இன்றும் பல தோழர்கள் இந்த அரசமைப்பின் மீது மயக்கத்தில் உள்ளனர் அவர்களின் மாயை களைவத்ற்க்கான ஒரு தேடுதலே இந்தப் பதிவு….தோழர்களே நீண்ட பதிவுதான் கருத்துகளை ஒருங்கிணைக்க வேண்டியதன் காரணமாக… படித்து கருத்துக் கூறுங்கள்…அரசு என்பது வர்க்கங்களுக்கு மேலே, சமுதாயத்திற்கு மேலே உள்ள ஒரு நடுநிலை அமைப்பல்ல. சுரண்டும் வர்க்கங்கள், சுரண்டப்படும் வர்க்கங்களை அடிமை நிலையில் வைத்திருப்பதற்கான ஓர் அடக்குமுறைச் சாதனமே அரசாகும். சுரண்டும் வர்க்கங்கள் சுரண்டப்படும் வர்க்கங்களை கீழே வைத்திப்பதற்காகப், படிப்படியாகக் கட்டப்பட்ட சாதனமே அது. வர்க்க சமுதாயத்தில் உண்மையில் ஆட்சி செலுத்துவது அதுவே. கட்சிகள் வரலாம் போகலாம். ஆனால், சுரண்டும் அமைப்புமுறை இருக்கும்வரை, அரசு இயந்திரம் அவ்வாறே இருக்கும்.இதனை வரலாற்று பொருள்முதல்வாத அடிப்படையில் தேடினால்.ஒவ்வொரு பூர்வீகக்குடியும் தம்முள் ஒருவனைத் தலைவனாக அல்லது முக்கியஸ்தனாகத் தெரிவுசெய்தன. பொதுவாக அவன் வேட்டையாடுவதற்கும், யுத்தத்திற்கும அவர்களைத் தலைமைதாங்கும் உடல் வலிமை பெற்றவனாயிருந்தான். ஆனால், தனது அதிகாரத்தை நிலைநாட்டுவதற்கு அவன் அரசு இயந்திரமான ஓர் இராணுவத்தையோ அல்லது பொலீஸ் படையையோ கொண்டிருக்கவில்லை. சுயமாகவே மக்கள் அவனுக்குக் கீழ்ப்படிந்தனர். ஒவ்வொருவரும் அவனது சொல்லை ஏற்றுக் கொண்டனர். ஒரு பூர்வீகக்குடியில் தலைவனுக்குக் கிடைத்த மனப்பூர்வமான மரியாதையும் கீழ்ப்படிவும், முதலாளித்துவ சமுதாயத்தில் எந்தவொரு சக்திவாய்ந்த தலைவனுக்கும் கிடைத்ததில்லை.புராதன பொதுவுடைமைச் சமுதாயத்தின் காலகட்டத்தில் அரசு இயந்திரத்தைச் சிறிதளவாவது ஒத்ததாக ஏதும் இருக்கவில்லை யென்பது மிகவும் தெளிவாகின்றது. எதிர் எதிர் வர்க்கங்கள் ஒரு வர்க்கத்தை ஒரு வர்க்கம் தனக்குக் கீழ்கொண்டு வரும் நிலைக்கு வளர்ச்சியடையும் போதே ஓர் அடக்குமுறை அரசு இயந்திரத்தின் தேவை ஏற்படுகின்றது. அவ்வாறான முதற் சமுதாயம் அடிமைச் சமுதாயமாகும். அதன் சிறந்த உதாரணங்களைக் கிரேக்கத்திலும் ரோம சாம்ராஜ்யத்தின் காலப் பகுதியிலும் காணலாம். இந்த சமுதாயம் அடிமையை வைத்திருப்போன்அடிமை என்ற எதிர் எதிர் வர்க்கங்களாகப் பிளவுபட்டிருந்தது. வல்லமைமிக்க ரோம சாம்ராஜ்யத்திற்கு எதிராக ஸ்பாட்டகஸ் தலைமை தாங்கிய மிகப் பிரபல்யம் வாய்ந்த கிளர்ச்சிகள் உட்படப் பல அடிமைக் கிளர்ச்சிகளை இந்தச் சமுதாயம் கண்டது.இக்கட்டத்தில் அடக்குமுறை இயந்திரம் பெரிய அளவில் வளர்ச்சிய டையவில்லை. அடிமைகள் மிகக் கடுமையான கசையடி மூலமும் சுதந்திர மனிதர்களின் பிரமாண்டமான படைகொண்டும் கோரமாக அடக்கியாளப்பட்டனர். ஆனால், வர்க்க முரண்பாடுகள் கூர்மையடைந்து சமுதாயம் அடுத்த கட்டமான நிலமானிய முறைக்கு வளர்ச்சியடைந்ததும் மேலும் மோசமான அடக்குமுறை அரசு இயந்திரத்தின் தேவை உணரப்பட்டது. நிலையான இராணுவம் ஸ்தாபிக்கப்பட்டது. நீதித்துறையும் சிறைச்சாலைகளும் தோன்றின. சிறிது சிறிதாக அரசு இயந்திரம் வளர்ந்து வர்க்க முரண்பாடு மிக உச்சக் கட்டத்தில் கூர்மையடைந்துள்ள முதலாளிய சமுதாயத்தில் உயர் இராணுவமயமாக்கப்பட்ட இன்றைய அரசு தோன்றியது.இதிலிருந்து வர்க்க முரண்பாடுகளின் வளர்ச்சிப் போக்கின் விளைவுகளால் அரசு தோன்றியது என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.மார்க்ஸ் விளக்கியது போன்று, அரசு என்பது ஒரு வர்க்கம் வேறு ஒரு வர்க்கத்தை அடக்குவதற்கான ஒரு சாதனமாகும். உற்பத்திச் சாதனங்களின் வளர்ச்சி மிக அடித்தளத்தில் இருந்தபோது, மக்களை எதிர் எதிர் வர்க்கங்களாகப் பிரிப்பதற்கான அடிப்படை ஏற்பட வில்லை. தான் உண்பதற்கு வேண்டிய உணவை மட்டுமே உற்பத்தி செய்யக் கூடிய நிலையில் உள்ள ஒருவன் சக மனிதனை அடிமைப் படுத்துவதில் எதுவித அர்த்தமுமில்லை. அன்று நிலவிய வர்க்கங்களற்ற சமுதாயத்திற்கு இதுதான் அடிப்படையாகும்.குறிப்பிட்ட சில ஆறுகளில் மீன்பிடிக்கும் உரிமைக்காகவும் குறிப்பிட்ட சில காடுகளில் வேட்டையாடுவதற்கான உரிமைக்காகவும் வெவ்வேறு பூர்வீகக்குடிகளுக்கிடையே யுத்தங்கள் இடம்பெற்றன. அவ்வாறான யுத்தங்களில் தோல்வியுற்ற பூர்வீகக்குடிமக்கள் சிறைப்பிடிக்கப் படவில்லை. அவர்கள் சிரச்சேதம் செய்யப்பட்டனர். இது காட்டுமிராண்டித் தனமாக நமக்குப்படக்கூடும். தலையை வெட்டிவிடுவது அதற்குச் சாப்பாடு போடும் தேவையை இல்லாமல் செய்துவிடுகிறதென்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். பிந்திய ஒரு காலகட்டத்தில் உற்பத்திச் சாதனங்களின் வளர்ச்சியால் ஒரு மனிதன் தனக்குப் போதிய உணவை உற்பத்திசெய்யக்கூடிய நிலை ஏற்பட்டதோடு அல்லாமல் மற்றையோருக்கும் உற்பத்தி செய்யக்கூடிய நிலை ஏற்பட்டதுமே வர்க்கங்களாக சமுதாயத்தைப் பிரிப்பதற்கான அடிப்படை தோன்றும் கட்டத்தை அடைகின்றோம். இப்பொழுது தோற்கடிக்கப்பட்ட பூர்விகக்குடியினர் வாளுக்கிரையாக்கப் படுவதில்லை. செல்வத்தை உற்பத்தி செய்வதற்காக அவர்கள் அடிமைகளாக்கப்பட்டனர். அடிமையை வைத்திருப்போன்-அடிமை என்ற நிலப்பிரபுத்துவத்திற்கு முந்திய, அடிமைச் சமுதாயத்தின் மூலம் வர்க்கச்சமுதாயம் முதன் முதலாகத் தோன்றுகிறது.உற்பத்திச் சாதனங்களின் வளர்ச்சி தான் புராதன பொதுவுடைமைச் சமுதாயத்திலிருந்து அடிமைச் சமுதாயமாக மாறுவதற்கு ஏதுவாக இருந்தது என்பதை நாம் குறித்துக்கொள்வோம். ஒரு அடிமை தனக்கும் தனது எசமானுக்கும் வேண்டியதை உற்பத்தி செய்யக்கூடிய நிலைக்கு உற்பத்திச்சாதனங்கள் வளர்ச்சியடையும் வரை அடிமைத்தனத்திற்கான அடிப்படை தோன்றியிருக்கமுடியாது. ஒரு வர்க்க சமுதாயத்தின் வருகையோடு ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தை அடக்குவதற்கு ஒரு சாதனம் தேவைப்பட்டது. இதுதான் பிற்காலத்தில் அரசாங்கமாக வளர்ச்சியடைய இருந்தது.வர்க்கங்களற்ற புராதன பொதுவுடைமைச் சமுதாயத்தில் அரசு இயந்திரம் இருக்கவில்லை. அப்பொழுது வர்க்கங்களற்ற சமுதாயம் இருந்தமையால் ஒரு வர்க்கத்தை வேறொரு வர்க்கம் அடக்கி வைத்திருப் பதற்குத் தேவை ஏற்படாததே காரணமாகும். அவ்வாறானால் ஒழுங்கு முந்திய காலத்தில் நிரந்தர இராணுவம் இல்லையென்பதை இது திட்டவட்டமாக நிரூபிக்கின்றது. இன்று நிலையான இராணுவம் இல்லாத நாடே கிடையாது. அவ்வாறே பொலீஸ் படை இல்லாத நாடே இல்லை. இவ்வாறான ஓர் ஒடுக்குமுறை முதலாளிய அரசாங்க இயந்திரம் இல்லாமல், சுரண்டல் ஒரு நிமிடத்திற்குமேல் நிலைக்காதென்பது நிச்சயமாகத் தெளிவாகின்றது. ஆயுதப் படையினரதும் பொலீஸ் படையினரதும் கரங்களில் துப்பாக்கியில்லாவிட்டால் சுரண்டும் வர்க்கங்கள் சுரண்டப்படுவோரைக் கீழே போட்டு மிதிக்க முடியாது. அவர்களின் கரங்களில் உள்ள துப்பாக்கிகளே முதலாளியையும் அவனது வர்க்கத்தையும் பாதுகாக்கின்றது. அந்தத் துப்பாக்கிகள் இல்லாவிட்டால் தொழிலாளர்கள் சுரண்டலுக்கு ஒரு நாள் கூட இடங்கொடுக்க மாட்டார்கள்.