அம்பேத்காரும் ஜாதி ஒழிப்பும்
அம்பேத்காரும் ஜாதி ஒழிப்பும்

அம்பேத்காரும் ஜாதி ஒழிப்பும்

1936-ம் ஆண்டு அம்பேத்கர் ஒரு மாநாட்டில் பேச தயாரித்த இவ்வுரை, சாதி இச்சமூகத்தில் எப்படி எல்லாம் பரிணாமம் அடைந்து செயல்பட்டு, மக்கள் மத்தியில் பிரிவினைகளை ஏற்படுத்தி, பலவிதமான வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டு, மக்கள் ஒற்றுமையை குலைத்து, இச்சமூகத்தை எப்படி முன்னேற விடாமல் பின்னோக்கி இழுத்து வைத்திருக்கிறது என்பதை அனைவருக்கும் புரியும்படி ரொம்ப எளிமையாக தயாரித்து, பின் அவ்வுரை சில சாதியவாதிகளை புண்படுத்தும் என்பதால் மாநாட்டில் பேச அம்பேத்கரை அனுமதிக்காமல் பின் அதை புத்தகமாக தொகுத்து அம்பேத்கர் வெளியிடுகிறார். அதுவே இப்புத்தகம். ஆனால் இப்புத்தகம் அதன் பெயருக்கு ஏற்றது போல அதன் கருத்தியலை தெளிவுபடுத்தி முழுமையடையவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
அம்பேத்கர் சாதியின் தோற்றம் பற்றி எதுவும் இப்புத்தகத்தில் குறிப்பிடவில்லை, அதேபோல் சாதி வேலை பிரிவினையை கொண்டு இயல்பாக மனிதர்களால் உருவாக்கப்பட்டது என்ற கருத்தையும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை, மேலும் சாதியின் தோற்றுவாய்க்கு அறிவியல் அடிப்படை ஏதும் இல்லை என்கிறார்.
அம்பேத்கர் ‘சாதி ஒழிப்புக்கு கலப்புத்திருமணமே உண்மையான ஒரே வழி, கலப்புத்திருமணம் தவிர வேறு எந்த சக்தியாலும் சாதியை அழிக்க முடியாது’ என்று சொல்லி விட்டு, அதனடுத்த பக்கத்தில் ‘கலப்புத்திருமணத்தை கொண்டாடுவது வீண்வேலையாகும்’ என்கிறார்.
‘கலப்புத்திருமணம் மற்றும் சமபந்தி விருந்துகளையும் ஏற்பாடு செய்வதும், அவை நடைபெற்றே ஆக வேண்டும் என்று கிளர்ச்சி செய்வதும் செயற்கையான முறையில் உங்கள் கருத்துக்களை மக்களிடம் திணிப்பதாகவே அமையும்’ என்கிறார்.
மேலும் “புனிதமாக கருதப்படும் வேதங்கள், சாஸ்திரங்களை அழிப்பதே சாதி ஒழிப்புக்கு உண்மையான வழி” என்கிறார்.
மேலும் ‘இந்து மதத்தை முழுவதும் கேள்விக்கு உள்ளாக்க வேண்டும்’ என்கிறார். மேலும் ‘மதம் என்பது மாற்றத்துக்கு புறம்பானது என்பதால் இந்து மதம் ஒரு மதம் அல்ல அது ஒரு பழமையான சட்டம் என்று மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் அப்படி இந்து மதம் சட்டம் என்று மக்கள் ஏற்றுக்கொள்ளும் போது சட்டத்தை மாற்ற முடியும்’ என்கிறார்.
மேலும் பின் வரும்போது “மனித வாழ்க்கைக்கு மதம் இன்றியமையாதது’ என்பதை அம்பேத்கர் முழுமையாக நம்புவதால் இந்து மதத்தில் சில சீர்திருத்த கருத்துக்களை அவர் முன் வைக்கிறார். அவை,
“அனைத்து இந்துக்களும் அங்கீகரிக்கக்கூடிய ஒரே புனித நூல், மற்ற அனைத்து பழமையான வேத, சாஸ்திர, புராணங்களை தடை செய்து அதனை பரப்புரை செய்வதை தண்டனைக்குரிய குற்றமாக்கவேண்டும்.
இந்துக்கள் என்று சொல்லப்படும் அனைவரும் அர்ச்சகர் ஆகும் தகுதி.
அர்ச்சகர்கள் அரசு தேர்வு எழுதி சான்றிதழ் பெற வேண்டும்.
சான்றிதழ் இல்லாத அர்ச்சகர்கள் நடத்தும் சடங்குகள் செல்லாது என்றும் மேலும் அது தண்டனைக்குரிய குற்றமாக்கவேண்டும்.
அர்ச்சகர் ஒரு அரசு ஊழியராக்கப்பட வேண்டும், அரசே தேவைக்கு ஏற்ப்ப அர்ச்சகரை நியமிக்க வேண்டும்.” இதுவே அம்பேத்கர் இந்து மதத்துக்கு முன் வைக்கும் சீர்திருத்தம்.
கலப்புத்திருமணம், சமபந்தி விருந்துகளை நடைமுறைபடுத்த முயற்சி செய்தால் ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்படுவோம் என்று அதனை பயனில்லை என்று சொன்ன அம்பேத்கர் மேல் குறிப்பிட்டு இருக்கும் விஷயங்களை மட்டும் ஏன் முன்மொழிகிறார் ? ஏன் இவற்றை நடைமுறைப்படுத்த எவ்வித ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்படமாட்டோமா. கலப்புதிருமணம், சமபந்தி விருதுக்கு வரும் எதிர்ப்புகளை விட இவற்றிற்கு வரும் எதிர்ப்பு பன்மடங்கு அதிகமாக இருக்கும் என்பதே எதார்த்தம். இதுவும் கடினமான துணிச்சலான விஷயம் என்று தான் அம்பேத்கர் குறிப்பிட்டிருக்கிறார்.
வேத, சாஸ்திரங்களை அழித்தால் சாதி ஒழியும் என்று அம்பேத்கர் எதை வைத்து அந்த முடிவுக்கு வந்தார் ? என்று அவர் எந்த விளக்கத்தையும் தரவில்லை. சாதி சான்றிதழ் ஒழித்தால் சாதி ஒழிந்துவிடும் என்று சொல்லப்படும் கருத்துக்கு சற்றும் மாறுதல் இல்லாததே இக்கருத்தும்.
இந்திய ஒன்றியம் முழுவதையும் நாம் கணக்கில் எடுப்போமாயின் இங்கு இருக்கும் இந்துக்கள் என்று தங்களை அடையாளப்படுத்தும் பெரும்பாலான இந்துக்கள் வேதம், சாஸ்திரம், புராணங்கள் பற்றி எந்தவொரு விழிப்புணர்வும் இல்லாதவர்களே. தங்களுக்கென்று வேதங்கள், சட்டங்கள் இந்து மதத்தில் இருக்கிறதா என்பது கூட அவர்களுக்கு தெரியாது. அவர்கள் அதனை வாழ்வில் ஒருமுறையாவது பார்த்திருப்பார்களா என்பதே மிகப்பெரிய கேள்விக்குறி.
இன்னும் எளிதாக சொல்ல போனால் தமிழகம், கேரளம் போன்ற மாநிலத்தில் வேதம், சாஸ்திரங்கள், புராணங்களை யார் வேண்டும் என்றாலும் எவ்வளவு கேவலமாக எவ்வளவு வெளிப்படையாக கூட விமர்சனம் செய்யலாம். ஆனால் அப்படி ஒரு சாதியின் மீது விமர்சனம் வைக்க முடியுமா ? ஏன் இந்த முரண்பாடு ? அப்படி என்றால் இந்து மத புனித நூல்கள் தான் சாதியை இச்சமூகத்தில் அழியவிடாமல் பிடித்து வைத்திருக்கிறது என்ற கருத்து கருத்தியல் தளத்திலையே அடிப்பட்டு போகிறது. இங்கு சாதி மதத்தை தாண்டி சமூகத்தில் மிகப்பெரிய வேரை ஊன்றி உள்ளது. அதனை புரிந்துகொள்ள பொருளியல் பார்வை மிகவும் அவசியமானதாக உள்ளது.
அம்பேத்கர் புத்தகத்தின் தொடக்கத்திலேயே ‘சோஷியலிஸ்ட்டுகளின் பொருள்முதல்வாதம் முழுமையாக ஏற்றுக்கொள்ள கூடியது அல்ல’ என்று குறிப்பிட்டு பின் கருத்துமுதல்வாதம் மூலமே தனது ஆய்வை நோக்கி நகர்கிறார்.
அம்பேத்கர் ஒரு இடத்தில் புத்தகத்தில் இப்படி குறிப்பிட்டிருந்தார் ‘புகைவண்டி பயணங்களின் போதும், வெளிநாட்டு பயணங்களின் போதும், லட்சக்கணக்கான இந்துக்கள் தங்கள் சாதியவிதிகளை புறக்கணிக்கின்றனர்’ என்று. இதை அம்பேத்கர் கருத்துமுதல்வாதம் மூலமே அணுகி ஒரு விளக்கம் தந்து இருப்பார். ஆனால் இந்த விஷயத்தை அம்பேத்கர் பொருளியல் கண்ணோட்டத்தில் நோக்கியிருந்தால் இந்த புத்தகத்தில் அவர் குறிப்பிட்டிருக்கும் பல விஷயங்கள் மாற்றி எழுதிருக்க வேண்டிய சூழல் அமைந்திருக்கும்.
மேலும் அம்பேத்கர் ‘சாதியமைப்பை மேல் சாதி என்று சொல்லிக்கொள்பவர்களும், பார்ப்பனர்களும் தங்கள் அதிகாரம் கையைவிட்டு போக கூடும் என்பதால் அதனை அழியவிடாமல் பாதுகாப்பனர்’ என்று குறிப்பிட்டிருந்தார். அந்த அதிகாரம் எதற்காக பாதுகாக்கப்படுகிறது ? அதன் தேவை என்ன ? அதன் நோக்கம் என்ன ? என்பதை அம்பேத்கர் விளக்கவில்லை. ஒருவேளை அதனை விளக்க கூடிய முயற்சியில் அவர் ஈடுபட்டிருந்தால் கண்டிப்பாக சாதி பற்றிய ஆய்வில் பொருளியல் பார்வை தவிர்க்க முடியாதது மற்றும் முக்கியமானது என்பதை ஒப்புக்கொண்டிருப்பார்.
இன்று அம்பேத்கர் வாழ்ந்திருந்தால் உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், ஏகாதிபத்திய சுரண்டல், அந்தியமூலதன குவிப்பு என முதலாளித்துவத்தின் அசுர வளர்ச்சியின் மூலம் இந்திய ஒன்றியத்தில் நிலவுகிற சாதிய சமூகத்தின் ஆணி வேரையே ஆட்டிப்பார்த்துவிட்டது என்பதை கண்கூடாக கண்டு பொருளியல் பார்வைபடி தன்புரிதலை இப்புத்தகத்தில் பல இடங்களில் மாற்றி எழுதிருப்பார்.
இப்படி இப்புத்தகத்தில் சாதி ஒழிப்புக்கு முன்வைக்கப்படும் தீர்வில் பல முரண்பாடுகள், கேள்விகள் உள்ளது. இருப்பினும் சாதி எப்படி எல்லாம் பரிணாமம் அடைந்து செயல்படுகிறது, சக மனிதர்களையே எப்படி இழிவாக நடத்துகிறது என்பதை புரிந்துகொள்ள இது முக்கியமான புத்தகமே.
அம்பேத்கர் கூறியிருப்பார் “என் கருத்துகளை நீங்கள் ஏற்றுக் கொள்ள இதுவரை கூறியவை போதுமானவையாக இல்லாமல் போகலாம். என் கருத்துகள், உங்கள் கருத்துகளை மாற்றியமைக்கப் போவதில்லை என்றே நான் எண்ணுகிறேன். ஆனால், உங்கள் கருத்துகளை நீங்கள் மாற்றிக் கொண்டாலும் சரி, மாற்றிக் கொள்ளாவிட்டாலும் சரி சாதியை நீங்கள்தான் ஒழித்தாக வேண்டும். சாதியை வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எறிய, நான் காட்டிய வழியில் பெரும் முயற்சி செய்யுங்கள். இல்லையேல், உங்கள் சொந்த வழியிலாவது பெரு முயற்சி செய்யுங்கள். தேவையான அளவுக்கு உங்களுக்கு நான் உதவுவேன்”.
பொருளாதார பார்வையற்ற சாதி ஒழிப்பு என்பது எவ்வகையிலும் சாத்தியமில்லாதது. அதுபோல வெறும் பொருளியல் பார்வையை மட்டும் வைத்து சாதி ஒழிப்பு பேசுவதும் பயனற்றது. பொருளியல் மற்றும் கருத்தியல் பிணையும் போதே சாதி ஒழிப்பு பற்றிய சரியான புரிதலை வந்தடைந்து, சாதி ஒழிப்பை இச்சமூகத்தில் சாத்தியப்படுத்த முடியும்.
No photo description available.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *