித்துவத்தை ஆதரிப்பவர்கள் ஜனநாயகத்தின் உயர் வடிவமாக சித்தரிக்கும் பூர்ஷ்வா-ஜனநாயகக் குடியரசை ஆராய்கிறார். இக்குடியரசின் வர்க்கத் தன்மை ஜனநாயகப் போர்வையின் பின் மறைந்துள்ள பூர்ஷ்வா ஆதிக்கத்தின் வடிவம் என்கிறார் எங்கெல்ஸ்.

நாடாளுமன்ற மாயைகள் அத்தருணத்தில் ஏற்கெனவே தொழிலாளர் இயக்கத் தலைவர்களில் ஒரு சிலருக்கு இடையில், குறிப்பாக ஜெர்மன் சமூக-ஜனநாயகத்தின் சந்தர்ப்பவாதிகளின் மத்தியில் பரவியிருந்தன. இதற்கெதிராக எச்சரித்த எங்கெல்ஸ், மூலதனத்தின் ஆதிக்கம் நிலைத்திருக்கும் வரை எவ்வித ஜனநாயக சுதந்திரமும் உழைப்பாளிகளுக்கு உண்மையான விடுதலையைப் பெற்றுத் தராது என்றார். அதே நேரத்தில், அவர் இந்த ஜனநாயக சுதந்திரத்தை (ஜன்நாயக உரிமைகளை) பேணிக் காத்து வளர்ப்பதில் பாட்டாளிகளுக்குள்ள அக்கறையையும் கோடிட்டுக் காட்டினார்; இந்த உரிமைகள், சமுதாயத்தைப் புரட்சிகரமாக மாற்றியமைப்பதற்கான விடுதலைப் போராட்டத்திற்கு அதிகபட்சம் அனுகூலமான சூழ்நிலைகளைத் தோற்றுவிக்கும்.

உற்பத்திச் சக்திகள் வளர வளர பொருளாயதச் செல்வங்களின் உற்பத்தி முறை மாறுகிறது; குறிப்பிட்ட ஒரு கட்டத்தில் தனியுடைமை தோன்றி, சமுதாயம் எதிரெதிர் வர்க்கங்களாக பிளவுறுவது தவிர்க்க இயலாதுதாக, நியதியானதாக மாறுகிறது; முதலாளித்துவ சமுதாயத்தில் உற்பத்திச் சக்திகள் மேற்கொண்டு வளர்ச்சியடையும் பொழுது, தனியுடைமையும் சுரண்டும் வர்க்கங்களும் உற்பத்தியின் வளர்ச்சிக்கு நேர்த் தடைகளாக மாறுகின்றன என்பதை எல்லாம் எங்கெல்ஸ் இந்நூலில் விளக்குகிறார். இது பாட்டாளி வர்க்கப் புரட்சியை தவிர்க்க இயலாததாக ஆக்குகிறது; மார்க்சும் எங்கெல்சும் பன்முறை சுட்டிக்காட்டியபடி, இப்புரட்சியின் பொழுது பழைய பூர்ஷ்வா அரசு இயந்திரம் உடைக்கப்பட்டு, ஜனநாயகத்தின் உயர் வடிவமாகிய பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்னும் புதிய வகையான அரசு தோற்றுவிக்கப்படுகிறது.

மூலச்சிறப்பான வடிவத்தில் அரசைப் பற்றி எங்கெல்சால் முன்வைக்கப்பட்ட மார்க்சியக் கருத்தமைப்பு புதிய வரலாற்று சகாப்தச் சூழ்நிலைகளுக்கேற்ப வி. இ. லெனினால் அரசும் புரட்சியும் என்ற நூலில் பன்முக ரீதியில் வளர்க்கப்பட்டது.

இதை உள்வாங்கி கொள்ளாமல் எதை எதையோ எழுதி தள்ளும் தோழமைகளே மார்க்சியதை சற்றேனும் அறிந்து எழுதுங்கள்.