அப்துல்கலாம்

திரும்பும் பக்கமெல்லாம் டிஜிட்டல் பேனர்
தினசரியில் புன்சிரிப்பில் வாழ்த்துகள்
இந்த சேவை யாருக்கானது…. சற்று நிற்கக்

எல்லோருக்கும் நல்லவர்
இறந்துவிட்டார்!

மதங்களைக் கடந்த மாமனிதர்
கையில் வீணை
வாயில் கீதை
நெஞ்சில் அணுகுண்டு…
என
பக்காவான
பார்ப்பன வல்லரசு கனவு நாயகனாகி
ஆர்.எஸ்.எஸ் குருமூர்த்தியே
பாராட்டுமளவுக்கு
அப்துல்கலாம் மெய்யாலுமே
மதங்களைக் கடந்த மாமனிதர்தான்!

செத்தவரெல்லாம்
உத்தமரென்றால் – அவர்
செய்தது என்ன
கேட்கலாம் தானே?

அப்துல்கலாமின் பங்களிப்பு
நாட்டைக் காப்பற்ற
அணுகுண்டு சோதனை
அடுத்தடுத்து ஏவுகணை! – என
அடுத்தவனை மிரட்டும் அறிவியலில்
அடைந்தது என்ன நாடு?

மீனவரைக் காப்பாற்ற
ஒரு ‘மிசைல்’ உண்டா?
மாணவரின் கழுத்தறுக்கும்
‘அட்மிசன்’ கொள்ளையைய் தகர்க்க
ஒரு அணுகுண்டு உண்டா?
பழங்குடிகளின் காடுகளைப் பிடுங்கும்
வேதாந்தாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக
ஒரு ஏவுகனை உண்டா?
‘அப்ரைசல்’ எறிகனைக்கு எதிராக
கனவு கானும்
ஐ.டி. ஊழியர்களை காப்பாற்ற
கலாமிடம் ஒரு கருவி உண்டா?

நிலங்களையும், வயல்களையும்
பிடுங்கும்
கார்ப்பரேட் எதிரிகளைத் தாக்க
ஏதேனும் உண்டா கலாமின் கண்டுபிடிப்புகளில்!
இயற்கை வளங்களை கண்டறியும்
செயற்கை கோள்களை தயாரித்து
சுரண்டும் முதலாளிக்கு வழங்கும்
நாட்டை அழிக்கும் வேலைக்கு எதிராக
நடையைக் கட்டியதுண்டா கலாமின் எளிமை!

பச்சை பிள்ளைகளிடம் போய்
மதிப்பீடுகள் பேசிய மாமனிதர்
பாராளுமன்ற உறுப்பினர்களை
கூட்டிவைத்து
‘லஞ்சம் வாங்க மாட்டோம்’ என்று
உறுதிமொழி ஏற்க வைத்ததுண்டா?

விண்ணுக்கு ஏவுகணை வீசிய
வெற்றி வீரர்
கண்ணுக்கு எதிரே இருக்கும்
ஜெயலலிதாவிடம்
கள்ளுண்ணாமை பற்றி பேசி
டாஸ்மாக்கை வீசச் சொன்ன
பேச்சு உண்டா!

தனியார் பள்ளி
மாணவர்களிடம்
உழைப்பு, நேர்மை என
வகுப்பெடுத்த அணுவாளர்
தாளாளரிடம் போய்
கட்டணக் கொள்ளைக்கு எதிராக
கொதித்தெழுந்த காலம் உண்டா!
ஏழ்மையில் பிறந்து
தமிழ்வழி பயின்று
அரசுப்பள்ளியில் படித்துவந்த
அப்துல் கலாம்,
எங்கெனும்
தாய்மொழியில் அரசுப்பள்ளி திறக்கச்சொல்லி
தப்பித்தவறி பேசியதுண்டா?

ஏழையாய் பிறந்தார்
தமிழராய் இறந்தார்
என்பதற்காய் மட்டும்
ஆளும் வர்க்க சேவை நாயகனை
ஏழை வர்க்கத்தினர் முன்னுதாரணமாக
ஏற்க முடியாது,
அவர் என்னவாய் இருந்தார்
யாருக்காய் உழைத்தார்!
என்பதிலிருந்தே அறிதல் வேண்டும்!
இருபத்தியோரு உழைப்பாளிகள்
ஆந்திரக்காட்டில் கரிக்கட்டயாய் கிடந்தபோது
ஓடி வராத கூட்டமெல்லாம்
கலாம் உடலை தேடி வந்த
வர்க்கத்திலிருந்தே
இவர் யாருக்காக வாழ்ந்தார்! புரியவேண்டும்!

உப்புக்காற்றில் பிறந்தவர்
கார்ப்பரேட் கப்புக் காற்றில் கரைந்தார்…
மீன்தோல் தழுவிய நாவினார்
பார்ப்பன பூணுலின்
மான்தோலாக மாறினார்…
ஈழப்படுகொலை, குஜராத் படுகொலை,தலித்துகள் படுகொலை,
எதர்க்கும் வாய் திறவாமல் நாறினார்
ஒடுக்கும் ஆளும் வர்க்க வீணைநரம்பின் சுரமாய் ஏறினார்!

பளிச்சென தெரியும்
முதலாளி வர்க்க எதிரிகளை விடவும்,
ஆபத்தானவர்கள்
அவர்களை மூடி மறைக்கும்
அப்துல் கலாம்கள்!

புரிந்து கொள் உழைக்கும் வர்க்கமே!
எதர்க்காக உழைக்க வேண்டும்
என்பது மட்டுமல்ல
எதற்க்காக அழ வேண்டும்
என்பதும் நமக்கு தெரிந்திருக்க வேண்டும்

கண்ணீர்
அன்பின் ஈரமாக
சுரக்க வேண்டுமே ஒழிய,
அறியாமையின்
கோரமாக வழியக் கூடாது!

– துரை.சண்முகம்


by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *