அய்ந்து குருடர்கள்
அய்ந்து குருடர்கள்

அய்ந்து குருடர்கள்

ஐந்து குருடர்கள் யானை பார்த்த கதையை நாம் சிறு வயதிற் கேட்டிருப்போம். ஒவ்வொரு குருடனும் யானையின் ஒரு பகுதியை மட்டுமே தொட்டுத் தடவி ஆராய்ந்து, அப்பகுதியையே யானையின் முழுமையெனக் கருதித் தான் தொட்ட பகுதி தானறிந்த எப்பொருளை ஒத்திருந்ததோ அப்பொருளையே யானையும் ஒத்திருக்கும் என்ற முடிவுக்கு வந்து, மற்றவர்களுடன் கடுமையாக வாதிட்டதைப் பற்றிச் சிரித்திருப்போம். மனித அறிவும் பல சமயங்களில் குருடர் யானை பார்த்த வகையில் அமைந்து விடுகிறது. எந்தவொரு விஷயத்தையும் பல்வேறு கோணங்களினின்றும் பார்க்கவும் முழுமையையும் பகுதியையும் தொடர்பு படுத்தியும் வேறுபடுத்தியும் ஆராயவும் தவறும்போது, நமது பார்வை குறைபாடுடையதாகி நமது முடிபுகள் முழுமையற்றனவாகின்றன.
மனிதன் அறிவு மனித வாழ்க்கைக்குத் தொடர்பானதும், மனிதனது தேவைகளின் அடிப்படையில் எழுவதும் என்பதால், அறிவு அறிவுக்காகவே என்ற முறையில் அறிவு தேடப்படுவதில்லை.
மனிதனது பல்வேறு தேவைகளையும் நிறைவு செய்யவும் மனித வாழ்வைச் செழுமைப்படுத்தவும் தேவைப்படும் அறிவு மனித சமுதாயத்தினதும் சமுதாய நடைமுறையினதும் வளர்ச்சியுடன் இணைந்தே வளர்ச்சி பெறுகிறது. 
சுயநலத்தையும் சுரண்டலையுமே மனித சமுதாய வளர்ச்சியின் ஆதாரமாகக் கருதும் பார்வை குருட்டுத்தனமானது. இன்றுவரை, மனிதர் தம் குறைவான பார்வைகள் மூலம் பெறும் தகவல்களை ஒன்றிணைத்துப் பொதுவான கொள்கைகளை வகுத்து அவற்றை நடைமுறை மூலம் பரிசீலனை செய்து சீர்ப்படுத்தித் தவறானவற்றை நிராகரித்துப் புதிய கொள்கைகளை வகுத்து மனித அறிவை முன்னெடுத்து வந்துள்ளனர். இந்த மனித அறிவின் இறுதி ஆதாரம் நடைமுறையேயன்றி வேறில்லை.
பொதுமைப்படுத்தப்பட்டு, கொள்கையாக வளர்ச்சி யடையாத நடைமுறை குறைபாடுடையது. அத்தகைய நடைமுறை அனுபவத்தை மட்டுமே சார்ந்திருக்கும் அறிவு அரைகுறையானது. நடைமுறையினின்று கொள்கைக்கும், கொள்கையினின்று நடைமுறைக்குமான பரிமாற்றாம் மூலமே மனித அறிவு வளர்ச்சி  பெற்று முழுமையை அடைகிறது. ஐந்து குருடர்களும் தத்தமது நேரடி அனுபவங்கட்கு அப்பால் அறிவைத் தேட மறுத்ததாலும் அந்த அனுபவங்களை முழுமையாகக் கருதிப் பொருளின் பிற அம்சங்களைப் புறக்கணித்ததாலும் அவர்களது நடைமுறை குறைபாடான அறிவையே தந்தது. இயங்கியல் சாராத வரட்டுத்தனமான பொருள்முதல்வாதமும் யானை பார்த்த குருடர்களின் நிலையில்தான் உள்ளது.
ஐந்து குருடர்களும் யானையின் ஒரு பகுதியை முழு யானையாகவும், தத்தம் குறுகிய அனுபவங்களை முழுமையானவை எனவுங் கருதித் தவறு செய்தார்களாயினும், அவர்கள் சொன்னவற்றில் உண்மையின் ஒரு பக்கம்  இருந்தது.
அவர்களது விளக்கத்தின் பல்வேறு தவறுகள் அவர்களது நடைமுறையின் போதாமையுடனும் தம் அனுபவத்தை அறிவாக வளர்ச்சியடையாமையே குறைபாடுகளுடனும் தொடர்புடையன. 
ஐந்து குருடர்களைப் பற்றி அறிவீர்கள். ஆறாவது குருடனைப் பற்றி அறிவீர்களா? ஆறாவது குருடன் வேறு வகையானவன். அவனுக்கு யானையைப் பற்றி அறியும் அக்கறையைவிட யானயைப் பற்றித் தான் ஏற்கெனவே கொண்டிருக்கும் கருத்தைப் பலப்படுத்தும் நோக்கமே முக்கியமானது.
மார்க்ஸியம் பற்றியும் மார்க்ஸிய இயக்கங்கள் பற்றியும் இன்று மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பல விமர்சனங்கள் ஆறாவது குருடனுக்குரியன. மார்க்ஸியம் காலத்துக்கும் சூழ்நிலைக்கும் அப்பாற்பட்ட நிரந்தரமான உண்மைகளின் கோர்வை என்றோ, மனித சமுதாயம் பற்றியும் மனித இருப்புப் பற்றியும் மார்க்ஸ் ஆராய்ந்ததைவிட அதிகமாயும் அந்த ஆராய்ச்சிக்கு வெளியிலும் ஆராய எதுவுமில்லை என்றோ மார்க்ஸியம் கூறவில்லை. மார்க்ஸியம் அறநெறி சாராதது, பொருளுக்கு அப்பால் எதுவுமே இல்லை என்று மார்க்ஸியம் கூறுகிறது. மார்க்ஸியத்துக்கு மனிதனது அக உணர்வு சார்ந்த விஷயங்களை ஆராயும் திறமை இல்லை என்றவாறான குற்றச்சாட்டுகள் சில சமயங்களில் அறியாமை சார்ந்தவை; சில சமயங்களில் விஷமத்தின் விளைவானவை.
மார்க்ஸ் என்கிற தனி மனிதன், மனித வாழ்க்கையின் சகல அம்சங்களையும் ஒன்றுவிடாமல் ஆராய்ந்து அறுதி இறுதியான முடிவுக்கு வந்ததாக விஷயமறிந்த எந்த மார்க்ஸியவாதியும் கருதியதில்லை. மார்க்ஸின் சாதனைகள் அவருக்கு முன்னர் வந்து போன பல பெரும் அறிஞர்களதும் சிந்தனையாளர்களதும் சாதனைகளின் அடிப்படையிலானவை. மார்க்ஸ் நமக்கு வழங்கியது ஒரு வலிய ஆய்வு முறை; அதைச் சரிவரப் பயன்படுத்துவதிலேயே
மார்க்ஸியத்தின் விருத்தி தங்கியிருக்கிறது. மார்க்ஸ் தொடாத விஷயங்கள் மார்க்ஸியம் தொடக்கூடாதவையோ தொட இயலாதவையோ தொட அஞ்சுவனவோ அல்ல. மார்க்ஸ் மனித வரலாற்றை ஆராய்ந்து அதன் பொதுவான போக்கைச் சரிவரக் கூறினாரேயொழிய மனித இனத்தின் எதிர்கால வரலாற்றை இம்மியும் பிசகாதபடி ஆரூடங்கூற முற்படவில்லை. ஏகாதிபத்தியம் எவ்வாறு விருத்தியடையும் என்பது பற்றி மார்க்ஸ் தெளிவுபடுத்தவில்லை யென்பதால், ரஷ்யப் புரட்சிக்கு வழிகாட்டிய லெனின் மார்க்ஸை மிஞ்சினாரென்றோ பொய்ப்பித்தாரென்றோ நாம் கருதுவதற்கில்லை. அது போன்றே, மானுடர் சுற்றாடலின் சீரழிவு மூலவளங்களின் கொள்ளையும் அதன் விளைவான பற்றாக்குறையும்போன்ற புதிய நெருக்கடிகளும் மார்க்ஸால் ஆராயப்படவில்லை என்பதனால் அவை மார்க்ஸியத்துக்கு அப்பாற்பட்ட விஷயங்களாகிவிடவில்லை. அவற்றின் விருத்தி வர்க்கப் போராட்டத்தைப் பொய்ப்பித்துவிடவில்லை; மாறாக, ஏகபோக முதலாளித்துவம் எவ்வாறு சமுதாய நெருக்கடியை மேலும் உக்கிரமாக்கி வருகிறது என்றே உணர்த்துகிறது. வர்க்க சமுதாயத்தில் பல்வேறு சமுதாய முரண்பாடுகளிருந்தபோதும் வர்க்க முரண்பாடே முதன்மையானது. ஆயினும் அது எப்போதுமே நேரடியாகத் தன் முக்கியத்துவத்தை வெளிப்படுத்திக் கொள்வதில்லை. பிரதான முரண்பாடு தீர்க்கப்படாத நிலைமைகளிற்கூட இரண்டாம்பட்சமான முரண்பாடுகள் உக்கிரமடையலாம். அதனால் பிரதான முரண்பாடு இல்லாமற் போவதில்லை; அதன் முக்கியத்துவம் குறைந்து விடுவதில்லை சமுதாய முரண்பாடுகளின் முக்கியத்துவத்தை, சமுதாய முழுமையின் அடிப்படையில் வரலாற்று ரீதியாக மதிப்பிட இயலுமே அல்லாமல், வரையரைக்குட்பட்ட நிலைமைகளின் கீழும் குறுகிய கால அளவிலுமல்ல.
மார்க்ஸியத்தைக் கடந்து செல்லுகிறதாகவும் மார்க்ஸியம் தொடத் தவறியவற்றை மார்க்ஸியத்திற்கு வழங்குவதாகவும் பாசாங்கு செய்வோர் பலர் சிலர் எங்கேயோ எவரோ சொன்னதன் உண்மையை ஆராயாமலே கருத்துகளை இரவல் வாங்கித் தமக்கு விளங்காத மார்க்ஸியத்துக்கு மருத்துவம் செய்ய முற்படுவார்கள் சிலர் மார்க்ஸிய நடைமுறையின் பிரச்சனைகளை சமுதாய நடைமுறையின் ஆராயாமல் கருத்து முதல்வாதத்திற்குள் தீர்வுகளைத் தேடுவார்கள். வேறு சிலர் அதிதீவிர நிலைப்பாடுகளை மேற்கொள்வார்கள் அல்லது நவ மார்க்ஸியவாதிகள் என்ற போர்வையுடன் உலவுவார்கள். எவ்வாறாயினும் அவர்களது நோக்கம் மார்க்ஸிய லெனினிஸக்கட்சிகளையும் வெகுஜன இயக்கங்களையும் தூற்றிப் பழிப்பதே.
மார்க்ஸிய இயக்கம் நடைமுறை சா ந்தது. அதன் விருத்தியின் போக்கில் தவறுகள் நேராமல் இருக்க டியாது. ஆயினும் அதன் பாட்டாளிவர்க்கச் சார்பு அத்தகைய தவறுகளைத் திருத்தி இயக்கத்தை மேலும் வலிமைப்படுத்தி முன் செல்லுமாறு உந்துகிறது. விமர்சனங்கள் இல்லாமல்
தவறுகள் திருத்தப்பட முடியாது. விமர்சனங்கள் நேரடியானவையா, சாடையாகச் சொல்லப்படுவனவா, சூடானவையா, தண்மையானவையா என்பதைவிட ஆக்கபூர்வமானவையா, அழிவுத் தன்மையினவா, சினேகமானவையா பகைமையானவையா என்பதே முக்கியமானது. அந்த அடிப்படையிலேயே விமர்சனங்கட்கு மார்க்ஸிய இயக்கம் முகங்கொடுக்க வேண்டியுள்ளது.
மார்க்ஸிய இயக்கத்துள் பெரும் விவாதங்கள் பல நிகழ்ந்துள்ளன. பிணக்குகளும் பிளவுகளும் நிகழ்ந்துள்ளன. இவை ஒருபுறம் மார்க்ஸிய இயக்கத்தைப் பலவீனப்படுத்தினாலும் தவறுகளை அடையாளங் காணவும் திருத்தவும் வழிகோரிய அளவில் பயனுள்ளவையே. மார்க்ஸியத்தின் விரோதிகள் மார்க்ஸிய இயக்கத்தின் விருத்திக்குப் பாதகமான எதையுமே வரவேற்றுப் போற்றக் கூடியதில்லை. உலகின் ஒடுக்கப்பட்ட மக்களது பாட்டாளி வர்க்கத்தினதும் போராட்டங்களைப் பிளவுப்படுத்திப் பலவீனப்படுத்தும் தேவை அவர்கட்கு உண்டு. அந்தத் தேவையை நிறைவு செய்ய மார்க்ஸியம் பற்றிய ஆராய்வு என்ற பேரில் மார்க்ஸிய விரோதப் பொய்ப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன; மார்க்ஸியத்தைத் திருத்தி அமைக்கிறோம் என்ற பேரில் மார்க்ஸிய இலக்கை திசை திருப்பும் முயற்சிகள் ஊக்குவிக்கப் படுகின்றன. இங்கே அவர்கட்கு ஆறாவது குருடனின் பணி அவசியமாகிறது.

நமது சமுதாயச் சீரழிவின் விளைவாக, போலித்தனமான புத்திஜீவி மனோபாவம் நமது மத்தியதர வர்க்கத்தினர் நடுவே மலிந்துள்ளதால் மார்க்ஸியம் பற்றி ஆறாவது குருடனுடைய போதனைகளை நாம் அடிக்கடி கேட்க நேருகிறது. சில வேளைகளில் அதற்குப் பதிலளிக்க வேண்டிய தேவை நமக்கு ஏற்படுகிறது. மார்க்ஸியம் பற்றிய எல்லாப் பொய்ப் பிரசாரங்கட்கும் பதில் எழுதிக் கொண்டிருக்க நமக்குஎல்லோருக்கும் ன் நேர்மில்லையாயினும் சில முக்கியமான விஷயங்கள் பற்றி மார்க்ஸியத்தின் நிலைப்பாட்டை விளக்குவது அவசியமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *