அகிலத்தில் கற்பனையான பிளவுகள் என்ற தலைப்பில் மார்க்ஸ்-எங்கெல்ஸ்
அகிலத்தில் கற்பனையான பிளவுகள் என்ற தலைப்பில் மார்க்ஸ்-எங்கெல்ஸ்

அகிலத்தில் கற்பனையான பிளவுகள் என்ற தலைப்பில் மார்க்ஸ்-எங்கெல்ஸ்

1870-ல் பிரான்ஸ், பிரஷ்யா மீது போர் தொடுத்த போது அந்த ஆக்கிரமிப்புப் போரை எதிர்த்து அகிலத்தின் கிளைகள் ஆர்ப்பாட்டம் நடத்தின. குறிப்பாக பிரான்சில் உள்ள தொழிலாளர் அமைப்புகள் தமது சொந்த அரசை எதிர்த்தனர்.

போரில் பிரான்ஸ் சரணடைந்து பிஸ்மார்க் தலைமையிலான ஜெர்மனி பிரான்சை ஆக்கிரமிக்கும் நோக்கில் போரைத் தொடர்ந்த போது அதை ஜெர்மன் தொழிலாளர் வர்க்கம் எதிர்த்து நின்றது. பல ஜெர்மானிய தொழிலாளர் தலைவர்கள் தேசத் துரோக குற்றம் சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.

பிரான்சின் முதலாளித்துவ அரசியல்வாதிகள் பாரிசை கைவிட்டு, ஜெர்மனியிடம் சரணடைய ஓடி விட்ட நிலையில் பாரிஸ் தொழிலாளர்கள், எதிரி நாட்டு ஆக்கிரமிப்புப் படைகளிடம் சரணடைய மறுத்து, பாரிசில் கம்யூன் அரசை நிறுவினர். அது மார்ச் 18, 1871 முதல் மே 28, 1871 வரை 72 நாட்களுக்கு நீடித்தது. இறுதியில் முதலாளித்துவ வர்க்க அரசியல்வாதிகள் ஆக்கிரமிப்பு நாடான ஜெர்மனியுடன் சேர்ந்து கொண்டு துரோகத்தனமாகவும் கோழைத்தனமாகவும் கம்யூனை வீழ்த்தினர். ஆயிரக்கணக்கான தொழிலாளர்களையும், பெண்களையும் படுகொலை செய்தனர்.

முதலாளி வர்க்கப் பத்திரிகைகளோ பாரிஸ் கம்யூனைப் பற்றி அவதூறுகளை கட்டவிழ்த்து விட்டன. பாரிஸ் கம்யூன் தொடர்பான உண்மை விபரங்களை ஐரோப்பிய தொழிலாளி வர்க்கத்துக்கு தெரிவிக்கும் பணியை அகிலம் செய்தது. “பிரான்சில் உள்நாட்டுப் போர்” என்ற தலைப்பில் மார்க்ஸ் அகிலத்தின் பொதுக்குழுவில் ஆற்றிய உரைகள் தொகுக்கப்பட்டு அறிக்கையாக வெளியிடப்பட்டன.

கடுமையான அடக்குமுறைகள், தொழிலாளர் இயக்கங்கள் மீது அவதூறு பிரச்சாரம் இவற்றுக்கு மத்தியில் அகிலத்தின் காங்கிரஸ் லண்டனில் 1871-ம் ஆண்டு செப்டம்பர் 17 முதல் 23-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்வது சாத்தியமற்றுப் போனது. ஆனாலும் அடக்குமுறைகளுக்கு மத்தியிலும் அகிலத்தின் செயல்பாடு தொடரும் என்று ஆளும் அரசுகளுக்கும் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் காட்டும் விதமாக வெளிப்படையாக நடக்கும் காங்கிரசுக்குப் பதிலாக ஒரு மூடிய கூட்டம் கூட்டப்பட்டு அடுத்த கூட்டம் பற்றிய திட்டமும் வெளியிடப்பட்டது.

இந்நிலையில்தான் அகிலத்தின் ஒற்றுமைக்கும், செயல்பாட்டுக்கும் ஒரு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டது.

அகிலம் தோன்றிய காலம் முதலாகவே, ரசியாவைச் சேர்ந்த மிக்கயில் பக்கூனின் என்பவரின் தலைமையில் என்ற அனைத்து விதமான அதிகாரங்களையும் மறுக்கும் கற்பனாவாத திட்டத்தை பின்பற்றுபவர்கள் அகிலத்துக்குள் தமது செல்வாக்கை நிலைநாட்ட முயற்சித்து வந்தனர். அவர்களது சித்தாந்தம் அரச மறுப்பு வாதம் (anarchism – அராஜகவாதம்). அதாவது, அனைத்து நாட்டு முதலாளிகளும் அவர்களது அரசுகளும் ஒன்றாக சேர்ந்து தொழிலாளி வர்க்கத்தை ஒடுக்கி வரும் நிலையில் தொழிலாளி வர்க்கம் எந்த விதமான வலுவான, மையப்படுத்தப்பட்ட அமைப்பும் இல்லாமல் குறுங் குழுக்களாக இயங்க வேண்டும் என்று அவர்கள் வாதிட்டனர். இது பல்வேறு நாட்டு தொழிலாளர் சங்கங்களின் செயல்பாடுகளை ஒருங்கிணைத்து தொழிலாளி வர்க்க வலிமையை உருவாக்கும் அகிலத்தின் செயல்பாடுகளை சீர்குலைத்து சர்வதேச தொழிலாளர்களின் ஒருமித்த செயல்பாடுகளை ஒழித்துக் கட்டுவதாக இருந்தது.

தொழிலாளி வர்க்கத்தின் சோசலிச கோட்பாடுகளை மறுக்கும் கொள்கைகளைக் கொண்ட வெவ்வேறு அமைப்புகள் மூலம் அகிலத்துக்குள் நுழைவதற்கான முயற்சிகளில் பக்கூனின் ஈடுபட்டு வந்தார். பல முயற்சிகளுக்குப் பிறகு தமது உண்மையான நோக்கங்களை வெளிப்படுத்தும் விதிகளை நீக்கிக் கொண்டு அவரது “சோசலிச ஜனநாயகத்தின் சர்வதேசக் கூட்டணி” அகிலத்துடன் தன்னை இணைத்துக் கொண்டது. ஸ்விட்சர்லாந்திலுள்ள கிளைகளின் தலைமையை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டது. பத்திரிகைகளில் தொடர்ந்து அகிலத்துக்கும், பல்வேறு தொழிலாளர் சங்கங்களுக்கும் எதிராக எழுதுவதில் கூட்டணியின் உறுப்பினர்கள் எழுதினார்கள்.
பாரிஸ் கம்யூன் போராட்டங்களின் போது லியோன் நகரில் பக்கூனினும் அவரது துணைவர்களான அல்பேர் ரிஷார், காஸ்பார் பிளாங் ஆகியோரும் அங்கு அகிலத்தை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு தொழிலாளர்களின் எதிர்ப்புப் போராட்டத்தை ஒழித்துக் கட்டினார்கள்.

“சோசலிச ஜனநாயகத்தின் சர்வதேசக் கூட்டணி” அகிலத்துக்கு இணையாக ஒரு தனியான தலைமைக் குழு, ஒவ்வொரு பகுதியிலும் கிளைகள் என்று செயல்பட முயற்சித்தது.

சர்வதேச ரீதியில் ஒரே ஒரு சங்கம்தான் இருக்க வேண்டும். அதாவது இந்திய அளவில் ஒரே ஒரு கம்யூனிஸ்ட் அமைப்புதான் இருக்க வேண்டும், இருக்க முடியும். தனித்தனி மாநிலங்களின், தனித்தனி தேசிய இனங்களின், பகுதிகளின், தொழில் துறைகளின் தேவைகளுக்காக தனித்தனி கட்சிகளும், சங்கங்களும் இருந்தாலும் அகில இந்திய அளவில் ஒரே ஒரு அமைப்புதான் இருக்க முடியும்.

“சர்வதேசத் தொழிலாளர் சங்கத்துக்கு உள்ளேயும் வெளியிலும் செயலாற்றுகின்ற இரண்டாவது அமைப்பு இருப்பதானது அகிலத்தைக் கலைத்து விடுவதற்கு உறுதியான வழி” என்கிறது மார்க்ஸ் தயாரித்த இந்த அறிக்கை.
அகில இந்திய அளவில் புரட்சி என்று சொல்லிக் கொண்டு ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிகள் இருப்பது ஒன்றையொன்று கலைத்து விடுவதற்கான உறுதியான வழியாகவே உள்ளது. கட்சி முழுமையாக கலைக்கப்படா விட்டாலும், தொடர்ந்து பலவீனமடைந்து செல்வதற்கான அடிப்படையாக உள்ளது. இதை 1960-களுக்குப் பிந்தைய 50 ஆண்டு நடைமுறை நிரூபித்துக் காட்டியிருக்கிறது.

இவ்வாறு ஒன்றுபட்ட மத்திய அமைப்புக்குள் தம்மை இணைத்துக் கொள்ளாமல் தனித்தனியாக செயல்படும் குறுங்குழுவாத அமைப்புகளைப் பற்றி மார்க்ஸ் சொல்வது என்ன?

“முதலாளி வர்க்கத்துக்கு எதிராக தொழிலாளி வர்க்கத்தின் போராட்டத்தின் முதல் கட்டம் குறுங்குழுவாத இயக்கத்தால் அடையாளப்படுத்தப்படுகிறது. தொழிலாளி வர்க்கம் ஒரு வர்க்கம் என்ற முறையில் செயல்படுவதற்கு போதுமான அளவு வளர்ச்சியடையாத காலத்தில் அது தர்க்கரீதியானதுதான்.”

அந்தக் கட்டத்தில் என்ன நடக்கிறது.

“குறிப்பிட்ட சில சிந்தனையாளர்கள் நிலவும் சமூக பகைமைகளை விமர்சிக்கின்றனர். அவற்றுக்கு சில ஆரவாரமான தீர்வுகளை முன் வைக்கிறார்கள். அந்தத் தீர்வுகளை அவற்றை ஏற்றுக் கொண்டு, பிரச்சாரம் செய்து, நடைமுறையில் செயல்படுத்துவது தொழிலாளர் திரளிடம் விடப்படுகிறது. [அதாவது சிந்தனையாளர்கள் நடைமுறையில் இருக்க மாட்டார்கள்].

இந்த சிந்தனையாளர்களால் உருவாக்கப்படும் குறுங்குழுக்கள் இயல்பாகவே நடைமுறையிலிருந்து விலகி நிற்பவையாக உள்ளன. அனைத்து விதமான உண்மையான செயல்பாடுகள், அரசியல், வேலை நிறுத்தங்கள், கூட்டணிகள் என சுருக்கமாகச் சொல்லப் போனால் எந்த ஒரு ஒன்றுபட்ட இயக்கத்திலிருந்தும் அன்னியப்பட்டு நிற்கின்றன.

பெருந்திரளான தொழிலாளர்கள் திரள் அவர்களின் பிரச்சாரத்தை அலட்சியப்படுத்தவோ, சில நேரம் விரோதமாக பார்க்கவோ செய்தனர்.”

இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி 1960-களுக்குப் பிறகு உடைந்து சிதறிய பிறகு, இது போன்ற சிந்தனையாளர்கள் ஒருவர் அல்லது ஒரு சிலரின் தலைமையில் குறுங்குழுக்கள் புதிது புதிதாக முளைத்திருக்கின்றன. அன்றாடம் முளைத்து வருகின்றன.

“இந்தக் குறுங்குழுக்கள் ஆரம்பத்தில் இயக்கத்தின் உந்துசக்திகளாக செயல்படுகின்றன. ஆனால், தொழிலாளர் இயக்கம் அவற்றை மீறி வளர்ச்சி அடைந்த பிறகு அவை தடையாக மாறி விடுகின்றன; பிற்போக்கு சக்திகளாக மாறி விடுகின்றன”

ஒரு சர்வதேச அல்லது நாடு தழுவிய கம்யூனிச கூட்டமைப்பு “நிறுவப்பட வேண்டுமென்றால் தொழிலாளி வர்க்கம் இந்தக் கட்டத்தை கடந்து வர வேண்டியது அவசியமே”.

“சோதிடமும் இரசவாதமும் விஞ்ஞானத்தின் குழந்தைப் பருவமாக இருப்பதைப் போல இதுவும் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் குழந்தைப் பருவம்”.

அகிலம் எப்படி இருந்தது? குறுங்குழுக்களுக்கு மாற்றாக அனைத்துக் குழுக்களையும் இணைக்க வல்ல அகில இந்திய அமைப்பு எப்படி இருக்க வேண்டும்?

பகுதி 1 பகுதி 3

அகிலத்தில் கற்பனையான பிளவுகள் என்ற தலைப்பில் மார்க்ஸ்-எங்கெல்ஸ் எழுதிய கட்டுரை – மார்க்ஸ் – எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் – தொகுதி 7 (பக்கம் 134 – கடைசி கட்டுரை)

ஆங்கில தொகுதி நூல்களில் (Marx & Engels Collected Works Volume 23 – Fictitious Splits in the International – Page 79)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *