அவர்கள் முதலாளியின் உயிரையும், உடமையையும் பாதுகாக்க வந்துள்ளார்கள். அத்துடன் அவர்கள் ஆயுதந்தாங்கியவர்களாக வந்திருக்கின்றார்கள். அவர்களின் கரங்களில் உள்ள துப்பாக்கிகளே முதலாளியையும், அவனது வர்க்கத்தையும் பாதுகாக்கின்றது. அந்தத் துப்பாக்கிகள் இல்லாவிட்டால் தொழிலாளர்கள் சுரண்டலுக்கு ஒரு நாள்கூட இடங்கொடுக்கமாட்டார்கள். எவ்வாறாயினும், பெரும்பாலான தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் முதலாளிகளுக்கு நூறுக்கு ஒன்று என்ற விகிதாசாரத்தில் இருக்கிறார்கள். இந்த நிலைமைகளில் எவ்வாறு அவர்களால் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் உள்ளவர்களைப் பலவந்தப்படுத்திச் சுரண்ட முடிகின்றது. அவர்களின் காவல் நாய்களான இராணுவம், பொலீஸின் கரங்களில் உள்ள துப்பாக்கிகளின் சக்தியே அது. அதனாலேயே தோழர் மாசேதுங், அரசியல் அதிகாரம் துப்பாக்கிக் குழலிலிருந்து பிறக்கின்றது என்பதை ஒவ்வொரு கம்யூனிஸ்ட்டும் உணர்ந்துகொள்ள வேண்டும் என நமக்குக் கற்றுத்தந்தது நூறுவீதம் சரியாகின்றது.
அரசாங்கத்தைப் பற்றிய மார்க்சியக் கோட்பாட்டை இது இரத்தினச் சுருக்கமாகத் தருகின்றது. மார்க்சிச – லெனினியத்தின் சாரம் அதுவே.
இந்தக் துப்பாக்கிகள் கைமாறும் போதே, சுரண்டப்பட்ட வர்க்கங்கள் புரட்சிகரப் பலாத்காரத்தினால் இந்தக் துப்பாக்கிகளைப் பறித்துத் தொழிலாளர்களினதும் அவர்களினது நேச அணிகளினதும் கைகளில் அவற்றை ஒப்படைக்கும்போதே அவர்கள் தம்மை விடுதலை செய்து கொள்வார்கள். வேறு எந்த மார்க்கமும் இல்லை. மற்றவை யாவும் தொழிலாள வர்க்கத்தை ஏமாற்றும் ஒரு திட்டமிட்ட முயற்சி அல்லது போலியாகும்.
இந்த உண்மையை மறைப்பதற்கும், மக்களைக் குழம்பச் செய்து அவர்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காகவுமே முதலாளிகளும் மற்றைய பிற்போக்குச்சக்திகளும் பாராளுமன்றம் என்ற ஏமாற்று வித்தையைக் கண்டுபிடித்தனர். பாராளுமன்றம் வெறுமனே ஏமாற்றும் இடம்தானே அன்றி ஒடுக்கப் பட்ட மக்களின் விடுதலைக்கான இடமன்று.
பாராளுமன்றம் மூலதனத்தின் வெளிப்படையான சர்வதிகாரத்தை மறைப்பதற்கான ஒரு திரை, ஒரு அணிகலனுமாகும். அது மக்களை மடையர்களாக்குவதற்கும், பிளவு படுத்துவதற்கும், பாராளுமன்றம் மூலம் சோஷலிசத்தை அடையலாம் என்ற மாயையைப் பரப்புவதன் மூலம் அவர்களின் வர்க்க உணர்வுகளை மழுங்கடிப்பதற்கும், ஆயுதப் படையிற்தான் உண்மையான அதிகாரம் இருக்கிறதென்பதை மக்களிடமிருந்து திசைதிருப்புவதற்கும் முயற்சிக்கின்றது. ஆயுதம் தாங்கிய போராட்டத்திற்குப் பதில் வெறும் சொற்களால் போராட்டம் நடத்தும் மாற்று யோசனையை கூற முயற்சிக்கின்றது.
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் நம்மீது கொண்டிருந்த பெரும் அன்பினால் வாக்குரிமை வழங்கப்பட்டதா? இல்லை. தாம் என்ன செய்கின்றனர் என்பதை அவர்கள் தெரிந்து வைத்திருந்தனர். பொது வாக்குரிமையைக் கொடுப்பதன் மூலம் வளர்ந்து வரும் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஐக்கியத்தை இன ரீதியிலும், சாதி ரீதியிலும், வேறு வழிகளிலும் பிளவுபடுத்த அவர்கள் எண்ணினர். அவர்களின் எண்ணங்கள் பொய்ப்பிக்கப்படவில்லை. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமும் அவர்களது அடிவருடிகளும் சகல மக்களையும் ஆட்சி செய்து வருகையில் அவர்களோ சாதி, மத இன ரீதிகளில்
பிளவுபட்டிருந்தனர்.