அடையாள அரசியல்
அடையாள அரசியல்

அடையாள அரசியல்

“கம்யூனிசம்என்பது மனனம் செய்து அப்படியே ஏற்றுக்கொள்வதல்ல. மனித சமூகத்தின் அறிவு வளர்ச்சிமற்றும் நவீன கல்வி மூலம் உங்களுக்குள்ளாகவேஎழுந்து உருவாகும் தவிர்க்க இயலாத முடிவாகும்” என்று ரஷ்ய இளைஞர்களின் மூன்றாவதுமாநாட்டில் (1920) லெனின் குறிப்பிட்டுள்ளார்.

“அனைத்து தரவுகள் மீதும் விமர்சனப்பூர்வமான அணுகுமுறையோடு, கடினமான, பெரிய, முக்கியத்துவம் வாய்ந்த பணிகளை செய்யாமல், கம்யூனிசம்பற்றிய ஆயத்தபதில்களை ஒரு கம்யூனிஸ்ட் எதிர்பார்பாரேயானால் அவர் மோசமான கம்யூனிஸ்ட்டாகத்தான் இருப்பார்”.

“மார்க்சியமும், தேசிய இன பிரச்சனைகளும்” என்ற புத்தகத்தில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளது போல், வலுவான உழைக்கும் வர்க்கத்தின் ஒற்றுமையால் மட்டுமே இந்த ஆற்றலை நாம் பயன்படுத்த முடியும். சோவியத்துகளும், சோவியத்தின் கம்யூனிஸ்ட் தலைமையும் உழைக்கும் வர்க்கத்திற்கு வர்க்க உணர்வை ஊட்டும்போதே தேசிய இனம் குறித்த தீர்மானம் உண்மை வடிவம் பெறும் என்றார்.

அடையாள அரசியல்

இவ்வாறாக, புரட்சிக்கு பிந்தைய அரசியல் கலாச்சாரம் பற்றிய புரிதல், தற்கால ஆளும் வர்க்கத்தின் தேசம் மற்றும் அடையாள அரசியல் குறித்து அது கேள்வி எழுப்பியது. ஆதிக்கத்திற்கு உட்பட்ட அனைத்து தேசியம் மற்றும் அடையாளம் குறித்தும் கேள்வி எழுப்பியது. தேசியத்தையும், அடையாளத்தையும் சமூக, கலாச்சார உணர்வின் அடிப்படையில் தவறாக புரிந்து கொள்ளக் கூடாது. எல்லையை தாண்டி வர்க்கத்தின் ஆதிக்கத்தை நிறுவ முயலும்போது அதை நாம் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். ஒரு சமூகத்தில் தொழிலாளி வர்க்கத்திடம் நிலவும் வர்க்க உணர்வின் அளவே, தேசியம் மற்றும் அடையாளம் போன்ற அரசியல் வெளிப்பாட்டு தன்மையை தீர்மானிக்கும். தேசிய, இனம் குறித்த வரையறையை சோவியத் யூனியன் உருவாக்கியபோது இதை பார்க்க முடிந்தது.

வர்க்கப் போராட்டத்தின் முதல் படி

2

நவீன இந்திய தேசம் என்ற கருத்தாக்கமே ஏகாதிபத்தியத்திற்கு எதிரான தேசிய இயக்கத்தில் இருந்துதான் பிறந்தது. காந்தியின் வருகைக்கு முன்பு வரை தேசிய இயக்கம் என்பது கட்டுப்படுத்தப்பட்ட, சுய சிந்தனையற்றவர்களை பெரும்பான்மையாகக் கொண்டதாகவே கருதப்பட்டது. காந்தியின் வருகைக்கு பிறகே விவசாயிகள், தொழிலாளர்களின் பங்கேற்பை விடுதலைப் போராட்டத்தில் அதிகம் காண முடிந்தது. காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியின் இருத்தல் என்பது பல்வேறு விவாதங்களுக்கு பிறகு இந்தியா என்கிற கருத்தாக்கத்தை உத்தரவாதப்படுத்தியது. அரசியல் விடுதலைக்கான போராட்டம்தான் வர்க்க போராட்டத்திற்கான முதல்படி என்பதை தொழிலாளி வர்க்கம் அங்கீகரித்தது. காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியை நிறுவிய ஐம்பதாவது ஆண்டையொட்டி இஎம்எஸ் நம்பூதிரிபாட் மார்க்சிஸ்ட் (ஆங்கிலம்) இதழில் எழுதியபோது, காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியின் திட்டத்திலிருந்து கீழ்க்காணும் குறிப்பை சுட்டுகிறார்.

“தேசிய இயக்கத்தை உண்மையான ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கமாக வார்த்தெடுப்பதே நமது உடனடி இலக்கு. இயக்கத்தின் இலக்கு, அந்நிய சக்திகளிடமிருந்து விடுதலைக்காகவும், உள்நாட்டு பிரத்தியேக சுரண்டல் முறைக்கு எதிராகவும் இருக்க வேண்டும். இதற்கு தற்போதைய முதலாளித்துவ தலைமையை ஒதுக்கி புரட்சிகர சோஷலிச தலைமையிடம் அதை கொண்டு வர வேண்டும். அதை சாத்தியமாக்க மார்க்சிய சோஷலிஸ்டுகள் காங்கிரசுக்குள்ளிருந்தே ஒழுங்கமைந்த அமைப்பாக செயல்படுவது அவசியம். வேறு வார்த்தைகளில் சொல்வதானால் இந்த இலக்கை நிறைவேற்ற நமது கட்சியால்தான் முடியும். காங்கிரஸ் கட்சிக்குள் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்துவதும், தெளிவுப்படுத்துவதும் நமது கட்சியின் பலம் மற்றும் செயல்பாட்டையே சார்ந்துள்ளது. இந்த இலக்கை சாத்தியப்படுத்த நாட்டில் உள்ள ஏகாதிப்பத்தியத்திற்கு எதிரான அனைத்து சக்திகளையும் ஒருங்கிணைத்திட வேண்டும்”.

காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி உருவாக்கம்

காங்கிரசின் செயல்பாட்டை கொஞ்சம் தீவிரத்தன்மை கொண்டதாக மாற்றுவது, காங்கிரசிற்கு அப்பாற்பட்ட வெகுஜன அரசியலை கையாள்வது போன்றவையே காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியின் உருவாக்கத்திற்கான காரணம் என்பதை இ.எம்.எஸ் தெளிவாக சுட்டிக்காட்டுகிறார். காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியில் இருந்த கம்யூனிஸ்டுகள் தொழிற்சங்கத்தையும், விவசாயிகள் சங்கத்தையும் கட்டி எழுப்பி காங்கிரசின் திட்டத்தை தீவிரத் தன்மை கொண்டதாக மாற்ற அழுத்தம் கொடுத்தனர். சோஷலிச சமூகத்தை கட்டி எழுப்பும் வகையில் பிரிட்டிஷாரிடமிருந்து முழுமையான விடுதலை என்பதை காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியினர் குறி இலக்காக கொண்டிருந்தனர். காங்கிரசுக்குள் சோஷலிச திட்டங்களுக்கு பரவலான ஏற்ப்பை உருவாக்கவும், வெளியில் வலுவான விடுதலை போராட்டத்தை முன்னெடுக்கவும் தொழிலாளர்கள், விவசாயிகளை திரட்ட திட்டமிட்டனர்.

தேசம் குறித்த தொழிலாளி வர்க்க பார்வை இந்துஸ்தான் சோஷலிஸ்ட் ரிபப்ளிகன் ஆர்பியிடம் இருந்தது. அது தனது திட்டத்தில் “நாங்கள் திட்டமிடும் புரட்சி என்பது, அரசுக்கு எதிரான மோதலாக மட்டும் இருக்காது. இது ஒரு புதிய சமூக அமைப்பை நோக்கி இட்டுச் செல்லும். புரட்சி முதலாளித்துவத்திற்கு சாவு மணி அடித்து வர்க்க வேற்றுமையை ஒழிக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக அது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிறுவி, சுரண்டும் வர்க்கத்தை அதிகாரத்திலிருந்து விரட்டியடிக்கும்” காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி மற்றும் காந்திய வழிமுறைகள் மீதும் இந்த அமைப்பு அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தாலும், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களை கம்யூனிஸ்டுகள் திரட்டியது ஏகாதிபத்தியத்திற்கு எதிரான மக்கள் இயக்கங்களுக்கு ஆதரவு கொடுத்திட காங்கிரசில் இருந்த முதலாளித்துவ தலைமையை நிர்பந்தித்தது. இது அரசியல் அமைப்பு சட்டத்தின் கொள்கைகளை உருவாக்குவதற்கும், நாடாளுமன்ற, சட்டமன்ற அமைப்பு முறையை உருவாக்குவதற்கும் அழுத்தம் கொடுத்தது.

பின்னுக்குத் தள்ளப்பட்ட பெரும்பான்மை கலாச்சார தேசியவாதம்

அரசியல் அமைப்பின் பிரதான அம்சம் தாராளவாத முதலாளித்துவவாதிகளின் தேசியத்திற்கு ஆதரவாகவே உருவாக்கப்பட்டிருந்தாலும், அதன் அடிப்படை குணாம்சம் என்பது கலாச்சார தேசியம் சார்ந்ததல்ல. அது பன்முகப்பட்ட கலாச்சார குணாம்சங்களை கொண்டது. தொழிலாளி வர்க்கத்திற்கு போராடும் உரிமையை அது வழங்குகிறது. குறிப்பாக கூட்டுபேர உரிமையை அங்கீகரித்தல், நிலப்பிரபுத்துவ ஒழிப்பு, பன்முகப்பட்ட கலாச்சாரத்தை அங்கீகரித்தல்,அரசியல் சாசனத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளிட்டவைகளை குறிப்பிடலாம். அதேசமயம் இந்த சாசனத்தை உருவாக்குவதில் ஒரு கம்யூனிஸ்ட் இல்லாததன் விளைவு அது முதலாளிகளுக்கு ஆதரவான ஒன்றாக அமைந்தது. அதே நேரம் பொது தளத்தில் சமூக ஜனநாயக கருத்துக்களே ஆதிக்கம் செலுத்தியது. உழைக்கும் மககளை அணிதிரட்டி, பெரிய அளவிலான இயக்கங்களை இந்திய கம்யூனிஸ்ட்டுகள் நடத்தியதே இதை சாத்தியப்படுத்தியது. இதுவே ஆர்.எஸ்.எஸ், இந்து மகா சபாவின் தலைமை முன்வைத்த கலாச்சார பெரும்பான்மை தேசியவாதத்தை பின்னுக்குத் தள்ள முக்கியக் காரணமாக அமைந்தது.

பல்வேறு குழுக்களின் நலன்களை ஒருங்கிணைப்பதில் உள்ள ஏற்ற இறக்கங்கள், தங்களது அடையாளத்தையும், கலாச்சார வெளிபபடுத்தலையும் முன்வைக்கும் போராட்டமாக பரிணமித்தது. இருபதாம் நூற்றாண்டின் முதல் கால் பகுதியில் இதுபோன்ற கலாச்சார வெளிப்படுத்தல் பெரும்பகுதியான தலித் மற்றும் ஆதிவாசி மக்களை திரட்டுவதில் முக்கிய பங்காற்றியது. பெரும்பான்மை அடையாளங்கள் அவர்களை ஆதிக்கம் செலுத்தும் அரசியலுக்கு எதிரானதாக இது உருவானது. 1970களுக்கு பிறகு குஜராத் மற்றும் பீஹாரில் இந்துத்துவ தேசியவாதிகள் தங்களின் அரசியல் அமைப்பை மறுசீரமைப்பு செய்து கொண்டபோது இது மேலும் வலுப்பெற்றது. மத்திய இந்தியாவில் ஒடுக்கப்பட்ட பிரிவினரில் உள்ள மேம்பட்ட பகுதியினரை தங்களின் வளையத்திற்குள் உள்ளடக்க பெரும்பான்மை தேசியவாதத்தினர் முனைந்தபோது அடையாள அரசியல் இதற்கு எதிராக நின்றது.

அடையாள அரசியல்

முதலாளித்துவ அரசின் குறிப்பிட்ட பிரிவினரின் நலனுக்காக செயல்படுவது என்பது, பலதரப்பட்ட தொழிலாளி வர்க்கத்தின் கோரிக்கைகளின்பால் அரசின் அணுகுமுறையின் மூலம் வெளிப்படுகிறது. ஒடுக்கப்பட்ட சமூக குழுக்களின் துவக்க கால போராட்டத்திற்கு எதிரான செயல்களே இதை உறுதிப்படுத்தியது. அரசின் இத்தகைய செயல்பாடு அடையாள அரசியலை மேலும் வலுப்படுத்தியது. நீண்டகால ஓட்டத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் பெரும்பான்மையானோர் முதலாளித்துவ அமைப்பு முறையின் அதிகார வரைமுறையின் கீழ்நிலையிலேயே இருந்தனர். இது சமூகங்களுக்குள்ளேயே மாற்றங்களையும், வர்க்கமற்ற அரசியலையும் உருவாக்கியது.

மார்க்சியர்கள் அல்லாதவர்களால் ஆதிவாசி மற்றும் தலித் பிரிவினரிடையே உள்ள ஏற்றத்தாழ்வுகளையும், மற்றும் வளர்ந்துவரும் முரண்பாடுகளையும் காண இயலாது. தற்கால முதலாளித்துவத்தில் பெரும்பகுதி வேலையற்ற தொழிலாளர்கள் கூட்டமாக உருவாகி நிற்கும் தலித் மற்றும் ஆதிவாசி உழைக்கும் மக்களின் பிரச்சனைகளையும் அவர்களால் எதிர்கொள்ள இயலாது.

வர்க்க பார்வையற்ற அடையாள அரசியலால் வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்ட சமூகங்கள் மீது அக்கறையோடு செயல்பட்டு அவர்களை சிறிது பாதுகாக்கலாம். ஆனால் சமூக பார்வையுடன் கூடிய, அடிப்படையான சமூக மாற்றத்தை உருவாக்க அவர்கள் முனைவதில்லை. அதேசமயம் இப்போது ஒடுக்கப்பட்ட, சமூகங்களுக்கு கிடைக்கப்பெறும் சிற்சில உரிமைகளும், வாய்ப்புகளும் நீண்டகால போராட்டத்திற்கு பிறகே கிடைக்கப் பெற்றது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே இடது மற்றும் ஜனநாயக இயக்கங்கள் இதை வரவேற்று ஏற்க வேண்டும். வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்ட சமூக குழுக்களுக்கு கல்வி, வேலை உள்ளிட்டவைகளில் சம வாய்ப்பு என்கிற கோரிக்கை என்பது வர்க்க அடிப்படையிலான இடது மற்றும் ஜனநாயக போராட்டங்களுக்கும் முக்கியமான அம்சமாகும்.

3

சமூக குழுக்கள் தலைமையிலான போராட்டங்கள் மற்றும் வர்க்க அடிப்படையிலான போராட்டங்களுக்கிடையிலான உறவு குறித்த மறுபரிசீலனையை செய்வதற்கான கட்டாயத்தை இடது மற்றும் அதன் கிளை அமைப்புகளின் பெருந்திரள் போராட்டங்கள் உருவாக்கியது. இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய காலத்தில் நடைபெற்ற தெபேகா, தெலுங்கானா மற்றும் வார்லி போராட்டங்கள் இதற்கு சிறந்த உதாரணமகும். விடுதலைக்கு பிறகு நடைபெற்ற வார்லி மற்றும் திரிபுரா இயக்கங்கள் வர்க்க மற்றும் சமூக அமைப்புகளுக்கிடையிலான உறவுகளை பகுப்பாய்வு செய்ய உதவியது. விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் இடையேயான உறவுகளை வலுப்படுத்த தலித் மற்றும் ஆதிவாசி இயக்கங்கள் உதவிடும் என்ற புரிதல் ஏற்பட்டது. பல்வேறு குழுக்களின் தனித்தனி நலன்கள் மற்றும் உரிமைகளுக்கான கோரிக்கைகளை ஒருங்கிணைத்தல் என்பது பெரிய அளவிலான வர்க்க போராட்டத்தை கட்டியமைத்திட இடதுசாரிகள் தலைமையிலான விவசாய இயக்கத்திற்கு தேவையான முக்கியமான உள்ளீடாகும்.

கிராமப்புற தொழிலாளி வர்க்கம்

1980-ல் விவசாய தொழிலாளர்களுக்கான தனி அமைப்பு துவக்கப்பட்டது. அது தலித் மற்றும் ஆதிவாசி மக்கள் கிராமப்புற தொழிலாளி வர்க்கம் என்பதை அங்கீகரித்தது. விவசாய தொழிலாளர் சங்கத்தின் கொள்கை அறிக்கையில் “விவசாய இயக்கத்தை கட்டி எழுப்புவதில் விவசாய தொழிலாளர்கள் முக்கிய பங்கு வகித்தனர். நகர்ப்புற தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளிடம் ஒரு இணைப்பை அவர்கள் உருவாக்குகின்றனர். அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியகாவும் அவர்கள் மிகவும் மோசமான சுரண்டலுக்கு உள்ளாகின்றனர். இவர்களில் பெரும்பகுதியானவர்கள் தலித் மற்றும் ஆதிவாசியினரே. சமூக ரீதியாக சாதி இந்துக்களின் (ஆதிக்க சாதி) கைகளில் சிக்கிக்கொண்டு கடுமையான கொடுமைகளை எதிர்கொள்கின்றனர். விவசாய தொழிலாளர்கள் என்பவர்கள் தனி வர்க்கம் என்பதால், விவசாய தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்பு மற்றம் கூலி உயர்வுக்கான இயக்கங்களையும் தனியாக கட்டி எழுப்ப வேண்டியுள்ளது”. தலித் மற்றும் ஆதிவாசி விவசாய தொழிலாளர்களுக்கு, விவசாயிகளுடன் உள்ள இணைப்பை சாத்தியப்படுத்த, நிலத்திற்கான போராட்டத்தையும், நில சீர்திருத்தத்திற்கான கோரிக்கையும், அனைத்து ஊரக மற்றும் நகர்ப்புற தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு என்கிற கோரிக்கையையும் முன்நிறுத்த வேண்டும்.

4

ஆளும் வர்க்கம், ஆதிக்க தேசியவாதத்தின் மூலமாக கடந்த 20 ஆண்டுகளாக வேகமாக வளர்ந்து வரும் இந்து கலாச்சார தேசியம் என்பது கம்யூனிஸ்ட்டுகள் முன்னுள்ள பிரதான சவாலாகும். கலாச்சார தேசியத்தின் வரலாற்று ரீதியான வளர்ச்சியே இந்து ராஷ்ட்ரா என்கின்றனர். வரலாற்றியியலாளர்களின் ஆய்வின்படி மயூரிய சாம்ராஜ்ஜியத்திற்கு முந்தைய காலம் வரை ஆதிக்கம் செலுத்திய இந்து சமூகமோ, இந்து வாழ்க்கை முறையோ கிடையாது. மதத்தை பயன்படுத்தி அடுத்தடுத்து வந்த ஆட்சியாளர்கள் உழைக்கும் திரளில் இருந்து அடிமைகளையும், போர் வீரர்களையும், அதிகமான தானியங்களையும், அதிகமான பணத்தையும் அடைந்தனர். ஆயுத பலத்தை பயன்படுத்தியோ, நிர்பந்தித்தோ இதை அடையாமல் மதம் என்னும் தத்துவத்தை பயன்படுத்தி எளிதாக இதை அடைந்தனர். இதை ஏற்காமல், தங்களின் குறுகிய அரசியல் ஆதாயத்திற்காக ஆர்.எஸ்.எஸ் வரலாற்றை தவறாக முன்நிறுத்துகின்றனர்.

தாய் மதத்திற்குத் திரும்ப வைப்பது

அனைவரையும் உள்ளடக்கிய ஆன்மீக ஜனநாயகம் இங்கு உண்டு என்கின்றனர் இந்துத்துவ தேசியவாதிகள். 1980களுக்கு பிறகு தங்களது சமூக தளத்தை விரிவுபடுத்தாமல் ஆதிக்கத்தை நிலைநாட்ட முடியாது என்பதை அவர்கள் புரிந்துக் கொண்டனர். எனவே தலித் மற்றும் ஆதிவாசி மக்களிடம் குறிப்பிட தகுந்த பணிகளை அவர்கள் மேற்கொண்டனர். இது தலித் மற்றும் மலைவாழ் மக்களிடையே ஊடுருவ அவர்களுக்கு வாய்ப்பளித்தது. உதாரணமாக வட இந்தியாவில் முதலில் தலித் மக்களை ஒருங்கிணைக்க ஒரு தளத்தை உருவாக்கி பிறகு தாய்மதம் திரும்ப வைப்பது என்கிற திட்டத்தின்படி செயல்பட்டனர். 2015-ல் கிராம அளவில் குழுக்கள் அமைத்து சாதிய பாகுபாட்டை முடிவுக்கு கொண்டுவருவது என்றும், அதன்பிறகு அடுத்த நகர்விற்கு செல்வது என்று ஆர்.எஸ்.எஸ் முடிவு செய்துள்ளது. முதல் முறையாக 75,000 கிராமங்களில் ஆர்.எஸ்.எஸ் மாவட்ட அளவில் கூட்டங்கள் நடத்தியுள்ளுது. குறிப்பாக தேர்தல் நடந்துள்ள பஞ்சாப், உத்திரப்பிரதேசத்தில் கவனம் செலுத்தியுள்ளனர்.

இக்குழுக்கள் ஆதிக்க சாதியினரிடம் உரையாடல்களை நடத்த துவங்கிவிட்டதாகவும், “ஒரு கிராமம், ஒரே கிணறு, ஒரே சுடுகாடு” என்கிற முழக்கத்தை முன்வைத்து தங்களை சாதியத்திற்கு எதிரானவர்களாக காட்ட முயற்சிக்கிறது. இதை நியாயப்படுத்த அம்பேத்கரை இஸ்லாமியர்கள் மற்றும் கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிரானவர்களாக காட்ட முயற்சிக்கின்றனர்.

சமூக ஒற்றுமை என்ற போலி பிரச்சாரம்

இந்துயிசம் தான் தீண்டாமைக்கான ஆரம்பப் புள்ளி என்பதை தலித் இயக்கங்கள் வலுவாக முன்வைப்பதை எதிர்கொள்ள, அம்பேத்கர் சமூக ஒருமைப்பாட்டையும், ஒன்றுப்படட இந்து சமூகத்தையுமே விரும்பினார் என்று அம்பேத்கரின் 125வது பிறந்தநாளை முன்வைத்து பரவலாக பிரச்சாரம் செய்தனர். சமூக ஒற்றுமை என்பதை மட்டும் பேசி சமூக சேவை மற்றும் ஆதிக்க சாதியினருடன் ஒரு சமரசத்திற்கும் அவர்கள் சென்றனர். அதாவது, தலித் மக்கள் இந்து சமூகத்திற்குள் ஒருங்கிணைக்கப்படுவது என்பது ஆதிக்க சாதியினரின் கட்டளைகளை அவர்கள் ஏற்கும் பட்சத்தில்தான் நடக்கும் என்ற சமரசத்தையும் முன்வைத்துள்ளனர். இதற்காக 2016-ல் விஷ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட தனது துணை அமைப்புகளை வைத்து மேல்நிலை கூட்டம் ஒன்றையும் ஆர்.எஸ்.எஸ் நடத்தியது. இதன் அறுவடையை 2016 உத்திரப்பிரதேச தேர்தலில் அவர்கள் அடைந்தனர்.

இதேபோன்று தான் ஆதிவாசிகளின் அடையாளத்தை அழிக்கவும் ஆர்.எஸ்.எஸ் முனைகிறது. ஆதிவாசிகளை தங்களின் தனித்துவமான கலாச்சார அடையாளத்திலிருந்து ஆர்.எஸ்.எஸ் ஊழியர்கள் சொல்லும் குறிப்பிட்ட அடையாளத்திற்குள் கொண்டு வருகின்றனர். ஆதிவாசிகளிடையேயான இந்து தேசியவாதிகளின் பணிகளை 1940களில் மத்திய பிரதேச பகுதிகளில் பார்க்க முடியும். 1930களிலேயே சமஸ்தானங்களில் மதம் மாறுதல் தடை சட்டங்கள் இந்த மகா சபாவின் வற்புறுத்தலால் கொண்டுவரப்பட்டது. 1940களின் நடு பகுதியில் வலதுசாரிகள் மற்றும் காங்கிரசிற்குள்ளேயும், வெளியேnயும் கிருஸ்தவ மத மாற்றம் பற்றிய பிரச்சனை எழுப்பப்பட்டது. நியோகி குழு ஐந்தாவது பட்டியல் பகுதியில் (இந்தியாவின் மத்திய பகுதியில் உள்ள பத்து மாநிலங்கள்) கிருஸ்தவ அமைப்புகளுக்கு தடை விதித்தது. இது அப்பகுதியில் வனவசி கல்யான் என்கிற ஆர்.எஸ்.எஸ் துணை அமைப்பு செயலாற்ற 1950களில் அதிக வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. இது அவர்கள் 1970-80 களில் முன்வைத்த தாய் மதம் திரும்புதல் என்கிற இரண்டாம் கட்ட செயலுக்கு உதவியது. இந்து தேசியம் எனும் பெரிய குடையின் கீழ் ஆதிவாசிகள் மற்றும் இதர சாதியினரை இணைக்கும் தோற்றத்தை அவர்கள் கொடுத்தனர். இது அரசியல் ரீதியாக பாஜகவின் தளத்தை விரிவுப்படுத்த உதவியது.

இந்து தேசியம்

வெவ்வேறான சாதிய, சமூக குழுக்களின் கூட்டணியால் விரிவான தளத்தை உருவாக்கி ஜனநாய சக்திகளை ஒதுக்குவதே இதன் நோக்கம். ஆர்.எஸ்.எஸ்-ன் இத்தகைய விரிவாக்கம் ஆதிவாசி மற்றும் தலித் மக்களை திரட்டுவதின் மூலம் மற்றவர்களை ஒதுக்கி வைப்பதே இப்போதைய அவர்களின் திட்டம். இதன் முதல் துவக்கம் 2008-ல் கந்தமால் கலவரத்தில் பட்டியல் பழங்குடியினரின் சலுகைகள் மதம் மாறாத பழங்குடிகளுக்குதான் கொடுக்கப்பட வேண்டும் என்ற முழக்கத்தை முன்வைத்தனர். இந்துத்துவ தேசியவாதத்தில் அனைத்து பிரிவினரையும் இணைப்பது என்ற முழக்கத்தோடே மற்ற இஸ்லாமிய, கிருஸ்தவ மதத்தினருக்கு எதிரான போக்கை வளர்க்கின்றனர். அடையாள அரசியல் இதற்கு ஏற்றாற்போல் கருத்துருவாக்கப்படுகிறது.

இப்படியான கருத்துருவாக்கம் தொடர்ந்து ஆளும் வர்க்கம் மற்றும் கார்ப்பரேட்டுகளால் பயன்படுத்தப்படுகிறது. அவர்களால் இயக்கப்படும் இந்துத்துவ தேசியவாதிகள் தாங்கள் செய்யும் கொடூரமான தேசியவாத செயல்களை நியாயப்படுத்த இவைகைளை பயன்படுத்திக் கொள்கின்றனர். இது ஆண்டர்சன், ஹாப்ஸ்வாம் முன்வைத்த முதலாளித்துவ தேசியத்தோடு பொருந்தும்.

தொழிலாளர்களின் தலைமையிலான சோவியத் அரசு இருந்தவரை அது சோஷலிச மாற்றை முன்வைக்க தொழிலாளி வர்க்கத்திற்கு உந்துதல் அளித்தது. தாராளவாத ஜனநாயக அரசியல் தலைமையிலான, சமூக சீர்திருத்தத்துடனான அரசு மூலதனம் என்ற கருத்தின் பிறப்பு, ஒரு சமரசத்திற்கான திட்டமாகவே கருதப்பட்டது. அணிசேரா நாடுகள் அனைத்திலும் இத்தகைய தலைமையை காண முடியும். சோவியத் அணுபவத்தின் முடிவுக்கு பிறகும், சந்தை பொருளாதாரத்திற்குள் சீனாவின் பயணத்திற்கு பிறகும், தேசிய முதலாளிகளுக்கான ஒரே மாதிரியாக இருப்பது வட அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நடைமுறைகள் மட்டுமே. இது மாற்றத்தை விரும்பாத, தேசிய அரசை விரும்பும் அரசியல் கலாச்சாரத்தை உலகம் முழுவதும் வெளிப்படுத்துகிறது. இந்தியாவில் கார்ப்பரேட்டுகளின் உதவியோடு சமூக ரீதியாக பிற்போக்குத்தனமான, மாற்றத்தை விரும்பாத இந்துத்துவ தேசியவாதம் பரவுவதும் இதன் ஒரு பகுதியாகவே பார்க்க வேண்டியுள்ளது. ஆளும் வர்க்க தேசிய அரசு பழமைவாதத்தை முறைமையாக்கி, தாராளவாத ஜனநாயக அரசுகள் செய்திருந்த சமூக சீர்திருத்தத்தை கூட தடுக்கின்றனர். அமெரிக்கா, மத்திய ஐரோப்பா, ஐரோப்பா என உலக அளவில் இது காணப்படுகிறது. “உச்சகட்ட நிலையின் காலம்எனும் ஹாப்ஸ்வோமின் புத்தகத்தில் அவர் குறிப்பிடுவதுபோல் வலதுசாரி தேசியவாதிகளின் பரவலுக்கு தேசிய முதலாளிகளுக்கும், சர்வதேச கார்ப்பரேட்டுகளுக்கிடையேயான கூட்டணியே காரணம்.

உருக்குலையும் ஒற்றுமை

5

மேலே விவாதித்தது போல் இந்துத்துவ கலாச்சார தேசியத்தின் ஆதிக்கம் மற்றும் பரவலுக்கு மூலதனத்தின் ஒருங்கிணைவு மற்றும் பிற்போக்கு சக்திகளுக்கு அதன் ஆதரவுமே காரணம். தொழிலாளி வர்க்கத்தின் மீதான இதன் தாக்கம் பெரிய அளவில் உள்ளது. பாரம்பரிய தொழிற் சங்கங்கள் முன்பு தொழிலாளர்கள் மத்தியிலான இந்த பிளவு பெரிய சவாலாக உள்ளது. அதே நேரம் அடையாள அரசியலுக்கும் இது வழிகோலுகிறது.

பல்வேறு விதமான அரசியல் அடையாளத்தை வெளிப்படுத்தும் விதமாகவும், கலாச்சார ரீதியான வேற்றுமைகளை ஏற்று அங்கீகரிக்கும் வகையில் உழைக்கும் மக்களின் ஒற்றுமையை விரிவுப்படுத்தும் புதிய வழிகளை வர்க்க அடிப்படையில் செயல்படும் இயக்கங்கள் கண்டடைய வேண்டும். இது தேசியவாதத்திற்கு மாற்றான ஒரு கருதுகோளை உருவாக்கலாம். பிரம்மாண்டமான சோஷலிச இயக்கத்தில் இவை பதியப்படலாம்.

இந்திய தேசம் அதன் பழமையான கலாச்சாரத்தை கொண்டு விளக்கப்படுகிறது. தற்கால சூழலுக்கு ஏற்ப பழைய கருத்துக்களை பொருத்திக் கொள்ளுதல், சகிப்பு தன்மை மற்றும் நெகிழ்வு தன்மை கொண்டதாக பார்க்கப்படுகிறது.

அறிவியலுக்கும், மதத்திற்குமான உறவு நிலை மாற்றம் என்பது சமூக சீர்திருத்தத்திற்கான வழிமுறைகளால்தான் மாறும் என்றே காந்தி, நேரு, அம்பேத்கர், பகத்சிங் என எல்லோரும் கருதினர். அறிவியல், அறிவியல் வளர்ச்சி, கலாச்சார ரீதியான அறிவியல் முனைப்பு அனைத்துமே சமூக உற்பத்தி உறவுகளோடு சம்மந்தபட்டதாகும்.

சுதந்திர இந்தியா பற்றி கம்யூனிஸ்டுகள்

சுதந்திர இந்தியா பற்றி கம்யூனிஸ்ட்டுகளுக்கு இரண்டு கருத்து இருந்தது. அவை ஒன்று, ஏகாதிபத்திய எதிர்ப்பு இரண்டு, மறுகட்டமைப்பின் மூலம் சமத்துவத்திற்கான சமூக பொருளாதார சீர்திருத்தமாகும். இளம் அரசியல் ஊழியர்களுக்கு பகத்சிங் எழுதிய இறுதிக் கடிதத்தில் (2 பிப் 1931) “அரசியல் விடுதலை இல்லாமல் தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் பொருளாதார சுதந்திரம் இல்லை” என குறிப்பிடுகிறார். பகத்சிங்கிற்கு அரசு பிரிட்டிஷாரிடமிருந்து இந்தியர்களுக்கு கைமாறுவதைவிட அரசியல் விடுதலை முக்கியமானதாகபட்டது. இந்தியாவை ஆட்சி செய்ய போகிறவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து சோஷலிச முறைமையை அமலாக்க வேண்டும் என்று விரும்பினார். 1925-ல் இந்துஸ்தான் சோஷலிஸ்ட் ரிபப்ளிக் ஆர்மியின் திட்டத்தில் தொழிலாளி வர்க்கத்திற்கு இரண்டு கடமைகள் இருப்பதாக குறிப்பிடப்படுகிறது. ஒன்று, அந்நிய முதலாளி வர்க்கத்துடனான இந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் கூட்டை எதிர்த்தல். இரண்டு, ஒரு சிலரின் கைகளில் அரசதிகாரம் செல்வதை எதிர்த்து போராட தொழிலாளிகளை திரட்டி சமூக மறுகட்டமைப்பை செய்ய வேண்டும் என்பதாகும். சோஷலிசம் என்பதே இந்தியாவின் 98 சதவீத மக்களின் உண்மையான விடுதலையாகும். இந்தியாவின் விடுதலை என்பது அனைத்து அடிமை தேசத்திற்கான விடுதலையாக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய சர்வதேச பார்வையுடன் கூடிய தேசியம் தான் அவர்களின் பார்வை. தேசியம் எனும் வகையிலும் விடுதலை வேண்டும், தேசத்திற்குள்ளும் ஒடுக்குமுறையிலிருந்தும், சுரண்டலிலிருந்தும் விடுதலை வேண்டும் என்பதே அவர்களின் கருத்தாகும்.

மத ரீதியான வெறுப்புணர்வு மற்றும் மத அடிப்படையிலான அரசியல், புரட்சியை பாதிக்கும் என்று நவஜுவான் பாரத் சபாவின் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. “இவர்களின் பிரித்தாளும் அரசியல் இந்து மற்றும் முஸ்லீம் மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கிறது” என்றனர். பிற்போக்குத்தனமான, பழமைவாத இந்துக்களும், தீவிரமான முகமதியர்களும் அந்நியர்களால் சுரண்டப்படுகிறார்கள் என்று 1926-ல் வெளியிடப்பட்ட திட்டம் குறிப்பிடுகிறது. இது இன்றும் கச்சிதமாக பொருந்தும். நரேந்திர மோடி மற்றும் மற்ற வலதுசாரி மத அடிப்படைவாதிகளே ஏகாதிபத்தியத்தின் அரசியல் மற்றும் பொருளாதார தரகர்களாகத்தான் உள்ளனர்.

சர்வதேசத் தன்மை கொண்ட சோஷலிஸ்ட் பார்வை

அனைவரையும் உள்ளடக்கிய உழைக்கும் வர்க்கத்திற்கான உரிமையை முன்வைத்து, வரலாற்றில் சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான கூடுதல் அக்கறையோடு, சமூக ஒருங்கிணைப்பை உருவாக்கி தொழிலாளி வர்க்கத்தை ஒன்றிணைத்து திரட்டுவதே கம்யூனிஸ்டுகளின் பணி. இதன் ஒரு சிறந்த சமீபத்திய உதாரணம் மகாராஷ்டிராவில் அகில இந்திய விவசாயிகள் சங்க போராட்டம். ஆதிவாசிகள் தங்களை விவசாயிகளாக உணர்ந்து பங்கேற்ற போராட்டமாகும். தேசியம் என்பதற்கான சோஷலிச பார்வை என்பது சர்வதேச தன்மை கொண்டது மட்டுமல்ல, உண்மையான ஜனநாயக அரசுக்காகவும், தேசத்திற்குள்ளேயே உள்ள சுரண்டலிலிருந்து விடுதலை என்பதற்காகவும் நிற்பதாகும்.

அதாவது வலதுசாரி முதலாளித்துவ தேசியம் என்பதற்கு மாற்றான, சாதி, மத வேறுபாடின்றி தொழிலாளி, விவசாயிகளை உள்ளடக்கிய சமூக பொருளாதார சமத்துவத்தை படைக்கும் மறுகட்டுமானமாகும்.

ஆளும் வர்க்கம் வெறுமனே இன, மத அடிப்படையிலான பெரும்பான்மை அடையாளம் ஒன்றை நிறுவுவதில் மாத்திரம் தங்கியிருக்க இயலாது. நாடு அல்லது தேசம் என்ற அடையாளமும் பயன்படுகிறது. நாட்டுக்கு எதிரான ஒரு பொது அந்நிய எதிரி இருப்பது வசதியானது. சீன, பாகிஸ்தான் மிரட்டல்கள் மட்டுமல்லாது, நேபாளம், பங்ளாதேஷ், இலங்கை உட்பட இந்தியாவின் அண்டை நாடுகளையும் இந்தியப் பாதுகாப்பிற்கு மிரட்டலாகக் காட்டலாம். இவை எவ்வாறு வர்க்க நலன்களைப் பேண உதவுகின்றன என்பதை அறிய வேண்டுமானால், தீவிர தமிழ் இன உணர்வு தட்டியெழுப்பப்பட்டு வருகிற தமிழ்நாட்டில், ஒரு காலத்தில் வட இந்தியாவைப் பகைவராகவே கண்ட ஒரு மாநிலத்தில், இப்போது ஒரு புறம் சீன, பாகிஸ்தான் விரோத இந்திய தேசப்பற்றும் அதேவேளை மலையாளிகட்கும் தெலுங்கர்கட்கும் கன்னடியர்கட்கும் எதிரான உணர்வுகளும் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றன. இவை எந்த வர்க்க நலன்களைச் சார்ந்த முன்னெடுப்புகள் என்பது கவனிக்க வேண்டிய விடயம். இவற்றின் நோக்கம் தமிழ்ச் சமூகத்தில் இருந்துவரும் வர்க்கச் சுரண்டலிலிருந்து கவனத்தைத் திசை திருப்புவதே என்பதை எளிதாக நாம் காணலாம். ஏனெனில் அவை அமெரிக்காவுடனான நட்பை வரவேற்கின்றன.

 3. அடையாளமும் விடுதலை அரசியலும்

ஆளும் அதிகார வர்க்கம் தனது நலன்களைக் காப்பாற்றவும் தனது சுரண்டும் வர்க்க, ஒடுக்குமுறை அடையாளங்களை மறைக்கவும் தனக்கு வசதியான ஒரு இன, மத, மொழி அடையாளத்தையோ அடையாளங்களின் சேர்க்கையையோ பயன்படுத்துகிறபோது, ஆளப்படுகிற வர்க்கங்கள் அதை எவ்வாறு எதிர்கொள்ளுவது என்ற கேள்வி எழுகிறது.

எந்தெந்த அடிப்படையில் சுரண்டலும் ஒடுக்குமுறையும் செயற்படுகின்றனவோ அவை சார்ந்து சுரண்டி ஒடுக்கப்படு வோரிடையே ஒற்றுமையை ஏற்படுத்த இயலும். ஆனால் அது எப்போதும் இயலுவதில்லை. எளிதாக நிகழுவதுமில்லை. ஒடுக்கு முறையாளர்கள் ஒடுக்கப்பட்ட மக்களிடையே உள்ள முரண்பாடுகளைப் பயன்படுத்துகிறார்கள். மேலும் பிளவுகளை ஏற்படுத்தும் விதமாக அடையாள வேறுபாடுகளை வலியுறுத்தவும் புதிய வேறுபாடுகளைப் புகுத்தவும் அவர்கட்கு முடிகிறது. எனவே ஒடுக்கப்பட்ட சமூகங்கள் ஒடுக்கிற சமூகம் பயன்படுத்துகிற அடையாள அரசியலுக்கு முகங்கொடுக்கக்கூடிய ஒரு அடையாள அரசியல் தந்திரோபாயத்தைப் பயன்படுத்த வேண்டியுள்ளது.

காலனிய எதிர்ப்புப் போராட்டங்களிலும், ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களிலும் அந்நிய ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான போராட்டங்களிலும், முக்கியமாக இடதுசாரிச் சிந்தனை வழிகாட்டிய சூழல்களில், ஐக்கிய முன்னணித் தந்திரம் வேறுபட்ட அடையாளங்களை ஒரு பொது எதிரி என்கிற அடையாளத்திற்கு எதிராக முன்னிறுத்தியே வெற்றிபெற்றுள்ளது.

அடையாளங்களிடையிலான முரண்பாடுகளில் நட்பானவை எவை பகைமையானவை எவை என்பதை விளங்கிக்கொள்ளும் போதே எதிரியைத் தனிமைப்படுத்துவதும் ஒடுக்கப்பட்ட மக்களை ஒன்று படுத்துவதும் இயலுமாகிறது. எனவே இந்த அடையாள அரசியல் ஒரே நேரத்தில் வேறுபட்ட அடையாளங்களை அங்கீகரிப்பதாகவும் அவற்றிடையே பொதுவான பண்புகளை வலியுறுத்துவதாகவும் அமைய வேண்டி நேரிடுகிறது.

குறுகிய நோக்குடைய அடையாளப்படுத்தல்கள் எவ்வாறு தோல்விக்கும் அழிவுக்கும் இட்டுச் சென்றுள்ளன என்பதற்குச் சமகால அரசியலில் நம்மை அண்டிய சூழல்களில் இரண்டு உதாரணங்களை நோக்கலாம். ஒன்று ஈழத்தின் தமிழ்த் தேசியவாத அரசியல். அது, முதலில் தமிழர் என்ற தெளிவீனமான அடையாளத் துடன் யாழ்ப்பாணக் குடாநாட்டு மேட்டுக்குடி நலன்களை முன் வைத்தது. பின்பு தமிழ்பேசும் மக்கள் என்ற அடையாளம் முன்வைக்கப்பட்டது. பின்பு தமிழீழம், தமிழ்த் தேசம் என்கிற அடையாளங்கள் முனைப்புப் பெற்றன. ஆனாலும் எந்த நிலையிலும் அதன் செயற்பாடு வட, கீழ் மாகாணத் தமிழர் என்ற எல்லையைத் தாண்டியதில்லை. அதேவேளை, முஸ்லிம்களதும் மலையகத் தமிழரதும் தனித்துவத்தையோ தேசிய இனங்களாக அவற்றின் விருத்தியையோ அது ஏற்கவில்லை. இன்று பிரதேசவாதத்திற்கு முகங்கொடுக்க இயலாமல் அது திணறுகிறது. ஒரு பொதுவான அடிப்படையைக் கட்டியெழுப்பச் சமூக அடையாளங் களை மூடி மறைப்பதும் அக முரண்பாடுகளை மறுப்பதும் தேவை யற்றது. அது மட்டுமல்லாது அது கேடானதாகவும் அமையலாம் என்பதற்குத் தமிழ்த் தேசியவாதத்தின் இன்றைய அவலம் ஒரு நல்ல உதாரணம்.

இரண்டாவதாக, தலித்தியம் என்ற பேரில் முன்னெடுக்கப்பட்ட அரசியல், சாதி அடிப்படையில் ஒடுக்கப்பட்ட மக்களை ஒன்று திரட்டத் தவறிவிட்டது. அது மட்டுமல்லாது, அது ஒடுக்கப்பட்ட மக்களின் நடுவே சாதி அடிப்படையிலான தனித்தனிக் கட்சிகளை உருவாக்க உதவியதேயொழியச் சாதி ஒடுக்குமுறைக்கெதிரான பொதுவான போராட்ட அணியை உருவாக்கத் தவறிவிட்டது. அது மட்டுமன்றி, இன்றைய தலித்திய அரசியல், தலித்துகளினிடையி லிருந்து உருவான ஒரு புதிய மேட்டுக்குடிகளின் உயர்வர்க்க நலன்களைப் பேணத் தலித்துகளை வாக்குவங்கிகளாகப் பயன் படுத்துகிற ஒரு போக்கையும் கொண்டுள்ளது. பாராளுமன்றத் தேர்தல் அரசியல், இந்துத்துவ மேட்டுக்குடிகளுடனான வர்க்க சமரசத்திற்கும் வழி செய்துள்ளதைக் கடந்த பத்தாண்டுகளிற் காண முடிந்தது. தொடர்ந்த பல போராட்டங்களின் மூலம் தலித்துகளின் சமூக உணர்வு நிலை வளர்ந்திருந்தாலும் சாதிய வர்க்க சுரண்டற் சமூக அமைப்பைத் தகர்க்கிற நோக்கில் அதை நெறிப்படுத்த இயலாத விதமாகவே தலித்தியச் சிந்தனை பயன்பட்டுள்ளது.

இங்கெல்லாம் பொதுமைப்பட்ட ஒரு அடையாளத்தால் அப் பொதுமையைப் பேண இயலாமல் மறிப்பது என்ன என்ற கேள்வி எழுகிறது. வர்க்க அடையாளம் என்பது திட்டமிட்டுப் புறக் கணிக்கப்பட்டு வந்ததை நாம் கவனித்தால் அதற்கான விடை கிடைக்கும். வர்க்க அடையாளம் வெறுமனே புறக்கணிக்கப் படவில்லை. அதை வலியுறுத்துவது தலித் அடையாளத்தை மறுப்பதாகும் என்றும் தலித் ஒற்றுமையைக் குலைக்கும் என்றும் பின்நவீனத்துவத்தின் துணையோடு தமிழகத்தின் தலித்திய வாதிகள் வற்புறுத்தியதை நாம் அறிவோம்.

தமிழ் தேசிய அரசியலோ தலித்திய அரசியலோ தமது அடையாளப்படுத்தல்கட்குப் புறம்பான அடையாளங்களையும் பொதுமைப்பட்ட அடையாளப்படுத்தல்களையும் மறுத்ததன் மூலம், தம்மைப் பலவீனப்படுத்திக்கொண்டனரே ஒழியப் பலப் படுத்திக்கொள்ளவில்லை.

மறுபுறம் வரட்டுத்தனமான முறையில் வர்க்க அடையாளத்தை முதன்மைப்படுத்திப் பிற அடையளாங்களின் முக்கியத்துவத்தை மறுக்கிற போக்கு உள்ளது. சந்தர்ப்பவாத இடதுசாரிகளை நான் இங்கு கருதவில்லை. மார்க்சியத் தூய்மை என்ற ஒன்றின் பேரில் வர்க்க முரண்பாடு தவிர்ந்த பிறவற்றின் முக்கியத்துவத்தை ஏற்க மறுக்கிற போக்குகளையே இங்கு கருத்திற் கொள்கிறேன். இவ்வாறான அணுகுமுறை தொழிலாளி வர்க்கத்தைக்கூட ஒற்றுமைப்படுத்த இயலாததாகவே உள்ளது. எனவே தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் சுரண்டப்படுகிற பிற வர்க்கங்களை அணி திரட்டுவது என்பது வெறுங் கற்பனையாகவே அமையும்.

வர்க்க அடையாளம், வர்க்க சமுதாயத்தில் அடிப்படையானது. சமுதாய விருத்திப் போக்கில் வர்க்கங்களின் தன்மையும் அமைப்பும் மாறியே வந்தாலும், உழைப்போர், உழைப்பை உறிஞ்சுவோர் என்ற பிளவு மேலும் ஆழப்பட்டு வந்துள்ளதே ஒழிய இல்லாதொழியவில்லை. எனவே அந்த முரண்பாட்டைப் புறக்கணித்து எந்தவிதமான சமூக அநீதியையும் போரிட்டு வெல்ல இயலாது.

ஆனால், குறிப்பிட்ட சூழல்களில் இனம், மொழி, மதம் போன்ற முரண்பாடுகள் மேலோங்கலாம். சாதி, பிரதேச அடிப்படையிலான முரண்பாடுகள் அவசரமான நடவடிக்கைகளை வேண்டி நிற்கலாம். பால் அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகட்கு எதிரான செயற்பாடு முக்கியமானதாகலாம். இவற்றுள் எந்தவொரு முரண்பாடும் பிறவற்றைவிடச் சமூக முக்கியமுடையதாகவும் அதனைக் கையாளாமல் பிற முரண்பாடுகளைக் கையாள இயலாதபடியும் அமையுமானால் அந்த முரண்பாட்டைப் பிரதான முரண்பாடாகவோ உடனடியான முரண்பாடாகவோ கொண்டு செயற்பட வேண்டிய தேவை ஏற்படுகிறது.

வர்க்க முரண்பாட்டை அடிப்படையானதாகக் கொண்ட மார்க்சிய லெனினியர்கள் உலகெங்கிலும் தேசிய விடுதலைப் போராட்டங்களையும் நிறவாத எதிர்ப்புப் போராட்டங்களையும் தேசிய இனங்களின் விடுதலைக்கான போராட்டங்களையும் சாதியத்திற்கு எதிரான போராட்டங்களையும் முன்னெடுத் துள்ளனர். அல்லது அவற்றுக்கு ஆதரவு வழங்கியுள்ளனர். பாலியல் அடிப்படையிலான ஆதிக்கத்திற்கெதிராக மார்க்சியர்களது குரல் எப்போதுமே வலுவானதாக இருந்து வந்துள்ளது.

இது எவ்வாறு இயலுமாகிறது? தேசியவாதிகளோ, தலித்திய வாதிகளோ, முதலாளியப் பெண்ணியவாதிகளோ ஏன் தம்முடைய குறிப்பான ஒடுக்குமுறை தவிர்த்த பிற ஒடுக்குமுறை களைக் கண்டு கொள்ள மறுக்கிறார்கள்? ஏன் சிலவற்றை ஏற்கிறார்கள்?

 இங்கேதான் அடையாளஞ் சார்ந்த உலக நோக்கின் முக்கியத்துவம் புலனாகிறது. பின்நவீனத்துவத்தின் பேரால் பொதுமைப்படுத்தல் ஏன் மறுக்கப்படுகிறது என்பது புலனாகிறது.

தனியே ஒரு அடையாளஞ் சார்ந்தே சமூக முரண்பாடுகளைப் பார்ப்பது அந்த அடையாளத்திற்கு உட்பட்ட அனைவரதும் நலன் சார்ந்ததல்ல என்பதையே இன, மத, சாதி அடையாளங்களின் அரசியலும் முதலாளியப் பெண்ணிய அரசியலும் உணர்த்தியுள்ளன. அடையாளங்களைத் தனித்தனியாகவோ சேர்த்தோ வலியுறுத்துகிற சக்திகள் அந்த அடையாளங்கட்கும் அப்பாலான வேறு அடையாளம் ஒன்றை மனதிற் கொண்டே அவ்வாறு வலியுறுத்தக் கூடும் என்பதை நாம் மறக்கலாகாது. அதாவது, ஈற்றில் வர்க்க நலன்கள் முதன்மைப்படுத்தப்படுகின்றன என்பதுதான் உண்மை. அவ்வர்க்க நலன்கள் பெருமளவும் ஒடுக்கும் வர்க்கம் ஒன்றினது நலன்களாக இருந்து வந்துள்ளதையும் நாம் காணுகிறோம். ●

தொழிலாளி வர்க்க அரசியல் தனியே தொழிலாளர் நலனை மட்டும் முதன்மைப்படுத்திப் பிற சமூக ஒடுக்குமுறைகளைப் புறக்கணிக்கும் என்றால் அது தொழிற்சங்கவாத அரசியல் போற் சீரழிய நேரும். மார்க்சியம் தொழிலாள வர்க்கத்தை முக்கியப் படுத்தியது, அதனால் மட்டுமே முழுச் சமூகத்தையும் விடுவிக்க இயலும் என்ற அடிப்படையிலேயாகும். எனவேதான், மாக்சியம் தனது விருத்திப் போக்கில் காலனிய விரோத, ஏகாதிபத்திய விரோதப் போராட்டங்களை ஆதரித்தது. மார்க்சியர்கள் அவற்றில் பங்கு பற்றியுள்ளனர். தலைமை தாங்கிப் போராடியும் உள்ளனர். இடதுசாரிச் செல்வாக்குள்ள தேசிய விடுதலைப் போராட்டங்கள் பிற சமூக ஒடுக்குமுறைகளைக் களைவதற்கான வழிகளையும் வகுத்துள்ளன.

அடையாள அரசியல் என்பது தெளிவான அரசியல் அடிப்படையில் அமையாதபோது தோல்விக்கும் ஆதிக்க வர்க்கங்களை வலுப்படுத்துவதற்கும் துணை போகிறதை நாம் காண்கிறோம். மாறாக அதன் அரசியலின் அடிப்படை தெளிவாக உள்ளபோது அது குறிப்பிட்ட அடையாளங்கட்கும் அப்பாற் சமூக விடுதலைக்கும் சமூக நீதிக்கும் பங்களிக்கிறது.

அடையாள அரசியல் ஒரு குறிப்பிட்ட சமூக அடையாள நலன்கட்குத் தன்னை வரையறுக்கும்போது தன்னைத் தனிமைப் படுத்துகிறது. அந்த அடையாளத்துக்குரியோர் ஒடுக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் உட்படுவதற்கான அடிப்படை முரண்பாடுகளை

அது ஆராயும்போது, அதன் அணுகுமுறை வேறுபட்டதாக அமைகிறது. அதன் போராட்டம் நீதிக்கான பிற போராட்டங் களுடன் இணைகிறது.

மார்க்சிய லெனினியத்தின் சிறப்பு என்னவென்றால், அடையாள அரசியலை அதன் அடையாளச் சிறையினின்று விடுவித்து நீதிக்கான பிற போராட்டங்களுடன் அதை இணைக்க வழிகாட்டும் ஆற்றலை மார்க்சிய லெனினியமே வரலாற்றிற் சிறப்பாக வெளிப்படுத்தி யுள்ளமையாகும்.

அடையாள அரசியல் எங்கிருந்து வந்தது?

எழுதியது குணசேகரன் என் –

Jan 10, 2013

1913

0

SHARE 

Facebook

 

Twitter

 

 

தமிழக அடையாள அரசியல் பற்றி ஏராள மான விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக் கின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது 20-வது அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றிய அரசியல், தத்துவார்த்தத் தீர்மானங்களில் அடை யாள அரசியல் எவ்வாறு உழைக்கும் மக்கள் ஒற்றுமையை குலைத்து வருகிறது என்பதை விரிவாக எடுத்துரைத்துள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சி பல நேரங்களில் அடையாளப் பிரச்சனைகளை உள்ளடக்கியதாக இருக்கின்றன. அனைத்து அடையாள அரசியல் சார்ந்த மக்கள் திரட்டல்கள் வர்க்க ஒற்றுமையை குலைத்தாலும் ஒடுக்குமுறைக்கு ஆளான மக்கள் உருவாக்கும் இயக்கங்களை வேறுபடுத்தி பார்க்க வேண்டியுள்ளது. எனினும், அத்தகு ஒடுக்கப் பட்ட மக்களின் எழுச்சிகளும் வர்க்க ஒற்றுமை எழுச்சியோடு இணைக்க வேண்டிய அவசிய முள்ளது. இதுவே, பெரும்பான்மையான உழைப் பாளி மக்கள் சுரண்டல் வாழ்க்கையிலிருந்து விடுதலை பெறுவதற்கான வழியாக அமைந் துள்ளது. சோசலிசம் நோக்கிய பாதையும் இதுவே.

தமிழக அடையாள அரசியல் விவாதத்தில் ஒரு முக்கியப் பங்கினை பேராசியர் ந.முத்து மோகன் ஆற்றியுள்ளார். அவரது தமிழ் அடை யாள அரசியலின் இயங்கியல் என்ற நூல் அடை யாள அரசியலின் பல பரிமாணங்களை விளக்கு கிறது. மார்க்சிய இயக்கவியல் பொருள்முதல் வாத அடிப்படையில் தமிழக அடையாள இயக் கங்களின் வரலாற்றை ஆராய்வதற்கு பேராசிரி யர் கடுமையாக முயற்சித்துள்ளார். ஆனால், அடையாள அரசியலுக்கு ஆதரவான அவ ருடைய அணுகுமுறை இடதுசாரி இயக்கங்களை கட்டுவதற்கு உதவிகரமாக அமையாது என்ற விமர்சனத்தை அழுத்தமாக குறிப்பிட வேண்டியுள்ளது.

அவரது நூலில் பொதுவான சில கருத்துக்கள் ஏற்கனவே அடையாள அரசியல் தமிழக நல னுக்கு உகந்ததா? என்ற இக்கட்டுரை ஆசிரியரின் கட்டுரையில் விவாதிக்கப்பட்டுள்ளது (தீக்கதிர், ஜனவரி 09, 2013). பின்வரும் கட்டுரையில் நூலில் பேராசிரியர் விவாதிக்கத் தவறிய அல்லது ஏற்றுக் கொள்ளாத ஒரு கருத்து விவாதிக்கப்படுகிறது.

தாராளமயம், அடையாள அரசியல்

அடையாள அரசியல் ஒரு வீச்சாக உரு வெடுத்தது, இருபதாம் நூற்றாண்டு காலத்தில் தான். குறிப்பாக, புதிய தாராளமயம், உலகம் முழுவதும் வேகமாக அமலாகத் துவங்கிய காலகட்டத்தோடு இணையான ஒரு நிகழ்வுப் போக்காக அடையாள இயக்கங்களின் வளர்ச்சி ஏற்பட்டது. பின் நவீனத்துவம் என்கிற தத்து வார்த்தக் கருத்துக்களும் இதையொட்டி வேக மாகப் பரவின. புதிய தாராளமயம், அடையாள அரசியல், பின் நவீனத்துவம் ஆகியவற்றின் இணைப்பை பேராசிரியர் கவனம் செலுத்த தவறியிருக்கிறார். மேலும். புதிய தாராளமயம் உழைக்கும் மக்களின் வாழ்வினை அழித் தொழிப்பு செய்கிற போது, அடையாள அர சியல் இயக்கங்கள் உழைக்கும் மக்களை ஒன்று பட்ட போராட்டத்தில் ஈடுபடுவதை தடுப்பதற்கு உறுதுணையாக அமைந்தன. ஆனால், பேராசிரியர் அடையாள இயக்கங் கள் ஒரு மீள் பார்வை என்ற கட்டுரையில் கீழ்க் கண்டவாறு குறிப்பிடுகிறார். அடையாள இயக் கங்கள் தோற்றம் பெற்றதே பின்னை நவீனத் துவத்திற்கு பிறகுதான் என்பது மிகவும் குறுக்கப் பட்ட சித்திரமாகத் தெரிகிறது (பக்கம் 2). இதில் பின் நவீனத்துவத்திற்கும் அடையாள அரசிய லுக்குமான வலுவான தொடர்பினை குறைத்து மதிப்பிடுகிறார் பேராசிரியர். புதிய தாராளமயம் தான் அடையாள அரசியல் மற்றும் பின் நவீ னத்துவ ஆதிக்கத்திற்கு உந்து சக்தியாக இருந் துள்ளது.

உலகமயம், தாராளமயம் ஏற்படுத்திய பொரு ளாதார சீரழிவுகள் அதிகம் பேசப்படுகின்றன. வர்க்க ஒற்றுமையை சீரழிக்க அது அடையாள அரசியலின் பெயரால் ஏற்படுத்தியிருக்கிற சேதாரம் அதிகம். ஆனால், பேராசிரியர்  உலக மய நிகழ்வோடு உருவான அடையாள இயக்க எழுச்சியை உயர்த்திப் பேசுகிறார்.

இன்று உலகமயமாக்கச் சூழலில் உலக மெங்கும் ஒவ்வொரு சிறு கூட்டமும் தன்னைத் தன் சொந்த மொழியிலேயே எடுத்துரைக்க  முன் வருகிறது. இது ஒரு மாபெரும் ஜனநாயக அசைவு, மக்கள் அரசியல் (பக்கம் – 26). அத் துடன் இடதுசாரி இயக்கங்கள் மீதும் குறை பட்டுக் கொள்கிறார்.

20-வது நூற்றாண்டு முழுவதிலும் சோச லிசம்/முதலாளியம் என்ற மிகப்பெரிய சர்வதேச முரண்பாட்டின் உக்கிரத்துனுள் சிக்கிக் கொண்ட நாம் நமது காலுக்கடியில் மிக அண் மையில் கொந்தளித்த எண்ணிலடங்காத நுண் முரண்பாடுகளை காணத் தவறிப் போனோம் (பக்கம் -25) என்று துயரத்தில் ஆழ்ந்து போகி றார். இதன் அர்த்தம் என்ன? இடதுசாரி இயக் கங்களும் தங்களது வர்க்கப் பார்வைகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு அடையாள அடிப்படையில் மக்களை கூறுபோடுகிற பணி யில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது தான்.

பேராசிரியரின் பல வாதங்கள் ஆழ்ந்த விமர் சனத்திற்கு உட்படுத்தப்பட வேண்டியவை. அதற்கு முன்னர் இந்தியாவில் பின் நவீனத்துவ தத்துவார்த்த கருத்துக்களும் அடையாள அரசி யலும் எப்படி ஒரு பகுதி மக்களை கவ்விப் பிடித் துள்ளது என்று சற்று ஆராய வேண்டியுள்ளது. இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டவர்களில் முக்கியமானவர் மார்க்சிய அறிஞர் அய்ஜாஸ் அகமது. இந்திய அடையாள அரசியலின் உண் மையான முகத்தை அறிந்து கொள்ள அவரது ஆய்வு உதவுகிறது.

விடுதலைக்குப் பிறகான இந்திய வரலாற்றை மூன்றுக் கட்டங்களாகப் பிரித்து மூன்றாவது கட்டத்தில் அடையாள அரசியல் ஊடுருவுவதற் கான வாய்ப்பு எப்படி ஏற்பட்டது என்று விளக்கு கிறார்.

இந்திய அரசியல் மூன்று சட்டங்கள்:

முதல்கட்டம் என்பது 1947-லிருந்து 1970-களின் முற்பகுதி வரை. நேருவின் மாடல் என்றழைக்கப் படும் நடைமுறை கடைபிடிக்கப்பட்ட காலமாக இது இருந்தது. பல துறைகளில் தேசியமயம், வறுமை ஒழிப்போம் என்ற கோஷங்கள் போன் றவை எழுந்த காலமிது. இந்த காலகட்டத்தில், ஆட்சியிலிருந்த முதலாளித்துவ நிலப்பிரபுத் துவக் கூட்டணி வலுப்பெற்றது. முதலாளித்துவ மூலதனம் மெதுவாக வளர்ச்சி கண்டுவந்தது. வலுவான பொதுத்துறை, அரசு நிதி உதவியோடு அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி, அரசு நிதி ஒடுக்கீடு செய்த கல்விமுறை, அரசின் உடைமை யான வானொலி மற்றும் தொலைக்காட்சி ஊட கங்கள் என அரசு தலைமை தாங்கிய முதலாளித் துவ வளர்ச்சி ஏற்பட்டது. இவையனைத்துமே முதலாளித்துவ மூலதன வளர்ச்சிக்கு உதவின. இந்த காலகட்டத்தில் மொழி, உள்ளூர் மரபு கள், சாதி, உப சாதி பிரிவுகள் மாறுபட்ட  கலாச் சார நடைமுறைகள் என பல வகையில் இந்திய மக்கள் பிரிந்திருந்தனர். இது வேற்றுமையில் ஒற்றுமை என்று விளக்கப்பட்டது. மதச்சார் பின்மை, சமூக நீதிக் கருத்துக்கள் பரவலாக இந்திய சமூகத்தில் நிலவியிருந்தன. கூடவே, ஆர்.எஸ்.எஸ், சாதி அடிப்படையிலான இயக்கங் கள் போன்ற பல பிளவுபடுத்தும் இயக்கங்களும் செயல்பட்டு வந்தன. பிற்காலத்தில் அடையாள அரசியல் எழுச்சிக்கு இவை ஏற்கனவே களம் அமைத்திருந்தன. விடுதலைக்குப் பிறகான இந்திய வரலாற்றில் இரண்டாவது கட்டம் நெருக்கடி நிலை பிர கடனம் செய்யப்பட்ட காலத்தில் (1975-ஆம் ஆண்டுகளில்) துவங்குகிறது. காங்கிரஸின் ஏக போகம் ஆட்டம் காண்கிற நிலை ஏற்படுகிறது. இந்திய அரசியலில் ஒரு நிலையற்ற தன்மை ஏற்படத் துவங்கியது. நரசிம்மராவ்-மன்மோகன் சிங் கூட்டணி 1990-ஆம் ஆண்டு துவக்கத்தில் புதிய தாராளமய சீர்திருத்தங்களை வேகமாக அமலாக்க துவங்கினார்கள். அவை ஏற்படுத்திய அதிருப்தி மற்றும் பல நெருக்கடிகள் எல்லாம் சேர்ந்து, 1990-களின் இறுதியில் வகுப்புவாத பாரதிய ஜனதா கட்சி ஆளுங்கட்சியாக உரு வெடுக்க வழிவகுத்தது.

இந்த காலகட்டத்தில் தான் நவீன இந்தியா வின் தூண்களாகப் போற்றப்பட்ட பொதுத் துறை, சுயசார்பு, மதச்சார்பின்மை, சுயேட்சை யான வெளியுறவுக் கொள்கை ஆகியன அனைத் தும் தாக்குதலுக்கு உள்ளாகின. 21-ஆம் நூற் றாண்டு துவக்கத்தில் காங்கிரஸ் கூட்டணியும் அதற்கு போட்டியாக வகுப்புவாதக் கொள்கை கொண்ட சங்பரிவாரும் ஆட்சி அதிகார போட்டிக்கான மையங்களாக மாறின. ஆனால், இந்த இரண்டுமே புதிய தாராளமயம், ஏகாதி பத்திய ஆதரவு ஆகிய இரண்டிலும் ஒருமித்த கருத்து கொண்டவையாக இருந்தன. 1975-1990 என்கிற காலகட்டம் நேருவின் காலத் திலிருந்து புதிய தாராளமயம் என்கிற கட்டத் திற்கு மாறிய காலகட்டமாகும். 1991-க்குப் பிறகு இன்று வரையிலான இந்த மூன்றாவது கட்டம் புதிய தாராளமயம் வலுவாக உறுதிப்பட்ட காலமாகும். 20 ஆண்டு கால புதிய தாராளமயம் உண்மையில் பின் நவீனத்துவ கருத்துக்கள் உள்ளே வருவதற்கான காலமாக அமைந்தது. பின் நவீனத்துவ கருத்துக்களில் மக்கள் அடையாள அடிப்படையில் தனித்தனி கூறுகளாக பிரிந்திட வேண்டும் என்கிற அந்த நிகழ்வு மிக ஆழமாக இந்த மூன்றாவது காலகட்டத்தில் உருவெடுத் தது. பெரும் ஏகபோக பணக்காரர்கள் ஒருபுறம் வறிய வாழ்க்கையில் அல்லாடிக் கொண்டிருக் கும் கோடானு கோடி மக்கள் மறுபுறம் என்கிற சமூக நிலை இந்த பின் நவீனத்துவ போக்கு களுக்கு அடித்தளமாக அமைந்தது.

அரசியல் மீது வெறுப்பு:

உயர் நடுத்தர வர்க்கம் மட்டுமல்லாது சாதா ரண நடுத்தர வசதிபடைத்தவர்களிடம் மேலோங் கியது. இதில் விவசாயம் சார்ந்த மேட்டுக்குடி மக்களும் அடங்குவர். புதிய நுகர்வு கடன் வசதி முறைகளால் சேமிப்பிற்கான முக்கியத்துவம் குறைந்து செலவு செய்வது ஒரு கலாச்சாரமாக மாறும் போக்கு வளர்ந்தது. மின்னணு ஊடகங் களின் வளர்ச்சி, சூறாவளி போன்ற தனியார் மயம், தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ச்சி போன்றவை அனைத்தும் இளைய மற்றும் வளர்ந்த தலைமுறை பிரிவினரிடம் மாறுபட்ட சமூக பார்வைகளை உருவாக்கின. அரசு அதிகாரிகள், கார்ப்பரேட் மூலதன சக்திகள், சட்ட விரோதமான செயல்களில் ஈடு படுவோர் என ஒரு பெரும் கூட்டுப் படையே உரு வாகத் துவங்கியது. இது அரசியலின் மீது கணிச மான பகுதியினரிடம் வெறுப்பு ஏற்படுத்தியது. இவ்வாறான முக்கியமான மாற்றங்கள் பின் நவீனத்துவ கருத்துக்களையும், அடையாள அரசி யலையும் கணிசமான பகுதியினர் வரவேற்பதற் கும் ஏற்றுக் கொள்வதற்கும் களம் அமைத்தன.

இந்திய பின் நவீனத்துவ அரசியல் வடிவங்கள் ஐரோப்பிய வடிவங்களிலிருந்து வேறுபட்டவை. பேராசிரியர் ந.முத்துமோகன் ஐரோப்பிய வகை அடையாள அரசியலையும் இந்திய அடையாள அரசியலையும் வேறுபடுத்தித்தான் ஆராய்கி றார். ஆனால், இந்திய அடையாள அரசியலின் தனித்த இயல்புகள் அவர் கருதுவது போன்று மெச்சத்தக்க விளைவுகளை ஏற்படுத்தவில்லை. சமூக இயக்கங்கள், சிவில் சமூக அமைப்புகள் என்கிற பெயர்களில் ஏராளமான மக்கள் திரட் டப்பட்டார்கள். இப்படிப்பட்ட அமைப்புகள் அரசு சாரா அமைப்புகளின் நிதி உதவியோடு செயல்பட்டன. இந்த வார்த்தைகளை நாம் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். சமூக இயக்கம் என்று சொல்லுகிற போது அது அர சியல் இயக்கம் என்கிற கருத்தாக்கத்திலிருந்து மாறுபட்டது. அரசியல் அதிகாரம், அரசு ஆகிய அனைத்தும் ஊழல், நேர்மையற்ற நடைமுறைகள் நிறைந்ததாக  அவை ஒதுக்கப்பட வேண்டும்; அரசியல் கட்சிகளே தேவை இல்லை.

அரசியல் பார்வை கொண்ட தொழிலாளர் இயக்கங்களும் தேவை இல்லை என்கிற இந்தப் பார்வையி லிருந்துதான் அரசியல் என்கிற வார்த்தை அகற்றப்பட்டு சமூக என்கிற வார்த்தை சேர்க்கப் பட்டு சமூக இயக்கம் என பரவலாக பேசப்பட்டது.

அரசியல் அதிகாரம் என்கிற பிரச்சனையைத் தவிர்த்து தனிநபர்கள், உள்ளூர் சமூகக்குழுக்கள் ஆகியவற்றை பலப்படுத்துவதும் அவர்களின் அன்றாடப் பிரச்சனைகளில் செலுத்துவதுதான் முக்கியமானதாக வலியுறுத்தப்பட்டது. சிவில் சமூகம் என்கிற வார்த்தை இடையறாமல் பயன் படுத்தப்படுகிறது. இதன் அர்த்தம் அரசு, அரசின் பொறுப்புகள் என்பன பற்றி அதிக முக்கியத் துவம் கொடுக்காமல் சிவில் சமூகத்திலுள்ள மக்களைப் பற்றியும் அவர்களின் பிரச்சனை களைப் பற்றியும் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

இவையனைத்தும் அரசு சாரா தன்னார்வ அமைப்புகளால் ஊக்கமளிக்கப்படுகிறது. இத்தகைய பல அமைப்புகள் அரசிடமிருந்து சுயேட்சைத் தன்மையோடு இருக்க வேண்டு மென்பதற்காக அரசிடம் நிதி பெறுவதில்லை. மாறாக வெளிநாட்டு அரசுகளின் நிதி, ஜெர்மன் பவுண்டேசன்கள், ஐ.நா.வின் பல நிறுவனங்கள், பிரிட்டிஷ் அரசின் ஆக்ஷன் எய்டு அமைப்பு, உலக வங்கி, போர்டு பவுண்டேசன் போன்ற அமைப்புகளிடமிருந்து பல தன்னார்வ நிறுவ னங்கள் நிதி பெற்று வந்தன. சமீப காலங்களில் இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களும் அரசு சாரா அமைப்புகளுக்கு நிதியளித்து அவற்றை வளர்த் திட பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. இந்த செயல்பாடுகளுக்கு இந்திய அரசு தேவை இல்லை. அரசுக்கு வெளியிலிருந்து நிதி பெறுவது தான் சரியானது என்ற கண்ணோட்டம் பின்பற்றப்பட்டு வந்துள்ளது.

உள்ளூர் செயல்பாடு:

உள்ளூர் மட்டத்திலான பணி, பிரச்சனைகள் அடிப்படையில் உள்ளூர் சமூகங்களைத் திரட்டு வது இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் புதிதல்ல. கம்யூனிஸ்ட்டு கட்சிகள் உள்பட பல அமைப்பு கள் நீடித்த உள்ளூர் மட்ட மக்கள் திரட்டல் களில் இயக்கங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் இவை தேசிய அளவில் விவசாயிகளை யும் உழைக்கும் வர்க்கங்களையும் சுரண்டலி லிருந்து விடுதலை செய்வதற்கான தேசம் தழுவிய இயக்கத்தின் பகுதியாகத்தான் உள்ளூர் இயக் கங்கள் அமைந்தன.

தற்போதைய அரசு சாரா அமைப்புகளின் தன்மை என்னவென்றால் அவர்கள் முழுவதும் உள்ளூர் செயல்பாடு, சிறு சிறு குழு என்பன வற்றை மையமாக வைத்து செயல்படுகின்றன. தேர்தல் அரசியல் மீது வெறுப்பு உருவாக்கப் படுகிறது. வர்க்கங்கள், சுரண்டலிலிருந்து விடு தலை, தொழிற்சங்கப் பணி என அனைத்தும் வெறுத்து ஒதுக்கப்படுகிறது. கம்யூனிச எதிர்ப்பு இதில் ஒரு முக்கியமான அங்கமாக இருக்கிறது. இடதுசாரி போர்வையில் செயல்படும் பல குழுக்கள் கம்யூனிஸ்ட்டு கட்சிகளை குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை எதிர்ப்பவை யாக செயல்பட்டு வருகின்றனர். கம்யூனிஸ்ட்டு எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு நீண்ட காலமாக தன்னார்வ குழுக்களுக்கு நிதி வழங்கப்பட்டு வருகிறது. அமெரிக்க சிஐஏ-வின் பணம் இத்தகு செயல்பாடுகளுக்கு ஆசிய நாடுகளுக்கும் ஆப்ரிக்க நாடுகளுக்கும் தொடர்ந்து அனுப்பப் பட்டு செலவிடப்படுகிறது.

புதிய தாராளமயத்தில் கல்வி, சுகாதாரம் போன்ற சமூக நல நடவடிக்கைகளிலிருந்து அரசு விலகுவது முக்கியமானது. அந்த இடத்தில் தன்னார்வ குழுக்கள் முக்கியப் பங்கினை வகிக் கின்றன. சமூக நல நடவடிக்கைகளை மேற் கொள்வது என்ற பெயரில் ஒரு சிறு பகுதி யினருக்கு சில நன்மைகளை ஏற்படுத்தி மக்கள் துண்டு துண்டான இயக்கங்களில் அணி சேர்க் கப்படுகின்றனர். இப்படி அரசியலே துண்டு துண்டாக சிதறடிப்பது, அமைப்பு ரீதியான வலுவான ஆளும் வர்க்கத்தையும் அரசையும் எதிர்க்கிற மாற்று அரசியல் உருவாவது தடுக்கப் படுகிறது. இத்தகு நிலை உலக மூலதனத்தின் நலன்களைப் பாதுகாக்க ஏற்றதாக அமைந் திருக்கிறது. இந்தப் பின்னணியில் பேராசிரியர் ந.முத்துமோகன் கம்யூனிஸ்ட்டுகளுக்கு வழங்கியிருக்கிற அறிவுரையை பரிசீலிக்க வேண்டும். இன்று திராவிட அரசியல் அம்மணமாகி நிற்கிறது…. ஆயின் அடையாள அரசியலுக்கு இன்னும் ஆற்றல்கள் உள்ளன. இவ்வேளையில் கீழிருந்து தமிழ் அடையாளத்தை கட்டியெழுப்பும் வேலை களை கம்யூனிஸ்ட்டுகள் செய்ய வேண்டியுள்ளது. கீழிருந்து தமிழ் அடையாளம் என்பது விவசாயிகளுக்கு முக்கியப் பங்கு உண்டு. நிலம், சுற்றுச் சூழல், நீராதாரங்கள், நாட்டுப்புற மக்கட் பண்பாட்டு, போர்க்குணம் சார்ந்த தமிழ் அடையாளம் கட்டியெழுப்பப்பட வேண்டும். (பக்கம் – 28) இந்த அறிவுரை தெரிந்தோ தெரியாமலோ உலக மூலதன சக்திகளின் நலனை பாதுகாக்கிற முயற்சிகளுக்கு வலுசேர்ப்பதாக அமைந்திடும்.

உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாது காக்க நடத்தப்படும் போராட்டங்கள் அவசியம். ஒடுக்கப்பட்ட மக்களின் தனித்த அடையாளங் கள், முற்போக்கான பண்பாட்டு கூறுகள் ஆகிய வற்றிற்கான போராட்டங்கள் வலுவடைய வேண் டும். ஆனால், இவை நாடு தழுவிய தொழிலாளி-விவசாயி வர்க்கக் கூட்டணியை பலப்படுத்தும் நோக்கம் கொண்டதாக இருக்க வேண்டும். இந்த வர்க்கத் திரட்டல்தான் சமூக ஒடுக்குமுறைகளை ஒழிப்பதோடு சோசலிச சமூக மாற்ற கடமை யையும் நிறைவேற்றிடும்.

Related

இயக்கவியல் கண்ணோட்டத்தில் அடையாள அரசியல்

எழுதியது ஆசிரியர் குழு –

1430

0

SHARE 

Facebook

 

Twitter

 

 சு.ஜெகஜீவன்

இயற்கை விஞ்ஞானமும் சமூக விஞ்ஞானமும்

இயற்கையை, அதாவது மனிதர்களிடமிருந்து தனித்து இயங்கும் பொருளாயத உலகை ஆராய்ந்து அறிகின்ற துறைகள் இயற்கை விஞ்ஞானத் தொகுப்பில் இடம் பெறுகின்றன. இயற்கையை எவ்வித மனித உணர்வுகளின் கலப்புக்கும் இடம் கொடுக்காமல் அதன் இருப்பை கணக்கிலெடுத்துக்கொண்டு ஆராய்வதாகும். இந்த ஆய்வுக் கண்ணோட்டம் பொருள்முதல்வாதக் கண்ணோட்டம் எனப்படுகிறது.

பொருள்முதல்வாதத் தத்துவம் இயற்கை விஞ்ஞானத்துடன் நெருங்கியத் தொடர்பை பெற்றுள்ளது. மேலும் பொருள்முதல்வாதத்திற்கென ஒரு நீண்ட வரலாறு உள்ளது. இது பண்டைய காலத்திலேயே தோன்றியது. உலகைப் பற்றிய பொதுக்கண்ணோட்டத்தை பண்டைக்காலப் பொருள்முதல்வாதிகள் கொண்டிருந்தாலும் விஞ்ஞான வளர்ச்சியின்மையின் காரணமாக திட்டவட்டமான விஞ்ஞானங்களை ஆதாரமாக இவர்கள் கொண்டிருக்கவில்லை.

சகலவித ஞானத்தையும் ஒன்றிணைத்து இயற்கையை ஆராயும் முறை, அதாவது பொருள்முதல்வாதத்தின் ஏறக்குறைய பூர்த்தியடைந்த வடிவம் 17-18ஆம் நூற்றாண்டுகளில் தோன்றியது. ஆனாலும் இது முக்கிய குறைபாட்டைக் கொண்டிருந்தது. உலகின் வளர்ச்சி, அதன் சகல தோற்றங்களிடையே உள்ள பரஸ்பரத் தொடர்ச்சி ஆகியவற்றை தொடர்ந்து கடைப்பிடிக்க முடியாமல் போனதால் இது இயக்க மறுப்பியல் பொருள்முதல்வாதம் என்ற குறைக்கு ஆளானது.

இதன் பிறகு உலகை இடையறாத இயக்கம் மற்றும் வளர்ச்சி நிலைகளில் அணுகவும், உலகின் சகலவித தோற்றங்களும் பரஸ்பரத் தொடர்பிலும் செயல்பாட்டிலும் உள்ளன என்பதை நிரூபிக்கும் வகையில் இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்ற விஞ்ஞானம் கார்ல் மார்க்சால்    வெளியிடப்பட்டது. இந்த விஞ்ஞானத் தத்துவத்தின் முக்கிய அம்சம் என்னவெனில், இயற்கையில் உள்ள இயக்கவியலை சமூகத்திற்கும் பொருத்தி வெற்றிக்கண்டதேயாகும். இயக்கவியல் கண்ணோட்டம் சமூகத்தின் மீது பிரயோகிக்கப்படும்போது அது வரலாற்று இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்ற உயர்தர வடிவத்தை அடைகின்றது.

வரலாற்றுப் பொருள்முதல்வாதம்

பொருளை முதலாகக் கொண்டே உலகம், உயிரினங்கள் அனைத்தும் தோன்றி வளர்ந்தன என்பது பொருள்முதல்வாதம் எனப்படும். இக்கோட்பாட்டின் மூலவர் ஜெர்மன் தத்துவஞானி ஃபாயர்பாக் (1804-1872) ஆவார். இவரது ஆசிரியரான மற்றொரு ஜெர்மன் தத்துவஞானியான ஹெகல் (1770-1831) இயங்கியல் கோட்பாட்டை முன்வைத்தவராவார். உலகின் பொருளாயதத் தன்மையையும் அப்பொருள்களிலுள்ள இயங்கியலையும் (அதாவது பொருட்கள் அனைத்தும் இடையறாத இயக்கத்திற்குட்பட்டவை என்பதையும்) இணைத்து இயக்கவியல் பொருள்முதல்வாதக் கோட்பாட்டை வழங்கியவர் உலகறிந்த ஜெர்மன் தத்துவஞானியான கார்ல் மார்க்ஸ் ஆவார். பொருளானது இயக்கமற்ற வெறும் சடமல்ல; மாறிக்கொண்டே இருக்கிறது. பிற பொருட்களுடன் பரஸ்பர தொடர்புடையது. தொடர்பற்ற தனித்த பொருள் எதுவுமில்லை என்று இயக்கவியல் பொருள்முதல்வாதம் வாதிட்டது.

இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் அடுத்தகட்ட வளர்ச்சியை ஏற்படுத்தியதில்தான் கார்ல் மார்க்சின் அறிய கண்டுபிடிப்பு அடங்கியிருந்தது. அதுதான் இயங்கியல் பொருள்முதல்வாதத்தை சமுதாயத்தையும் சமுதாய வளர்ச்சியையும் அறிவதற்கான ஆய்வில் பொருத்திப் பார்த்ததாகும். இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை சமுதாயத்தின் மீது பிரயோகித்ததிலிருந்து உருவான சமூக விஞ்ஞானக் கோட்பாடே இயக்கவியல் வரலாற்றுப் பொருள்முதல்வாத கோட்பாடாகும். சமூகப் பிரச்சினைகளுக்கு பொருள்முதல்வாதத்தைப் பயன்படுத்துவதன் மூலம் கிடைக்கும் முதல் நெறிமுறை சமூகத்தில் ஏற்படும் மாறுதலும், வளர்ச்சியும், இயற்கையில் உள்ளது போன்று, புறவயமான விதிகளுக்கு உட்பட்டு இடம் பெறுகிறது என்பதாகும். இயற்கையில் உள்ளது போன்று சமூகச் செயல்முறையானது புறவயமான விதிகளில் கட்டுப்படுத்தப்படுகிறது.

உதாரணமாக புவி ஈர்ப்பு விதியில் இடம்பெறும் பொருள்களுக்கு இடையே உள்ள தொடர்பு என்பது நமது பிரக்ஞை, விருப்பம் ஆகியவற்றைச் சார்ந்தவையல்ல. நாம் அவற்றை கவனித்தாலும், கவனிக்காவிட்டாலும் நமக்கு விருப்பம் இருக்கிறது அல்லது இல்லை என்றாலும், இந்த விதி ஒரே மாதிரி வேலை செய்கிறது. இந்த விதிக்கு ஏற்றபடி நமது செயலை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும். ஏனென்றால் இதனை நம்மால் மாற்ற இயலாது.

சமூகச் செயல்கள் விதிகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன என்றால், அவை சமூகத்திற்கு பயன்பட வேண்டும். சமூகச் செயல்முறைகளில் சில ஒழுங்குகள் உள்ளன. சமூக நிகழ்வுகளுக்கு இடையே தொடர்புகள் உள்ளன. இவை நமது பிரக்ஞையையும், விருப்பத்தையும் சாராதவை. இவற்றை நாம் கவனிக்கிறோமோ இல்லையோ, இவற்றை நாம் விரும்புகிறோமோ இல்லையோ, இவை செயல்புரிந்து கொண்டே இருக்கின்றன.

அடையாள அரசியல்

அடையாள அரசியலின் மிக முக்கியமான அம்சங்களை எடுத்துக்கொண்டு அவற்றை அறிவியல் நோக்கில், அதாவது வரலாற்று இயக்கவியல் பொருள்முதல்வாத நோக்கில் பரிசீலிப்போம்.

அடையாள அரசியலில் முன்வைக்கப்படும் பல்வேறு கோட்பாட்டு நிலைகளை கவனமாகப் பரிசீலித்துப் பார்த்தால், அதிலிருந்து கீழ்வரும் சில முக்கிய அம்சங்கள் கிடைக்கின்றன.

             அடையாள அரசியல் என்பது பண்பாட்டு அரசியலாக முன்வைக்கப்படுகிறது.v

             அடையாள அரசியல் என்பது வித்தியாசங்களின் அரசியலாக முன்வைக்கப்படுகிறது.v

             அடையாள அரசியல் பொதுமைப்படுத்துதலை எதிர்க்கிறது.v

             அடையாள அரசியல் மையப்படுத்தலை எதிர்க்கிறது.v

பண்பாட்டு அரசியல்

இயங்கியல் வரலாற்று பொருள்முதல்வாதத்தில், பொதுவாக அரசியல் எனப்படுவது சமுதாயத்தின் மேற்கட்டுமானமாக அமைகிறது. குறிப்பாக பண்பாட்டை எடுத்துக்கொண்டாலும் அது மேற்கட்டுமானத்தில் உள்ள ஒரு அம்சமேயாகும். ஆனால் சமூக வளர்ச்சியிலும் மாற்றத்திலும் தீர்மானகரமான பங்காற்றுவது அடிக்கட்டுமானமேயாகும். ஒவ்வொரு சமூகமும் அதன் பிரத்தியேகமான  அடித்தளத்தையும் அதற்கு பொருத்தமான மேற்கட்டுமானத்தையும் கொண்டே இயங்குகிறது.

அடித்தளம் எனப்படுவது அக்காலத்திய உற்பத்தி உறவுகளின் தொகுப்பிலான பொருளாதார அமைப்பாகும். இந்தப் பொருளாதார அமைப்பு எனும் அடித்தளத்தில் ஏற்படும் மாற்றங்களே மேற்கட்டுமான அம்சங்களை தீர்மானிப்பதிலும் மாற்றுவதிலும் பங்காற்றுகின்றன. இதன்படி நாம் தற்போது முதலாளித்துவ, உற்பத்தி உறவுகளில் இருக்கின்றோம் என்பதும், நமது சமூக பொருளாதார அமைப்பு முதலாளித்துவ சமூக பொருளாதார அமைப்பு என்பதும் தெளிவாகின்றது. எனவே இந்த சமூக பொருளாதார அமைப்பை மாற்றுவதன் மூலமே இதன் மேற்கட்டுமானத்தில் பங்காற்றும் அரசியல், பண்பாடு, மதம் உள்ளிட்டவற்றை மாற்றியமைக்க முடியும் என்பது திண்ணம்.

நாம் இங்கு பரிசீலித்து வரும் பண்பாட்டு அரசியல் என்பது மேற்கட்டுமானத்தில் மட்டுமே மாற்றத்தையும் சீர்திருத்தத்தையும் கோருவதால் இது மாற்றத்தை ஏற்படுத்துவதில் விஞ்ஞான ரீதியில் தோல்வியடைகின்றது. மேற்கட்டுமானங்கள் அடிக்கட்டுமானத்தின் மீது தாக்கம் செலுத்தவே செய்கின்றன. என்றாலும் மேற்கட்டுமானத்துடன் ஒப்பிடுகின்ற பொழுது அடித்தளம்தான் முதன்மையானது என்ற உண்மையை அங்கீகரிப்பது சமுதாயத்தின் பிரச்சனைகளை பொருள்முதல்வாத வழியில், அதாவது அறிவியல் நோக்கில், தீர்ப்பதற்கு உதவுகிறது. ஆகவே பண்பாட்டு அரசியலாக முன்வைக்கப்படும் அடையாள அரசியலானது உண்மையில் தலைகீழ் அணுகுமுறையாக இருப்பதால் பெரும் குறைபாட்டிற்குள்ளாகிறது.

வித்தியாசங்களின் அரசியல்

மக்களிடையே பொதுத்தன்மை என்று எதுவும் இல்லை; வித்தியாசங்கள் அல்லது வேறுபாடுகளே மக்களிடம் மேலோங்கி நிற்கின்றன. இத்தகைய வேறுபாடுகளே அவரவரின் அடையாளங்களாகும். அவரவர் அடையாளங்கள் வேறுபடுவதுபோலவே அவர்களின் நலன்களும் அவற்றை அடைவதற்கான பாதைகளும் வேறுபட்டவைகளாக இருக்கின்றன. எனவே எல்லோருக்குமான பொது நலன், பொது வழிமுறை என்று எதுவும் இல்லை. பொதுவான நலன் என்று எதுவும் இல்லாதபோது பொது நலனுக்கு எதிரான பொது எதிரி என்பதும் இருக்க முடியாது.

பொதுவான எதிரி இல்லாதபோது, போராடுவதற்குரிய பொதுவான ஸ்தாபனம் (கட்சி) பொதுத்தலைமை (மையம்) பொதுவான தத்துவம் என்பதெல்லாம் இருக்க முடியாது. இவையெல்லாம் வேறுபாடுகளை பிரதானப்படுத்தி அடையாள அரசியல் முன்வைக்கும் வாதங்களாகும்.

இப்போது விவாதத்திற்கு வருவோம்.

இயங்கியல் அல்லது அறிவியல் ரீதியிலான கண்ணோட்டம் வேறுபாடுகளை எவ்விதம் கருதுகின்றது? உண்மையில் இயங்கியல் கண்ணோட்டம் வேறுபாடுகளை அல்லது வித்தியாசங்களை அவற்றின் முற்போக்கான அர்த்தத்தில் அங்கீகரிக்கவே செய்கின்றது. சமூக ஒடுக்குமுறைகளில் இருக்கும் படிநிலைகளையும் வேறுபாடுகளையும் தெளிவான பகுப்பாய்விற்கு உட்படுத்துவதிலேயே இயக்கவியலின் சிறப்பும் அடங்கியிருக்கிறது. எனினும் வேறுபாடுகளுக்கிடையேயான பொதுத்தன்மையை கண்டறிவதே இயக்கவியலின் முக்கிய குறிக்கோளாகும்.

வேறுபாடுகளே இல்லை எனும் பட்சத்தில் அவற்றிற்கிடையேயான பொதுத்தன்மையும் இருக்க முடியாதல்லவா? ஒரு மாம்பழமும் ஒரு ஆப்பிள் பழமும் வேறுபட்டவை என்ற உண்மைக்கிடையே இரண்டுமே பழங்கள் என்ற பொதுத்தன்மையையும் வேறுபாடுகளைக் காட்டி மறைக்க முடியாது. எனவே இந்த வித்தியாசங்கள் பொதுத்தன்மையை அடைவதற்குத் ‘தடை’ என்று கருதுவதற்குப் பதிலாக பொதுத்தன்மையை ஏற்கும்போதே வேறுபட்டவைகளின் ஐக்கியம் என்பது சாத்தியமாவதுடன் தனித்துவங்களும் பாதுகாக்கப்படுகின்றன; அல்லது பேணப்படுகின்றன.

அடையாள அரசியல், வித்தியாசங்களை முன்வைக்கும் போது பல்வேறு சமூக அடையாளங்கள் அல்லது சமூக குழுக்கள் அனுபவிக்கும் ஒடுக்குமுறைகள் யாவும் ஒரு பொது அமைப்பிற்குள் இருந்தே நிகழ்த்தப்படுகின்றன என்ற உண்மையைப் புறந்தள்ளி விடுகிறது. உலகமயப்படுத்தப்பட்ட சமூக பொருளாதார அமைப்பில் நாம் இருக்கிறோம் என்ற உண்மையை, அதாவது ஒரு பொது அமைப்பிற்குள் நாம் இருக்கிறோம் என்ற உண்மையை எவரும் மறுப்பதுமில்லை; மறுப்பதற்குமில்லை. அப்படி இருக்க ஒடுக்குமுறைக்குள்ளானவர்கள் சர்வதேச ஐக்கியத்திற்குள் வருவதுதான் நியதியாகும்.

ஆனால் அடையாள அரசியலானது ஒடுக்கப்படுவோர் இடையிலான சர்வதேசிய ஐக்கியத்திற்கு எதிராக தேசிய அடையாளத்தை முன்னிறுத்தி அதை உடைக்கின்றது. ஒரு தேச அளவில் சுரண்டப்படுவோர் அல்லது ஒடுக்கப்படுவோரின் ஐக்கியத்திற்கு எதிராக, மொழி மற்றும் தேசிய இன அடையாளங்களைக் காட்டி உடைக்கின்றது. மொழி வழியிலான அல்லது தேசிய இன அடிப்படையிலான ஐக்கியத்தை சாதி அடையாளங்களைக் கூறி உடைக்கின்றது. பாலின சமத்துவம், ஐக்கியம் என்பவைக்கு மாறாக பாலின வேறுபாடுகளை இணக்கம் காண முடியாதவாறு வேறுபிரிக்கிறது.

