அரசு பற்றி ஆசான்கள்

மா சேதுங் சிந்தனையால் ஒளியூட்டப்பட்ட புரட்சிப்பாதையை ஏற்றுக்கொள்வது உண்மையான புரட்சியாளன் ஒவ்வொருவனதும் திட்டவட்டமான முன்தேவையாகும்.தொழிலாளி வர்க்கமும் அதன் நேச அணிகளும் தற்போதுள்ள முதலாளிய அரசாங்க இயந்திரத்தை உள்ளவாறே எடுத்துத் தமது நலன்களுக்காக உபயோகிப்பது சாத்தியமில்லை. அரச இயந்திரம் முதலாளியத்தின் நலன்களைப் பாதுகாக்கக் கட்டப்பட்டது. அதைத் தொழிலாள வர்க்க நலன்களைப் பாதுகாக்க இயலாது.

அதனால்தான் மார்க்ஸ், லெனின், மா சேதுங் ஆகியோர் முதலாளிய அரசாங்க இயந்திரம் நிச்சயமாக நொருக்கப்படல் வேண்டும் என வலியுறுத்திக்கூறினர்.
அதனைச் சீர்திருத்தம் செய்யவோ அல்லது அதன் வரையறைக்குள் அமைப்பில் சீர்திருத்தம் செய்யவோ முடியாது.
முதலாளிய அரசு இயந்திரம் இருக்கவேண்டும், அல்லது பாட்டாளிவர்க்க அரசு இயந்திரம் இருக்க வேண்டும். இவற்றிற்கு இடைப்பட்டதாக ஒன்றும் இருக்க முடியாது.
அதனால்தான் முதலாளிய அரசு இயந்திரத்தை பலாத்காரத்தினால் நொருக்கி அதனிடத்தில் பாட்டாளிகளின் அரசு இயந்திரத்தைத் தொழிலாள வர்க்கமும் அதன் நேசஅணிகளும் ஏற்படுத்த வேண்டியது பொறுப்பென மார்க்சியம் – லெனினிசம் – மா சேதுங் சிந்தனை போதிக்கின்றது.
பாட்டாளிகளின் அரசாங்க இயந்திரத்தை மார்க்ஸ் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என விவரித்தார்.இந்தக் கடமையைச் சரிவரச் செய்த புரட்சிகள் வெற்றி பெற்றன. அக்டோபர் புரட்சியும் சீனப்புரட்சியும் இதற்கு உதாரணங்களாகும். இந்த இரண்டிலும் பழைய அரசியல் அதிகாரத்தின் அழிவில் புதியது பெறப்பட்டது.

அரசென்பது ஒரு வர்க்கத்தைப் பிறிதொரு வர்க்கம் அடக்குவதற்கான கருவியாகுமென்று குறிப்பிட்டால் அது சரியானதே. அவ்வாறான ஒரு அரசு இயந்திரம் இல்லாமல், அரசின் கரங்களில் துப்பாக்கிகள் இல்லாமல், எந்த ஒரு சுரண்டும் வர்க்கமாவது சுரண்டப்படும் மக்களைத் தொடர்ந்தும் சுரண்டமுடியாது.அதனால்தான் சுரண்டப்படும் வர்க்கங்களின் விடுதலைக்கான ஒரேயொரு மார்க்கம் சுரண்டும் வர்க்கங்களின் ஒடுக்குமுறை அரசு இயந்திரத்தை நொருக்கிவிட்டு அதனிடத்தில் தொழிலாள வர்க்கத்தினதும் அதன் நேச அணிகளினதும் அரசு இயந்திரமான, மார்க்ஸின் வார்த்தைகளில் கூறுவதானால், பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தினால் நிரப்பப்படுவது ஒன்றேயாகும், அரசுபற்றிய மார்க்சியக் கோட்பாடு இதுவாகும். இதை ஏற்றுக்கொள்பவர் மார்க்சிய – லெனினியப் புரட்சிவாதிகளாவர். இதை நிராகரிப்பவர்கள் நவீன திரிபுவாதிகளும் சீர்திருத்தவாதிகளும் மற்றும்ஒருவருமே இல்லையெனக் கூறலாம். ஆனால், நாம் பாட்டாளி வர்க்க அரசியல் அதிகாரம் பாட்டாளி வர்க்க சர்வாதிகார உருவத்தில் முதலாளித்துவ சர்வாதிகாரத்தின் இடத்திற்கு வரவேண்டும் என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும்.லெனின் குறிப்பிட்டதுபோல, வெற்றியடைந்த சகல புரட்சிகளும் சர்வாதிகாரத்தால் பின் தொடரப்பட்டன. ஏனெனில் தோற்கடிக்கப்பட்ட வர்க்கம் தனது தோல்வியை ஒப்புக்கொண்டதும் இல்லை, அல்லாது இசைந்து போனதும் இல்லை. அது எப்பொழுதும் அதிகாரத்தை மீண்டும் பெறுவதற்காகச் சதி செய்தும், சூழ்ச்சிகளில் ஈடுபட்டுக் கொண்டும் இருக்கும்.