மேல்மட்ட அமைப்பு என்றல் என்ன ?
ஒரு மாடிக் கட்டிடம் எவ்வாறு நிற்கிறது. புயல், காற்று, மழைக் காலம் மட்டுமல்ல, பூமி அதிரும் போதும் பெரும்பாலும் விழுந்து விடாது நிலைக்கிறது. காரணம் அதன் அத்திவாரம், அடிததளம் அல்லது அடிப்படை அமைப்பு என்றும் கூறலாம்,
இந்த அடித்தளத்தின் உறுதியிலேயே மேற்கட்டுமான அல்லது மேல் மட்ட அமைப்பான வீடு நிலையாக நிற்கிறது.
இந்த உவமானத்தை வைத்து மார்க்ஸ் சமூக அமைப்புப் பற் றிய ஒரு பெரிய உண்மையை விளக்கியுள்ளார்.
சமூக அமைப்பை இறுதியாகத் தீர்மானிப்பது அதன் அடித்தள மாகிய பொருளாதாரம்; அதாவது சமுதாயத்தின் உற்பத்திச் சக்தி களும் (யந்திரம் எண்ணெய், மின், நிலம், நீர், பிறகருவிகள் உற்பத்தி உறவுகளுமாகும் (மனித உழைப்பு). இவையே சமூகத்தின் அடித்தளமாகும்.
இந்த அடித்தளம் மேல்மட்ட அமைப்பாக அரசியல் சட்டம் சார்ந்தவைகளையும், கருத்தியல்களையும் தீர்க்கமாக ஏற்படுத்திக் கொள்கிறது. இம் மேல்மட்ட அமைப்பை இரு மட்டங்களாகப் பிரித்துப்
(1) அரசியல் – சட்டம் சார்ந்தவை:- அரசும் சட்ட விதிகளும். வன்மையானவை.
(2) கருத்தியல்கள்:- கல்வி, மதம், ஒழுக்கங்கள், கலை இலக் கியம் முதலியன. இவை வன்முறையற்றவை.
இந்த அரசியல் – சட்டங்கள், கருத்தியல்கள் அடித்தளமாகிய பொருளாதாரத்தின் மேல் தாக்கம் ஏற்படுத்துவதில்லை என்று கூறி விட முடியாது. மார்க்சியக் கோட்பாட்டின்படி அடித்தளத்திற்கும் மேல்மட்ட அமைப்புக்குமிடையில் தன்னியக்க உறவு உண்டு (Relative Autonomy) அல்லது அடித்தளத்தின்மேல் மேல்மட்ட அமைப்பு மீள் தாக்கம் (Reciprocal action) ஏற்படுத்துகிறது என்று விரித்து விளக்கப்படுகிறது.