இந்த பிரித்தல், உடைத்தல் அல்லது கலைப்பு வேலை இன்னும் இன்னும் குறுகிக் கொண்டே சென்று, முடிவில் வறட்டு தனிமனித வாதத்திற்கு கொண்டுபோய் விடுகிறது. ஒப்பீட்டளவில் பேரமைப்பு ஒன்றை, அடையாள வேறுபாட்டைக் காட்டி சிறுசிறு முரண்பட்ட அமைப்புகளாக எளிதில் கலைத்து விடுகிறது. இவ்வாறு ஒவ்வொரு நிலையிலும் தான் முன்மொழியும் அமைப்பை தானே கலைத்துக் கூறுபோட்டுக் கொண்டே சென்று, முடிவில் ஒரு தனிமனிதனின் நலன் மற்றவனது நலனிலிருந்து வேறுபட்டது என கூறி அந்த தனி மனிதன் தனக்குத்தானே ஒரு அமைப்பு எனக் கருதவைக்கிறது. அந்த தனிமனிதன் இல்லாது போகும் நிலையில் அமைப்பற்ற வெறுமையே நிலவுவதாக காட்டும் அடையாளவாதம் ‘சமூகம்’ இல்லாத சூன்யத்தை ஸ்தாபிக்க முனைகிறது. வரலாறு நெடுகிலும் வளர்ந்து வந்துள்ள இன்றைய மனித சமூக பேரமைப்பு இத்தகைய சூன்ய வாதத்தை கணக்கிலெடுத்து கொண்டதே இல்லை.

எனவே, பன்முகச் சுயங்களுடையத் தன்னிலை என்பதை வலியுறுத்தும் ‘வித்தியாச அரசியல்’ என்பது வித்தியாசங்களைப் பெருக்கிக் கொண்டே செல்வதன் மூலம் அடையாளங்களைக் கூட்டிக் கொண்டே செல்கிறது. அடையாளங்களிடையே காணப்படும் வித்தியாசங்களை மட்டுமே வலியுறுத்துவதால் அடையாள அரசியல் கோட்பாடு சமூக ஒருமைப்பாட்டுக்கு எதிர்திசையில் பயணிக்கிறது. 

பொதுமைப்படுத்தலை எதிர்த்தல்

ஒட்டுமொத்த வரலாற்று நிகழ்வுகளைப் பொதுமைப்படுத்தி அறிவதும் புரிந்து கொள்வதும் சிக்கலான ஒன்றேயாகும். எனினும், நிகழ்வுகளை ஒட்டுமொத்தப்படுத்திப் பார்ப்பது என்பது எவ்வளவு சிக்கல் நிறைந்ததாக இருந்த போதிலும் அது மிகவும் அவசியமான ஒன்றாகும். மொத்தத்திலிருந்து தனியானவற்றை பிரித்தறிய முற்பட்டதாலும் தனித்தனியானவற்றை ஒட்டுமொத்தப்படுத்திப் பார்க்க முயன்றதாலுமே மனிதனின் சிந்தனாமுறை இன்றைய வளர்ச்சிக் கட்டத்தை அடைந்துள்ளது.

நமது அனுபவம் மற்றும் அறிவின் வளர்ச்சி குறைவான நிலையிலிருக்கும்போது நாம் அவற்றைத் தனித்தனியானவைகளாக காண்கிறோம். அனுபவம் மற்றும் அறிவு வளர்ச்சியடையும் போக்கில் நாம் தனியானவற்றின் ஒட்டுமொத்தத்தை கண்டறிவதில் வெற்றி பெறுகிறோம். இதே போலத்தான் எடுத்த எடுப்பிலேயே பொதுவான தோற்றத்தை, அதாவது ஒட்டுமொத்தத்தை காண்பதும் சாத்தியமே. இதுவும் அறிவின் ஒருவித குறைநிலையே. தொடர்ந்து மொத்தத்திலிருந்து தனியான கூறுகளை பிரித்தரிவதில்தான் மீண்டும் அறிவு பூர்த்தியடைகிறது. சுற்றியுள்ள உலகின் ஒவ்வொரு பொருளுக்கும், ஒவ்வொரு புலப்பாட்டிற்கும் அவற்றிற்கு மட்டுமே உரித்தான விசேஷ சிறப்பியல்புகள் உண்டு. முற்றிலும் ஒரே மாதிரியான இரு பொருட்களைக் கண்டுபிடிக்க இயலாது. ஒரே மரத்தில் உள்ள இலைகள் கூட ஏதோ சில குணங்களால் ஒன்றுக்கொன்று மாறுபடும்.

அதே நேரத்தில் உலகில் மற்ற பொருட்களுடனும் புலப்பாடுகளுடனும் பொதுவான அம்சங்களைக் கொண்டிருக்காத பொருட்களும் புலப்பாடுகளும் கிடையாது. பொருட்கள் எத்தகைய தனிச்சிறப்பான, தன்னிகரற்ற சிறப்பியல்புகளைக் கொண்டிருந்தாலும், இவையனைத்தும் பொருளாயத ரீதியானவை.  இதில்தான் இவையனைத்திற்குமான பொது அம்சம் இருக்கின்றது.

நிச்சயமாக பொதுவானதும் குறிப்பானதும் ஒன்றோடொன்று நெருக்கமாகப் பின்னிப் பிணைந்தவை. பொதுவானது குறிப்பானதில் மட்டுமே, குறிப்பானதின் மூலமாக மட்டுமே நிலவுகிறது. எந்த ஒரு குறிப்பானதும் அதே நேரத்தில் பொதுவானதுமாகும். உண்மையில், ‘மனிதன்’ எனும் கருதுகோள், அனைத்து மக்களுக்கும் பொதுவானதேயாகும். ஒவ்வொரு தனிநபரும் குறிப்பானது (ஒவ்வொருவரின் விசேஷ அம்சங்கள்) மற்றும் பொதுவானது (மனிதன்) ஆகியவற்றின் ஒருமைப்பாட்டை தன்னுள் கொண்டிருக்கிறான்.

பொதுவானது மற்றும் குறிப்பானது ஆகிய கருத்தினங்கள் உலகின் பன்முகத் தன்மையில் அதன் ஒற்றுமையை உணர உதவுகின்றன. புலப்பாடுகளின் வளர்ச்சியைப் புரிந்து கொள்ளவும் இந்தக் கருத்தினங்கள் முக்கியமானவை. இயற்கையிலும் சமுதாயத்திலும் எந்த ஒரு வளர்ச்சியும் ஏதோ ஒரு புதிய குறிப்பானதன் தோற்றத்தோடு தொடர்புடையது. அதோடுகூட அது பொது விதிகளுக்கும் கட்டுப்பட்டது. எனவே ஒவ்வொரு பொருளும் மொத்தமாகவும், அதே சமயத்தில் தனியாகவும் இருக்கிறது. “ஒரு தனிமொத்தத்தைப் பிரித்து அதன் முரண்பாடான பகுதிகளை அறிவதே இயங்கியலின் சாரம்சமாகும்” என்ற அறிவியல் கோட்பாடு சமூக அறிவியலுக்குப் பொருத்தப்படும்போது ஒவ்வொரு சமூகமும் மொத்தமாகவும் முரண்பாடான பகுதிகளாகவும் இருக்கின்றது என்பதும், இது தவிர்க்க முடியாதது என்பதுமான முடிவு பெறப்படுகிறது. ஆகவே வேறுபாடுகளிடையே பொதுத்தன்மை என்பது முக்கியமாகும்.

எனவே “சமூகக் குழுக்களின் அடையாளங்களை, நலன்களை இல்லாமலாக்குவதற்கு பொதுமையியம் இட்டுச்செல்கிறது” என்ற கருத்து அறிவியல் நோக்கில் அரைப்பார்வையுடையதாகும்.

மையப்படுத்துதலை எதிர்த்தல்

அடையாள அரசியல் முன்வைக்கும் மற்றொரு முக்கியமான பிரச்சனை மையம்-விளிம்பு பற்றியதாகும். மையப்படுத்தப்பட்ட அதிகாரம் அல்லது தலைமை என்பது விளிம்பு நிலையில் இருக்கும் சமூகக் குழுக்களை மேலாதிக்கம் செய்கிறது என்பது அடையாள அரசியல் முன்வைக்கும் நேரடியான வாதமாகும். இந்த மேலாதிக்கத்தைத் தகர்க்க வேண்டுமானால் மையமற்ற நிலையை உருவாக்க வேண்டும் என்றும், அப்போதுதான் அதிகாரமற்று இருக்கும் விளிம்புநிலை சமூகக் குழுக்கள் சுய அதிகாரம் பெற முடியும் என்றும் அடையாள அரசியல் கருதுகிறது. இக்கருத்து மையமும் விளிம்பும் சார்பானவை என்ற அறிவியல் கோட்பாட்டிற்குப் நேரெதிரானதாகும்.

மனித உடலில் நரம்பு மண்டலத்தின் எல்லா செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்கும் மையமாக மூளை இருக்கின்றது என்பதையும், நாம் வாழும் பூமிப்பந்தின் சுழற்சி ஒரு மையமின்றி நடைபெறவில்லை என்பதையும் எவ்வாறு மறுக்க முடியாதோ, அவ்வாறே சமுதாயத்தின் செயல்பாடுகள் அனைத்தும் ஏதோ ஒரு மையத்தில் ஒருங்கிணைக்கப்படுகிறது என்பதையும் மறுக்க இயலாது.

சமுதாயத்தில் செயல்படும் பல்வேறு வேறுபாடுகளைப் பற்றியும், அவற்றின் தனித்தன்மைப் பற்றியும் பேசும் அடையாளவாதம் மையமான வேறுபாடுகளைப் பேச மறுக்கிறது. குறிப்பாக சமுதாயத்தில் நிலவும் பிரதானமான அல்லது மையமான வர்க்க வேறுபாட்டைக் குறித்து பேசாமல், உதிரி வேலை செய்பவர்கள், பாலியல் தொழிலாளர்கள், திருநங்கைகள், பிச்சைக்காரர்கள் ஆகியோரின் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்துகிறது. இவ்வாறு செய்வதன் மூலமே அடையாள அரசியல் விளிம்புநிலை வாதத்திற்குள் வருகிறது.

எந்தவொரு சிக்கலையும் புரிந்துகொள்ளவும் அதற்கு தீர்வு காணவும் அந்த சிக்கலின் தனித்தன்மையை புரிந்து கொள்ளும்  அதே நேரத்தில், அது பல்வேறு காரணிகளுடன் எவ்விதம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது என்பதைக் காண்பதே மிக முக்கியம் ஆகும். இதையே அனைத்து இயற்கை விஞ்ஞானங்களும் சமூக விஞ்ஞானங்களும் வலியுறுத்துகின்றன. இதை நிறுவும் பொருட்டு ஓரிரு உதாரணங்களைக் காண்போம்.

தாவரவியலில், ஒரு விதையானது வளருவதற்கு அந்த விதை தன்னளவில் வீரியம் மிக்கதாக இருக்க வேண்டும் என்பது உண்மையே. இதைக்கடந்து அந்த விதை முளைப்பதற்கு முதலில் அது மண்ணின் சாதக நிலையைப் பெற வேண்டும். நீர் ஆதாரத்தைப் பெற வேண்டும். சூரிய ஒளியைப் பயன்படுத்த வேண்டும். ஏனைய புற அபாயங்களிலிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும். இவ்வாறு ஒரு தாவரத்தின் வளர்ச்சியோ அல்லது அழிவோ அனேக காரணிகளால் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கிறது.

மனித உடற்கூறியல் மேற்கண்ட விளக்கத்திற்கு மேலுமொரு சிறந்த உதாரணமாக இருக்கின்றது. மனித உடலில் பல்வேறு தனித்தன்மை வாய்ந்த உறுப்புகள் இருக்கின்றன; செயல்படுகின்றன. இவை ஒவ்வொன்றின் செயல்பாடுகளும் தனித்தன்மை நிறைந்தவைகளே. உடலில் உள்ள கைகள், கால்கள், கண்கள் காதுகள், மூக்கு போன்ற உறுப்புகள் ‘முழு உடல்’ என்ற ஒருங்கிணைப்பில் பொருந்தியிருக்கும் போதே இவற்றின் தனித்த செயல்பாடுகள் சாத்தியமாகின்றன. முழு உடலிலிருந்து துண்டிக்கப்பட்ட கைகளோ, கால்களோ இதர உறுப்புகளோ செயலற்று போகின்றன. உடலில் ஒருங்கிணைப்பு, முழுமை, உறுப்புகளின் சார்பு இவை எவ்வளவு தூரம் முக்கியத்துவமுடையன என்பது எளிதில் விளங்கக்கூடியதே.

இதுபோன்ற உதாரணங்களை ஒவ்வொரு துறை சார்ந்தும் எடுத்துக்காட்ட முடியும். சமுதாயம் என்பது மனித உடலின் முழுமையையும் ஒருங்கிணைப்பதை ஒத்ததே என்றால் அது மிகையன்று. சமுதாயம் என்ற முழுமையும் அதில் அங்கம் வகித்து செயல்புரியும் பல்வேறு சமூகப் பிரிவுகளையும் அதன் ஒட்டுமொத்தத்தில் வைத்தே காணவேண்டியுள்ளது. அதில் செயல்படும் பிரதான முரண்பாடு தீர்க்கப்படும் பட்சத்தில் சிறுசிறு முரண்பாடுகள் அதிக அளவில் ஒழிக்கப்படுகின்றன.

எனவே வேர்மட்ட அரசியல், நுண் அரசியல், வேறுபாடுகளின் அரசியல் என்றெல்லாம் விதவிதமாக முன்வைக்கப்படும் அடையாள அரசியலானது சிறுசிறு முரண்பாடுகளையும் வேறுபாடுகளையும் பூதாகரப்படுத்தி, சமூகத்தின் ஒருங்கிணைந்த மாற்றத்திற்கும் ஒடுக்கப்படும், அடிமைப்படுத்தப்படும் சுரண்டப்படும் மக்களின் ஒட்டுமொத்த விடுதலைக்கும் எதிராகவே நிற்கிறது என்பது நிரூபணமாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *