அடையாள அரசியலும் மார்க்சியத்தை உள்வாங்காமையும்
ஆளும் அதிகார வர்க்கம் தனது நலன்களைக் காப்பாற்றவும் தனது சுரண்டலையும் ஒடுக்குமுறை அடையாளங்களை மறைக்கவும் தனக்கு வசதியான அடையாளத்தையோ அடையாளங்களின் சேர்க்கையையோ பயன்படுத்துகிறபோது,அதாவது சாதி, மத, இன, மொழி மற்றும் பெண்ணியம் போன்ற அடையாளத்தை முன் நிறுத்தி ஒடுக்கும் வர்க்கம் அதை எவ்வாறு எதிர்கொள்ளுவது என்பதனை ஒடுக்கப் படும் வர்க்கத்தின் மீது ஏவுகிறது.
எந்தெந்த அடிப்படையில் சுரண்டலும் ஒடுக்குமுறையும் செயற்படுகின்றனவோ அவை சார்ந்து சுரண்டி ஒடுக்கப்படு வோரிடையே ஒற்றுமையை ஏற்படுத்த இயலும். ஆனால் அது எப்போதும் இயலுவதில்லை. எளிதாக நிகழுவதுமில்லை.
ஒடுக்கு முறையாளர்கள் ஒடுக்கப்பட்ட மக்களிடையே உள்ள முரண்பாடுகளைப் பயன்படுத்துகிறார்கள். மேலும் பிளவுகளை ஏற்படுத்தும் விதமாக அடையாள வேறுபாடுகளை வலியுறுத்தவும் புதிய வேறுபாடுகளைப் புகுத்தவும் அவர்கட்கு முடிகிறது.
ஆளும் வர்க்கம் வெறுமனே இன, மத அடிப்படையிலான பெரும்பான்மை அடையாளம் ஒன்றை நிறுவுவதில் மாத்திரம் காத்திருப்பதில்லை. நாடு அல்லது தேசம் என்ற அடையாளமும் பயன்படுகிறது. நாட்டுக்கு எதிரான ஒரு பொது அந்நிய எதிரி இருப்பது வசதியானது. சீன, பாகிஸ்தான் மிரட்டல்கள் மட்டுமல்லாது, நேபாளம், பங்ளாதேஷ், இலங்கை உட்பட இந்தியாவின் அண்டை நாடுகளையும் இந்தியப் பாதுகாப்பிற்கு மிரட்டலாகக் காட்டலாம். இவை எவ்வாறு வர்க்க நலன்களைப் பேண உதவுகின்றன என்பதை அறிய வேண்டுமானால், தீவிர தமிழ் இன உணர்வு தட்டியெழுப்பப்பட்டு வருகிற தமிழ்நாட்டில், ஒரு காலத்தில் வட இந்தியாவைப் பகைவராகவே கண்ட ஒரு மாநிலத்தில், இப்போது ஒரு புறம் சீன, பாகிஸ்தான் விரோத இந்திய தேசப்பற்றும் அதேவேளை மலையாளிகட்கும் தெலுங்கர்கட்கும் கன்னடியர்கட்கும் எதிரான உணர்வுகளும் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றன. இவை எந்த வர்க்க நலன்களைச் சார்ந்த முன்னெடுப்புகள் என்பது கவனிக்க வேண்டிய விடயம். இவற்றின் நோக்கம் தமிழ்ச் சமூகத்தில் இருந்துவரும் வர்க்கச் சுரண்டலிலிருந்து கவனத்தைத் திசை திருப்புவதே என்பதை எளிதாக நாம் காணலாம். ஏனெனில் அவை ஏகாதிபத்திய சுரண்டலை மூடி மறைக்கவே செய்கின்றன.
அடையாள அரசியலும் அதன் தோல்விகளும்
அடையாள அரசியல் எவ்வாறு தோல்விக்கும் அழிவுக்கும் இட்டுச் சென்றுள்ளன என்பதற்குச் சமகால அரசியலில் நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.
தலித்தியம் என்ற பேரில் முன்னெடுக்கப்பட்ட அரசியல், சாதி அடிப்படையில் ஒடுக்கப்பட்ட மக்களை ஒன்று திரட்டத் தவறிவிட்டது. அது மட்டுமல்லாது, அது ஒடுக்கப்பட்ட மக்களின் நடுவே சாதி அடிப்படையிலான தனித்தனிக் கட்சிகளை உருவாக்க உதவியதேயொழியச் சாதி ஒடுக்குமுறைக்கெதிரான பொதுவான போராட்ட அணியை உருவாக்கத் தவறிவிட்டது. அது மட்டுமன்றி, இன்றைய தலித்திய அரசியல், தலித்துகளினிடையி லிருந்து உருவான ஒரு புதிய மேட்டுக்குடிகளின் உயர்வர்க்க நலன்களைப் பேணத் தலித்துகளை வாக்கு வங்கிகளாகப் பயன் படுத்துகிற ஒரு போக்கையும் கொண்டுள்ளது. பாராளுமன்றத் தேர்தல் அரசியல், இந்துத்துவ மேட்டுக்குடிகளுடனான வர்க்க சமரசத்திற்கும் வழி செய்துள்ளதைக் கடந்த சில பத்தாண்டுகளிற் காண முடிகிறது. தொடர்ந்த பல போராட்டங்களின் மூலம் தலித்துகளின் சமூக உணர்வு நிலை வளர்ந்திருந்தாலும் சாதிய வர்க்க சுரண்டற் சமூக அமைப்பைத் தகர்க்கிற நோக்கில் அதை நெறிப்படுத்த இயலாத விதமாகவே தலித்தியச் சிந்தனை பயன்பட்டுள்ளது.
இதனால் இயலாமல் மறந்து போனவை என்ன என்ற கேள்வி எழுகிறது. வர்க்க அடையாளம் என்பது திட்டமிட்டுப் புறக் கணிக்கப்பட்டு வந்ததை நாம் கவனித்தால் அதற்கான விடை கிடைக்கும். வர்க்க அடையாளம் வெறுமனே புறக்கணிக்கப் படவில்லை. அதை வலியுறுத்துவது தலித் அடையாளத்தை மறுப்பதாகும் என்றும் தலித் ஒற்றுமையைக் குலைக்கும் என்றும் பின்நவீனத்துவத்தின் துணையோடு தமிழகத்தின் தலித்திய வாதிகள் வற்புறுத்தியதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.
தமிழ் தேசிய அரசியலோ தலித்திய அரசியலோ தம்மை தனிமை படுத்தியதன் மூலம் ஒற்றுமையை ஓரங்கட்டி தம்மைப் பலவீனப்படுத்திக்கொண்டனரே ஒழியப் பலப் படுத்திக்கொள்ளவில்லை.
வர்க்க அடையாளம், வர்க்க சமுதாயத்தில் அடிப்படையானது. சமுதாய வளச்சிப் போக்கில் வர்க்கங்களின் தன்மையும் அமைப்பும் மாறியே வந்தாலும், உழைப்போர், உழைப்பை உறிஞ்சுவோர் என்ற பிளவு மேலும் ஆழப்பட்டு வந்துள்ளதே ஒழிய இல்லாதொழியவில்லை. எனவே அந்த முரண்பாட்டைப் புறக்கணித்து எந்தவிதமான சமூக அநீதியையும் போரிட்டு வெல்ல இயலாது.
ஆனால், குறிப்பிட்ட சூழல்களில் இனம், மொழி, மதம் போன்ற முரண்பாடுகள் மேலோங்கலாம். சாதி, பிரதேச அடிப்படையிலான முரண்பாடுகள் அவசரமான நடவடிக்கைகளை வேண்டி நிற்கலாம். பாலின அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகட்கு எதிரான செயற்பாடு முக்கியமானதாகலாம். இவற்றுள் எந்தவொரு முரண்பாடும் பிறவற்றைவிடச் சமூக முக்கியமுடையதாகவும் அதனைக் கையாளாமல் பிற முரண்பாடுகளைக் கையாள இயலாதபடியும் அமையுமானால் அந்த முரண்பாட்டைப் பிரதான முரண்பாடாகவோ உடனடியான முரண்பாடாகவோ கொண்டு செயற்பட வேண்டிய தேவை ஏற்படுகிறது.
வர்க்க முரண்பாட்டை அடிப்படையானதாகக் கொண்ட மார்க்சிய லெனினியர்கள் உலகெங்கிலும் தேசிய விடுதலைப் போராட்டங்களையும் நிறவெறி இனவெறி எதிர்ப்புப் போராட்டங்களையும் தேசிய இனங்களின் விடுதலைக்கான போராட்டங்களையும் சாதியத்திற்கு எதிரான போராட்டங்களையும் முன்னெடுத் துள்ளனர். அல்லது அவற்றுக்கு ஆதரவு வழங்கியுள்ளனர். பெண் பாலியல் ரீதியான ஒடுக்குமுறைக்குகெதிராக மார்க்சியர்களது குரல் எப்போதுமே வலுவானதாக இருந்து வந்துள்ளது.
இது எவ்வாறு இயலுமாகிறது? தேசியவாதிகளோ, தலித்திய வாதிகளோ, முதலாளியப் பெண்ணியவாதிகளோ ஏன் தம்முடைய குறிப்பான ஒடுக்குமுறை தவிர்த்த பிற ஒடுக்குமுறை களைக் கண்டு கொள்ள மறுக்கிறார்கள்? ஏன் சிலவற்றை ஏற்கிறார்கள்?
இங்கேதான் அடையாளம் சார்ந்த பின்புல நோக்கின் முக்கியத்துவம் புலனாகிறது. பின்நவீனத்துவத்தின் பேரால் ஒன்றுபடல் ஏன் மறுக்கப்படுகிறது என்பது புலனாகிறது.
தனியே ஒரு அடையாளம் சார்ந்தே சமூக முரண்பாடுகளைப் பார்ப்பது அந்த அடையாளத்திற்கு உட்பட்ட அனைவரதும் நலன் சார்ந்ததல்ல என்பதையே இன, மத, சாதி அடையாளங்களின் அரசியலும் முதலாளியப் பெண்ணிய அரசியலும் உணர்த்தியுள்ளன.
அடையாளங்களைத் தனித்தனியாகவோ சேர்த்தோ வலியுறுத்துகிற சக்திகள் அந்த அடையாளங்கட்கும் அப்பாலான வேறு அடையாளம் ஒன்றை மனதிற் கொண்டே அவ்வாறு வலியுறுத்தக் கூடும் என்பதை நாம் மறக்கலாகாது. அதாவது, இறுதியில் வர்க்க நலன்கள் முதன்மைப்படுத்தப்படுகின்றன என்பதுதான் உண்மை. அவ்வர்க்க நலன்கள் பெருமளவும் ஒடுக்கும் வர்க்கம் ஒன்றினது நலன்களாக இருந்து வந்துள்ளதையும் நாம் காணுகிறோம். ●
தொழிலாளி வர்க்க அரசியல் தனியே தொழிலாளர் நலனை மட்டும் முதன்மைப்படுத்திப் பிற சமூக ஒடுக்குமுறைகளைப் புறக்கணிக்கும் என்றால் அது தொழிற்சங்கவாத அரசியலில் சீரழிய நேரும். மார்க்சியம் தொழிலாள வர்க்கத்தை முக்கியப் படுத்தியது ஏன்னெனில் வளர்ச்சியுற்ற மேனிலையிலானவர்கள் என்பதானால், அதனால் மட்டுமே முழுச் சமூகத்தையும் விடுவிக்க இயலும் என்ற அடிப்படையிலேயாகும்.
எனவேதான், மாக்சியம் தனது வளர்ச்சிப் போக்கில் காலனிய விரோத, ஏகாதிபத்திய விரோதப் போராட்டங்களை ஆதரித்தது. மார்க்சியர்கள் அவற்றில் பங்காற்றியுள்ளனர். தலைமை தாங்கிப் போராடியும் உள்ளனர்.
அடையாள அரசியல் ஒரு குறிப்பிட்ட சமூக அடையாள நலன்கட்குத் தன்னை வரையறுக்கும்போது தன்னைத் தனிமைப் படுத்துகிறது. அந்த அடையாளத்துக்குரியோர் ஒடுக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் உட்படுவதற்கான அடிப்படை முரண்பாடுகளை அது ஆராயும்போது, அதன் அணுகுமுறை வேறுபட்டதாக அமைகிறது. அதன் போராட்டம் இந்த சுரண்டல் அமைப்பு முறையை கட்டிக் காக்க அதனோடு இணைகிறது.
மார்க்சிய லெனினியத்தின் சிறப்பு என்னவென்றால், அடையாள அரசியலை அதன் அடையாளச் சிறையினின்று விடுவித்து ஒடுக்கும் வர்க்கம்தான் தனது பிரதான எதிரி அதனை வெற்றிக் கொள்ள பிற போராட்டங்களுடன் இணைப்பதோடு மார்க்சிய லெனினியமே மக்களின் விடுதலைக்கான தத்துவம் அவை மட்டுமே எல்லா ஒடுக்குமுறையிலிருந்தும் வைடுவிக்கும்.
தோழர்கள் தங்களின் மேலான கருத்துகளை தெரிவிக்கலாம்
தொடரும்
சி.பி. 11/01/21